கோயில்கள்

பாவச் சுமைகளை நீக்கும் மயிலாடுதுறை திருக்கோயில்கள் (பகுதி 2)

கடம்பூர் விஜயன்

மயிலாடுதுறை வட்டம், மூவலூர் சிவன்கோயில்

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ளது மூவலூர். வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சகன் எனும் மூன்று அசுரர்களும் மூன்று பறக்கும் கோட்டையாக மாறி தேவர்களை அழிக்க முற்பட, இறைவன் அந்த முப்புரங்களையும் இத்தலத்தில்தான் எரித்ததாகக் கூறப்படுகிறது. தேவர்கள் தங்களால்தான் முப்புரங்களும் அழிக்கப்பட்டன என செருக்குடன் அலைய, பிரம்மா, திருமால் இருவரை தவிர அனைவரையும் சிவன் தன் அக்னியால் எரிக்க, இருரைத் தவிர மற்றெல்லாம் சாம்பலாக இருவரும் வருத்தமடைந்து இறைவனை வேண்ட, இறைவனும் ருத்ர வடிவில் வந்து லிங்க வடிவில் இருக்கும் தன்னை எவ்வாறு வழிபடுவது என லிங்கத்தை பிரதிஷ்டை செய்து எவ்வாறு லிங்க வழிபாடு செய்ய வேண்டும் எனக் கற்றுக் கொடுத்ததால், இவர் மார்க்கசகாயர் (வழி காட்டும் வள்ளல்) என அழைக்கப்பட்டார்.

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம். அதனை அடுத்து உயர்ந்த கொடிமரமும், நான்கு திக்கை நோக்கு நாள் வேத நந்தியும் மையத்தில் பலிபீடமும் உள்ளது. அதற்கு அடுத்து இறைவனை நோக்கி அதிகார நந்தி உள்ளது. கோயிலின் முகப்பு பெரிய அரண்மனையை நினைவூட்டும்விதமாய் உயர்ந்த வாயில் கொண்ட மண்டபமும், எட்டு பட்டை கொண்ட கூம்பு வடிவ விதானமும் அழகுடையது. அடுத்து பல தூண்கள் கொண்ட மகாமண்டபம், அதில் சப்த மாதர், சப்த நாகர், மகா கணபதி ஆகியோரும், மங்களநாயகி எனும் அம்பிகையும் உள்ளனர். முகப்பு மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பிகை திருக்கோயில் உள்ளது.

முதல் பிராகாரத்தில் கோட்டத்தில் நந்தி மீது ஆரோகணித்து மேதா தட்சிணாமூர்த்தியாக அருள்புரியும் தலம். தட்சிணாமூர்த்தியின் திருவடிக்குக் கீழ் யானை முகம், மான், சிம்மம், ரிஷபம் முதலியவையும் முயலகன், சனகாதியர் நால்வர் ஆகியோருடன் சேர்ந்திருப்பது புதுமையாக உள்ளது. மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மன், துர்க்கை, பிப்பலர், சந்திரசேனர், வீரசேனர், காரியசேனர், கார்கோடகன் ஆகியோர் உள்ளனர்.

மேற்கு திருமாளிகை பத்தியில் இரண்டு விநாயகர்கள் உள்ளனர். அடுத்து அண்ணாமலையார், உண்ணாமுலையாள், கழுமரம், விஸ்வநாதர், விசாலாட்சி, சொக்கர், அர்த்தநாரி, பிரமலிங்கம், விழணுலிங்கம், கஜலெட்சுமி, சடையப்பர், தட்சிணாமூர்த்தி ஆகியோரும், முருகன் சன்னதி, மகாலட்சுமி சன்னதி ஆகியவையும் உள்ளன.

பொன்னி நதியில் நீராடி மூவரால் பூஜிக்கப்பட்டதால் மூவலூர். மகிஷனை வதம் செய்த துர்க்கை அகோர உருவம் பெற்றதால், இங்கே துர்க்கை வழிபட்டு அழகிய உருவம் பெற்றார். சந்திரன் வழிபட்டு இஷ்ட சித்தி அடைந்த தலம்.

பிப்பிலமுனியின் சரும நோய் நீங்கிய தலம். உபமன்யு நீராடி வழிபட்டது. சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்த கர்மசேனனுக்கு கண் பார்வையும் போனது. இறைவன் மேல் பக்தி தோன்றியது. உணவுக்கு வழியின்றி பசியால் வாடியபோது, அந்தணர் தோன்றி கட்டமுது உண்ணச் சொல்ல, மூவலூர் சென்று தரிசித்த பின்பே உணவு உண்பேன் என்றவரை, முதலில் அமுது உண்க, பிறகு தாமே அங்கு அழைத்துச் செல்வதாக உறுதிகூறி அழைத்துச்செல்லும் வழியில், சந்திரசேனர், வீரசேனர், காரியசேனர் ஆகியோர் மூவலூர் செல்ல விருப்பம் தெரிவிக்க, அனைவருக்கும் வழிகாட்டியாக மூவலூர் அழைத்து வந்தார் அந்தணர். கோவில் வந்ததும் மறைந்தார் அந்தணர். கர்மசேனருக்கு கண் பார்வை நன்றாக தெரிந்தது. அந்தணர், மீண்டும் காட்சி தர நின்னைக் கண்ட கண்கள் பிறவற்றைக் காணா எனக் கூற, நால்வருக்கும் முக்தி அருளி லிங்கத்தினுள் மறைந்தார்.

ராஜ கோபுர வாயிலில் விநாயகர் சிற்றாலயமும், முருகன் சிற்றாலயமும் உள்ளது. திருவாடுதுறை ஆதின முதல்வர் குருநமசிவாயர் அவதரித்த தலம்.

இக்கோயிலில் 15-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜேந்திரன், பாண்டியன் ஸ்ரீவல்லபன், வீரவிழுப்பதரய உடையார், அச்சுதராயர் ஆகியோர் திருப்பணி செய்துள்ளனர். இவ்வூரை ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு திருமூவலூர் என்று கல்வெட்டுக் குறிக்கிறது. சேவப்ப நாயக்கர் பதின்மூன்று வேலி நிலம் அளித்து கோயில் பராமரிப்புக்காகவும், மடம் அமைத்து உணவளிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளார். பட்டசேதிராயன் என்பார் கோயிலை பழுது பார்க்க நிலம் அளித்த தகவலும் உள்ளது.

பிரதான சாலை ஓரத்திலேயே பல சிறப்புகள் கொண்ட இக்கோயில் உள்ளதால், அனைவரும் வந்து இறைவனை வணங்கிச் செல்ல முடியும்.

*
மயிலாடுதுறை வட்டம், சோழம்பேட்டை அழகியநாதர் கோயில்

மயிலாடுதுறை-கல்லணை சாலையில் நான்காவது கி.மீட்டரில் உள்ளது சோழம்பேட்டை. இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன.

1. தான்தோன்றீஸ்வரர்;
2. அழகியநாதர்.

பிரதான சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஆனந்தகுடி சாலையில் சென்று முதல் இடது திருப்பத்தில் திரும்பி சிறிது தொலைவு சென்று பின் வலது தெருவில் திரும்பினால் அழகியநாதர் திருக்கோயிலை அடையலாம்.

கிழக்கு நோக்கிய கோயில், முழுமையும் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளதால், காலப்போக்கில் மிகவும் சிதிலம் அடைந்துள்ளது. அறுநூறு ஆண்டுகள் பழமையான கோயில். புருஷாமிருகம் வழிபட்டு பேறுபெற்ற தலம். மயிலாடுதுறையின் துலாகட்ட முழுக்கில் கலந்துகொள்ளும் மூர்த்திகளில், இந்த அழகியனாதரும் ஒருவர். ஆதலால், சப்தஸ்தான தலங்களில் ஒன்று.

முகப்பில் கோபுரமோ சுதை வாயிலோ காணப்படவில்லை, உள்ளே நுழையும் நம்மை சிறு மாடத்தில் இருந்தவாறு வரவேற்கிறார் கொடிமர விநாயகர். கொடிமரமில்லை. நந்தி சிறிய மண்டபத்தில் இருந்தவாறு இறைவனை மூச்சுக்காற்றில் தாலாட்டியபடி இருக்கிறார். உள்ளே இறைவன் அழகியநாதர் கிழக்கு நோக்கியபடி நடுத்தர அளவிலான லிங்க வடிவில் அழகாக உள்ளார். மகாமண்டபமாக ஒரு கூம்பு வடிவ மண்டபம். உள்ளது. இடைநாழியாக சிறு மண்டபம் முன்காலத்தில் உற்சவர்கள் வைக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இறைவனின் தென்புறம் உள்ள மண்டபம் இடிந்துள்ளது. பிராகாரத்தில் விநாயகர், முருகன் இருவருக்கும் சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. இறைவனின் இடப்புறம் அம்பிகை தர்மசம்வர்த்தினி கிழக்கு நோக்கி உள்ளார். அருகில் சண்டேசர் சன்னதி உள்ளது.

வடகிழக்கில் அபூர்வ காட்சியாக, தெற்கு நோக்கிய பைரவர் தனி சிற்றாலயத்தில் இருந்து அருள் பாலிப்பதை கண்டு வணங்கலாம். தெற்கு நோக்கிய பைரவர் நமக்கு துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் நொடிப்பொழுதில் நீக்க வல்லவர். அவசியம் இத்தலம் சென்று பைரவரையும் வணங்கி வருவீர்.

மேற்கு நோக்கிய மண்டபத்தில் இரண்டு நாகர் சிலைகளும், சனி பகவானும் உள்ளனர். அடுத்து ஆளுயரத்தில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சூரியனும், பாலமுருகனும், இரு சம்பந்தர் சிலைகளும் உள்ளன. இதனால் சம்பந்தர் பாடிய வைப்புத் தலமாக இது இருக்கலாம்.

மிகச் சிறந்த இக்கோயில் குடமுழுக்கு கண்டு இருபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன என அங்குள்ள சுவர் எழுத்துகள் சொல்கின்றன. மாயூரத்துக்கு வருவோர் இந்த சோழம்பேட்டை இறைவனை கண்டு வணங்கத் தவறாதீர்கள்.
*
மயிலாடுதுறை வட்டம், பெருஞ்சேரி சிவன் கோயில்

மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் எட்டு கி.மீட்டர் தூரத்தில் பெருஞ்சேரி உள்ளது. இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன. மேலும் ரிஷி கோயில் எனும் பெயரில் ஒரு புத்தர் கோயிலும் உள்ளது.

அவற்றில் 48,000 மகரிஷிகள் தவம்செய்து பேறுபெற்ற தாருகாவனம் என்னும் தலம்தான் இன்றைய பெருஞ்சேரி.

ரிஷிகள் எல்லாம் தவம் செய்வதற்கு ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்ய பிரம்மாவை அணுகினர். பிரம்மா தர்ப்பையினால் ஒரு வளையம் செய்து, "இது பூமியில் எங்கு போய் விழுகின்றதோ அவ்விடத்தில் தவம் செய்யலாம்'' என்றுரைத்தார். அந்த தர்ப்பை வளையமானது, தாருகாவனத்தில் விழுந்தது. அதன்படி இவ்விடத்தில் தவம் செய்தனர்.

கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பிலானை
பெரும் பொருள் கிளவியானை பெருந்தவமுனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதாம் நினைந்தவாறே
என்கிறார் அப்பர் சுவாமிகள்.

மக்கள் கூட்டம் அதிகமாக வசிக்கும் இடத்தை சேரி என்பர். நாற்பத்தெண்ணாயிரம் முனிவர்கள் யாகம் செய்து, தவம் செய்ததால் பெரியசேரி - பெருஞ்சேரி என்று பெயர் பெற்றது. (பாடலில் பெருந்தவ முனிவர் என்பது 48,000 முனிவர்களைக் குறிப்பிடுவதாகும்).

சந்திரன், தாரை, சரஸ்வதி, தத்தசோழன் வழிபட்டு பேறுபெற்ற தலம் ஆகும். மேலும் குரு விசேஷ தலம் ஆகும்.

உமாதேவி மயில் வடிவில் சிவனை வழிபட்ட தலம் இது. இங்குள்ள சிவகுருவே நான்கு திக்கிலும் நான்கு வள்ளல்களாக அருள்பாலிக்கிறார். வடக்கே வள்ளலார் கோவிலில் கைகாட்டும் வள்ளலாகவும்; கிழக்கே விளநகரில் துறை காட்டும் வள்ளலாகவும்; தெற்கே பெருஞ்சேரியில் வாக்கு நல்கிய வள்ளலாகவும்; மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளலாகவும் திகழ்கிறார்.

வாக் என்ற சொல் பிரகஸ்பதியை குறிக்கும். அதனால் பிரகஸ்பதி வழிபட்ட ஈஸ்வரர் என்பதால் வாக்-ஈஸ்வரர் என ஒரு பொருளும் கொள்ளலாம்.

வியாழன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்து, தான் ஞானம் பெற வேண்டும்; மனம் சாந்தி பெற வேண்டும்; தேவர்களுக்கெல்லாம் குருவாகும் பேறு பெற வேண்டும்' என வரம் கேட்டார்.

இறைவனும் மனமிரங்கி, மயிலாடுதுறைக்கு தென்பால் தாருகாவனத்தில் லிங்கம் நிறுவி வழிபாடு செய். அங்கு வந்து அருள் செய்வேன் என்று வாக்கருளினார். அதன்படி வியாழன் தாருகாவனமான பெருஞ்சேரிக்கு வந்து ஞானதீர்த்தம் அமைத்து சுவாமி, அம்பாளை பிரதிஷ்டை செய்து, பல ஆண்டுகள் தவமிருந்து சிவவழிபாடு மேற்கொண்டு, முடிவில் பஞ்சாக்னி ஹோமம் செய்தார். மார்கழி மாதம், பூச நட்சத்திரம், வியாழக்கிழமை ஆகிய மூன்றும் இணைந்த நன்னாளில், வியாழனை தேவர்களுக்கெல்லாம் குருவாக ஈசன் இத்தலத்தில் நியமித்தார்.

பெருஞ்சேரியில் வியாழன் தவமிருந்து மெய்ஞ்ஞானம் பெற்றதாலும், இறைவனின் வாக்கு பெற்றதாலும் இத்தலத்து இறைவன் வாக்கு நல்கிய வள்ளல் - வாகீஸ்வரர் என பெயர் பெற்றார். வியாழன் தேவகுருவாக பதவி பெற்ற தலம் என்பதால் சிறந்த குரு பரிகாரத் தலமாக இது விளங்குகிறது.

மருமகனான சிவனை அழைக்காமல் அவமானப்படுத்தி, மற்ற தேவர்களையெல்லாம் அழைத்து யாகம் செய்தான் தட்சன். நியாயம் கேட்கச் சென்ற மகளையும் அவமதித்தான்.

கோபம் கொண்ட சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தார்; வீரபத்திரர் தோன்றினார். தட்சனிடம் சென்ற வீரபத்திரர், "வேள்விக்குத் தலைவனாகிய எங்கள் சிவபெருமானுக்குரிய அவிர்பாகத்தைக் கொடு. வீணாக அழியாதே'' என்று சொல்லியும் தட்சன் உடன்படவில்லை. சிவபெருமானை மேலும் இகழ்ந்தான்.

உக்கிரமூர்த்தியான வீரபத்திரருக்கு சினம் பொங்கியது. யாகத்தை அழிக்கத் தொடங்கிவிட்டார். தேவர்கள் ஓட ஆரம்பித்தனர். சந்திரனை காலால் தேய்த்தார். சூரியனின் பல்லை உடைத்தார். அக்னியின் கையை முறித்தார். "அவி உண்டாக்கிய நாக்கினைக் காட்டு’’ என்று கூறி, அவனது ஏழு நாக்குகளையும் அறுத்தெறிந்தார். எமனையும் பிடித்து தலையை அறுத்தெறிந்தார். குயில் வடிவம் எடுத்தோடிய இந்திரனின் சிறகுகளை சின்னாபின்னமாக்கினார். அஞ்சி ஓடிய நிருதியை நில் எனச் சொல்லி, தண்டினால் அடிகொடுத்தார். மழுவினால் வாயுதேவனை தண்டித்தார். முத்தலை சூலத்தால் மோதி குபேரனை தண்டித்தார். இப்படி பலரையும் தண்டித்து வீரபத்திரர் யாகத்தைச் சிதைத்துக்கொண்டிருந்தபோது, பிரம்மதேவன் தனது மனைவி சரஸ்வதியுடன் அகப்பட்டுக்கொண்டார்.

பிரம்மனின் தலையில் இடி விழுந்ததுபோல் குட்டினார். பிரம்மன் பூமியில் விழுந்தார். அருகே நின்ற சரஸ்வதியின் மூக்கினை அறுத்தார். இறுதியாக தன் வாளினால் தட்சன் தலையை அறுத்தார். அது கீழே விழாதபடி தாங்கி அக்னியில் இட்டார். பிரம்மனின் சொல்படி சரஸ்வதி பெருஞ்சேரி வந்து பல ஆண்டுகள் தவமிருந்து வாகீஸ்வர சுவாமியை வழிபட்டாள். சிவபெருமான் சரஸ்வதி முன் தோன்றி, "வேண்டும் வரம் கேள்'' என்றார். "எனது அங்கக்குறை நீங்க வேண்டும். எல்லாருடைய நாவிலும் வாக்கு விருத்தியளிக்கும் பேறை எனக்குத் தந்தருள வேண்டும்'' என்று சரஸ்வதி வேண்ட, அப்படியே இறைவன் அருள் புரிந்தார். சரஸ்வதி இழந்த மூக்கைப் பெற்றாள். வாக்குவன்மை அளிக்கும் பேறையும் பெற்றாள். இப்படி கல்விக்கு அரசியான சரஸ்வதி தேவிக்கு அருள்புரிந்தவர்தான் பெருஞ்சேரி வாகீஸ்வரர்.

எண்ணூறு ஆண்டுகள் பழைமையான இவ்வாலயம், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது, கிழக்கு நோக்கிய திருக்கோயில், சுதைகளுடன் கூடிய நுழைவாயில் உள்ளது. அடுத்து கொடிமரமும், கீழே கொடிமர விநாயகரும் கொடிமரத்தின் முன்னால் நந்தியும் உள்ளது.

அடுத்து மூன்று நிலை ராஜகோபுரமும் அதன் முகப்பில் பதினாறுகால் மண்டபமும் உள்ளன. இந்த மண்டபத்தினை முகப்பாக கொண்டு அம்பிகை சன்னதி உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார்.

லிங்கத்தின் ஆவுடையார் சதுர வடிவில் அமைந்திருப்பதும், விமானம் வட்ட வடிவில் அமைந்திருப்பதும், கருவறை அரைவட்ட வடிவிலும் உள்ளது. கருவரை சுவற்றில் வியாழ பகவான் இறைவனை வணங்குவதும், அவர் அருகில் சோழ மன்னன் ஒருவரும் அவரது மனைவியும் வணங்குவது போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

உள்பிராகாரத்தில் சரஸ்வதி தேவி, சிவபெருமானை பூஜை செய்யும் சிற்பமும் மிக அற்புதமாக அமைந்துள்ளது. கிழக்குப் பிராகாரத்தில் நான்கு யுகங்களைக் குறிக்கும் நான்கு பைரவர் திருமேனிகள் உள்ளன. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பலம் வேண்டுவோர், திருமணத் தடை, புத்திர தோஷம் நீங்க விழைவோர், வம்ச விருத்தி, பதவி உயர்வு வேண்டுவோர் வழிபட வேண்டிய உன்னத தலங்களில் ஒன்று பெருஞ்சேரி.

"ஆசை நிறைவேறணும்னா பூசத்திலே வழிபாடு செய்’’ என்ற பொன்மொழிக்கேற்ப, ஜாதகம் இல்லாதவர்கள்கூட பூச நட்சத்திர நாளில் இங்குள்ள சிவகுருவாம் ஆதிகுருவை வழிபட்டால் அனைத்து காரியங்களும் காலதாமதமாகாமல் நடந்து தடையின்றி வெற்றிகிட்டும். இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட இத்தலம் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் வழங்க காத்திருக்கிறது.

*

மயிலாடுதுறை வட்டம், விளநகர் சிவன் கோயில்

மயிலாடுதுறை - திருக்கடையூர் சாலையில் ஏழு கி.மீ. தூரத்தில் உள்ளது ஆறுபாதி எனப்படும் திருவிளநகர். விளநகர் என்பது ஊரின் பெயர், ஆறுபாதி என்பது கோயில் பெயர். விளநகரின் ஆறில் ஒரு பாகம் என்பதால் ஆறுபாதி எனப்படுகிறது.

விளாமரங்கள் அடர்ந்த பகுதியாதலால் விளநகர். இவ்வூருக்கு கபித்தபுரம் என பெயர் உண்டு கபித்தம் என்றால் விளா. இறைவனுக்கு உசிரவனேஸ்வரர் என பெயர். உசிரம் என்றால் விழல், அதனால் விழல் நகர் விளநகர் ஆனது

ஒருநாள், அருள்வித்தன் என்ற அந்த அந்தணர் மலர்களைச் சேகரித்துக்கொண்டு காவிரி ஆற்றில் இறங்கி வந்துகொண்டிருந்தபோது, அவனுடைய சிவபக்தியை உலகத்தவருக்கு உணர்த்திடத் திருவுள்ளம் கொண்ட சிவனார், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார். வெள்ளம் படிப்படியாக உயர்ந்து, அவன் கழுத்தைத் தொட்டபடி ஓட, அப்போதும் அவன் தன் கையில் இருந்த மலர்க் குடலையைக் கையில் இருந்து நழுவவிட்டுவிடாமல் இறுகப் பிடித்துக்கொண்டு, விளநகர் இறைவனை பிரார்த்திக்க, இறைவன் கரையேற வேண்டிய துறையின் வழியை உணர்த்தி அருள்புரிந்தார். அதன் காரணமாகவே இத்தலத்து இறைவனுக்குத் துறைகாட்டும் வள்ளல் என்ற பெயர் ஏற்பட்டது.

திருஞானசம்பந்தப் பிள்ளையார் செம்பள்ளி தரிசனம் முடித்து விளநகர் கோயிலுக்குச் செல்லும்போது, காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக் கண்ட ஞானசம்பந்தப் பெருமான், 'ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தைக் கடந்து கரையேற ஒரு துறையினைக் காட்டுவோர் எவரேனும் உளரோ?’ என்று மனதில் நினைத்த வேளையில், வேடன் ஒருவன் அவரைத் தாம் அழைத்துச் செல்வதாகக் கூறி ஆற்றில் இறங்க, வெள்ளம் ஞானசம்பந்தப் பெருமானின் பாதத்தின் அளவாகக் குறைந்துவிட்டது. காவிரியின் தென்கரை சேர்ந்த சம்பந்தப் பெருமான், தனக்குத் துறை காட்டிய வேடனைத் திரும்பிப் பார்க்க, அங்கே வேடனைக் காணவில்லை. அந்த விளநகர் இறைவனே வேடனாக வந்து தமக்குத் துறை காட்டி அருளியவர் என்று தெளிந்த சம்பந்தர், இறைவனை போற்றி பாடி மகிழ்ந்த தலமே இது.

கபித்தன் என்ற அசுரன் இந்தத் தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டு, தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றான் என்ற வரலாறும் உள்ளது.

இந்தக் கோயிலில் அருளும் இறைவனின் பெயர் துறைகாட்டும் வள்ளல். அம்பிகையின் பெயர் வேய்த்தோளி அம்மை என்பதாகும். இந்தக் கோயிலின் தலவிருட்சம் விழல் ஆகும்.

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம். அதனை கடந்தால் வலதுபுறம் ஆஸ்தான மண்டபம் உள்ளது. அதனை அடுத்து பலிபீடம், நந்தி மண்டபமும் உள்ளது, மகாமண்டப வாயிலில் இருபுறமும் விநாயகர் சிலைகள் உள்ளன. இறைவன் அழகாக வரமளிக்கும் வள்ளலாக அழகாக காட்சி தருகிறார். அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார். கருவறை விமானம் துவிதள விமானமாக உள்ளது, சுதை சிற்பங்கள் பல புராணக் கதைகளை சொல்லியபடி இருக்கின்றன. கருவரை கோட்டத்தில் தென்முகன், விஷ்ணு, பிரம்மன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசர் தனி சிற்றாலயத்தில் உள்ளார். அருகில் விழல் செடிகள் நிரம்பிய தொட்டி உள்ளது.

கோயிலில் இரு பிராகாரங்கள் உள்ளன, இரண்டாம் பிராகாரத்தில் சன்னதிகள் இல்லை, முதல் பிராகாரத்தில் மேற்கில் விநாயகர், பனிரெண்டு கைகள் கொண்ட முருகனும் உள்ளார். அடுத்து அருணாசலேஸ்வரர், விநாயகர், நால்வர், இரு லிங்க பாணங்கள் உள்ளன. மஹாலட்சுமி தனி சன்னதியில் உள்ளார். வடகிழக்கில் இரு பைரவர்களும், சனி பகவானும் உள்ளனர். நவகிரகத்தில் சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் பார்த்தபடி உள்ளது காண்பதற்கு அரிதாக உள்ளது.

கல்வெட்டுகள் மூன்று உள்ளன. உத்தம சோழன் மனைவி உத்தம சுரபியாள், நெறியுடை சோழபேராற்றின் கரையில் நிலமளித்த தகவல் உள்ளது. அச்சுதப்ப நாயக்கர் நிலம் அளித்த கல்வெட்டு தகவலும் உள்ளது.

*

மயிலாடுதுறை - மயூரநாதர் திருக்கோயில்

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு நிகராகக் கருதப்படுகின்றன. அவை: திருமயிலாடுதுறை, திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருவாஞ்சியம், திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, தென் மயிலை, மாயவரம், மாயூரம் என்று அழைக்கப்படும் இத்திருத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும்.

ஸ்காந்தம் சிவரகசியம், துலாகாவேரி மகாத்மியதிலும், ஸ்ரீ சிதம்பர புராணம் முதலிய தலபுராணங்கள் இத்தலத்தினை போற்றி புகழ்ந்துள்ளன. மேலும் வடமொழியில் ஸ்ரீ மாயூர புராணமும், ஸ்ரீ ரிஷபதீர்த்த மகாத்மியம் போன்ற புராணங்களும் அவற்றின் மொழிபெயர்ப்பான ஆதியப்பர் இயற்றிய புராணமும், ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட புராணமும், ஸ்ரீ அபயாம்பிகை பிள்ளைத்தமிழும் இத் தலத்திற்கு பெருமை சேர்க்கின்றன.

தட்சன் மகளாக பிறந்து தாட்சாயினி என்ற பெயர் பெற்றதனை வெறுத்து அதனை நீக்கிக்கொள்ள நினைத்து, மயில் வடிவம் கொண்டு பூசித்த அம்பிகைக்கு ஆண் மயிலாக ஆடி அருளி காட்சியளித்து பின்பு தாண்டவமாடி அனுகிரகம் செய்தமையால் கெளரி மாயூரநாதர் எனவும், கெளரி தாண்டவேசுரர் எனவும் இறைவனின் திருநாமங்கள் விளங்கும்.

கஸ்திய தீர்த்தம், அனவித்யாசரஸ், ரிஷப தீர்த்தம், கணேச தீர்த்தம், காசியப தீர்த்தம், இந்திர தீர்த்தம், திக்பாலகர் தீர்த்தங்கள், பிரம்ம தீர்த்தம் என 86 தீர்த்தங்கள் இருந்தன. ரிஷப தீர்த்தத்தில் ஐப்பசி மாதத்தில் அமாவாசை பகல் பதினைந்து நாழிகையில் கங்கை வந்து கலப்பது நிதர்சனம்.

தல தரிசனம் காண வந்திருந்த திருஞானசம்பந்த பெருமானுக்கு காவிரி வெள்ளத்தினை வடியச் செய்து துறையை காட்டியதால் விளநகர் இறைவன் “துறை காட்டிய வள்ளல்” எனவும், விரும்பிய நல்வாக்கினை பெறவேண்டி தவம் செய்த வியாழ பகவானுக்கு தாருகாவனத்தில் (பெருஞ்சேரி) அருள் செய்ததால் “வாக்கு நல்கிய வள்ளல்” எனவும், லிங்க வழிபாடு செய்யும் வழி அறியாமல் தவித்த தேவாதி தேவர்களுக்கு வழி காட்டியதால் “வழிகாட்டிய வள்ளல்” எனவும், சிவஞானத்தினை விரும்பி தவம் செய்த ரிஷப தேவர்க்கு மோன முத்திரை காட்டி தட்சணாமூர்த்தியாக அருள் செய்தமையால் “கை காடும் வள்ளல்’ என வள்ளலார் கோயிலிலும், மயூரநாதரே வீற்றிருந்து அருள் செய்கின்றார்.

மாயூரநாதர் - அபயாம்பிகை திருக்கோவிலில் நான்கு பக்கம் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற 3 பக்கம் மொட்டை கோபுரங்களும் வீதி உட்பட ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது. கிழக்கில் அமைந்துள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளையும், உட்கோபுரம் மூன்று நிலைகளையும் கொண்டுள்ளது. 9 நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி 156 அடி உயரத்தில் விண்ணை முட்டும் வகையில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

ராஜகோபுரத்தின் உட்புறம் முனீஸ்வரர் சன்னதி உள்ளது. கருங்கல் தூண்களின் மேல் பரப்பு பலவகையான சிற்பங்களை கொண்டுள்ளது. குறிப்பாக, பெண்கள் வில் பயிற்சி செய்தல், சோழர் காலத்தில் பெண்களும் போர் பயிற்சி பெற்றதனை காணலாம். கஜசம்ஹாரர், அம்பிகை மயிலாக வந்து வழிபடுதல் என பல சிற்பங்கள் உள்ளன. நந்தி தேவர் தனது துணைவி சுயம்பிரபாவுடன் கோபுர உட்கோட்டத்தில் உள்ளார்.

ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால் இடதுபுறம் திருக்குளம், வலதுபுறம் குமரக்கட்டளை அலுவலகம் உள்ளது. கருவறை கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்துக்கு அருகில், ஜுரதேவர் உள்ளார். இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தி உள்ளார். துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு நவகண்டம் தரும் வீரர்கள் உள்ளனர்.

இத்தலத்தில் பெரிய சிலையாக சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். பிராகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டைநாதரும் உள்ளனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு உள்ளார்.

நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியருக்கு இறைவன் முக்தி கொடுத்ததன் காரணமாக, அவர்களுக்கு அம்பாள் சந்நிதியின் தெற்கே தனி சன்னிதி உள்ளது. தம்பதியரை லிங்கத்தில் ஐக்கியமாக்கி முக்தி வழங்கிய இறைவன், "இத்தலத்தில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடிந்த பின்பு உங்களையும் வழிபட்டால் மட்டுமே என்னை வழிபட்ட பலன் கிடைக்கும்" என்ற வரத்தையும் சிவபெருமான் அருளினார். லிங்கத்தில் ஐக்கியமான பெண் அடியாரான அனவித்யாம்பிகையை கௌரவிக்கும் விதத்தில் லிங்கத்தின் மீது புடவை சாத்தப்படுகிறது.

இந்த சன்னதி எதிரில் உள்ள மண்டபத்தில் கீழ்புறம் தரையில் ஒரு துளை உள்ளது, வடக்கில் ஓடும் காவிரியில் நீர் எந்த மட்டத்தில் உள்ளதோ அந்த மட்டம் இந்த துளையிலும் நீர் காணப்படும்.

இத்திருக்கோவிலின் ஈசான திசையில் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் எழுந்தருளி இருக்கிறார். உட்பிராகாரத்தில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், யம லிங்கம், வருண லிங்கம், சகஸ்ர லிங்கம், பிரம்ம லிங்கம், ஆகாச லிங்கம் மற்றும் சந்திரன், இந்திரன், சூரியன், ஸ்ரீ மகாவிஷ்ணு, பைரவ மூர்த்தி ஆகியவர்களால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கங்களும், சிவலிங்க திருமேனியுடன் விளங்கும் நாதசர்மா, ஸ்ரீ அனவித்யாம்பிகை என 16 சிவலிங்கங்கள் சுற்றி இருக்கும் வகையில் வள்ளல் ஸ்ரீ மாயூரநாதர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். அம்பாள் சன்னிதி தனியாக உள்ளது.

அம்பிகை மயில் வடிவில் ஈசனை வழிபட்ட இரண்டு தலங்கள் திருமயிலாப்பூர், திருமயிலாடுதுறை ஆகும். திருமயிலாடுதுறை மாயூரநாதர் - அபயாம்பிகை திருக்கோவிலில் அம்பிகை மயில் வடிவிலும், இறைவன் சுயம்புமூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார். சிவாலயங்களில் கந்த சஷ்டியின்போது, முருகன் அம்பாளிடம்தான் வேல் வாங்குவது வழக்கம். ஆனால், இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குவது விசேஷமாக கருதப்படுகிறது.

நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். தினமும் மாலையில் நடராஜருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது.

கோவிலின் முதற்சுற்றுப் பிராகாரத்தில் வடகிழக்கு திசையில் ஆதி மயூரநாதர் - மயிலம்மன் சன்னதி அமைந்துள்ளது. ஆதி மயூரநாதர் கிழக்கு நோக்கியும், தெற்கு நோக்கி மயில் வடிவில் அம்பிகையும் காட்சி தருகின்றனர். இந்த சன்னதியின் பின்புறம் உள்ள மா மரத்தின் கீழ் பெரிய பிள்ளயார் உள்ளார்.

இத்தலத்தின் தனிச்சிறப்பு ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா நீராடல் மற்றும் கார்த்திகை முதல்நாளின் முடவன் முழுக்கு ஆகும். இந்த நாட்களில் காவிரியில் மூழ்கி எழுந்தால், பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாயூரநாதர் - அபயாம்பிகை திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குரியது.

இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழனின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்துக்குப் பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்தக் கோயில் சோழர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்குகிறது.

கி.பி. 1907, 1911-ம் ஆண்டு இந்தியத் தொல்லியல் ஆய்வறிக்கை மூலம் மன்னர்கள் காலத்து 17 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. பராந்தகச் சோழன் (10-ம் நூற்றாண்டு), இரண்டாம் ராஜாதி ராஜன் (கி.பி. 1177), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1201), ராஜராஜ தேவன் (கி.பி. 1228), மூன்றாம் ராஜராஜன் (கி.பி.1245), ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், விஜயநகர மன்னர்கள் என பல்வேறு மன்னர்களும் இந்த திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்துள்ளனர்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், இத்தலத்தைப் பற்றி கீர்த்தனைகள் புனைந்துள்ளார். இத்தலத்து இறைவி மீது, கிருஷ்ணசாமி ஐயர், அபயாம்பிகை சதகம் இயற்றியுள்ளார்.

*

மயூரநாதரை வழிபட்டு பேறுகள் பெற்ற சப்த மாதர்கள் தனித்தனியே போசித்து தவம் செய்த தலங்கள் ஏழும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. அவை:
1. பிராமி பூசித்த தான்தோன்றீஸ்வரர் – சோழம்பேட்டை
2. மாகேஸ்வரி பூசித்த கருணாம்பெட்டை
3. கௌமாரி பூசித்த ஆனந்த தாண்டவபுரம்
4. வைஷ்ணவி பூசித்த பசுபதீஸ்வரம்
5. வராகி பூசித்த கழுக்காணி முட்டம்
6. இந்திராணி பூசித்த தருமபுரம்
7. சாமுண்டி பூசித்த வள்ளலார்கோயில்

காவேரிக் கரையில் நடைபெற்ற ஐப்பசி மாத துலா உற்சவப் படங்கள் -

அபயாம்பிகை சதகம் - பாடியவர் மயிலாடுதுறை சிவக்குமார்

தேவாரம் - கரூர் சுவாமிநாதன் மற்றும் சிவக்குமார்

தேவாரம் - கரூர் சுவாமிநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா

ஊரக பகுதிகளில் மூன்று நாட்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

SCROLL FOR NEXT