முகப்பு
கோயில்கள்

சென்னை, சென்னையை சுற்றி அமைந்துள்ள பரிகாரத்தலங்கள்!

சென்னை மற்றும் சென்னையை சுற்றி அமைந்துள்ள முக்கிய பரிகாரத்தலங்களின் விவரங்கள்

Updated On : 23 ஆகஸ்ட், 2024 at 7:09 AM
கோயில்களில் வழிபாடு - கோப்புப்படம்
பகிர்:

சென்னை மற்றும் சென்னையை சுற்றிலும் பழம்பெரும் கோயில்கள் ஏராளமாக அமைந்துள்ளன. அவற்றில் பல பரிகாரத் தலங்களாகவும் அமைந்துள்ளன.

பொதுவாக பரிகாரத் தலங்கள் என்றாலே பல்வேறு மாவட்டங்களில் அமைந்திருக்கும் கோயில்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், வெளி மாநில மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள பரிகாரக் கோயில்களுக்கு இணையாக சென்னையிலும் புகழ்பெற்ற பல கோயில்கள் அமைந்துள்ளன.

அவற்றில் சிலவற்றைப் பற்றி அறியலாம்.

திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் வடாரண்யேஸ்வரர் கோயில், திருவாலங்காடு

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் நடராஜப் பெருமானுக்கு நடைபெற்ற திருநீறு அபிஷேகம். 

பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 15-வது தலமாக விளங்கும் திருவாலங்காடு, திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் ஒரு தலமாக சிறப்புடன் விளங்குகிறது.

இறைவன் பெயர்: வடாரண்யேஸ்வரர், ஊர்த்துவதாண்டவர்
இறைவி பெயர்: வண்டார் குழலம்மை

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டு, திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் ஒன்று என மொத்தம் 4 பதிகங்கள் உள்ளன.

ஆலயத்தில் மாந்தீஸ்வரருக்கு சிறப்புப் பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜைகள் செய்வதன் மூலம், அஷ்டம சனி (8-ல் சனி), அர்த்தாஷ்டம சனி (4-ல் சனி) ஜன்ம சனி ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். ஒருவரின் ஜாதகத்தில் 1, 2, 4, 8, 12 ஆகிய இடங்களில் மாந்தி இருந்தால் அது தோஷமாகக் கருதப்படுகிறது.

அத்தகைய தோஷம், இங்கு மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜை செய்வதால் நீங்கும். மேலும், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமும் நடைபெறும். கடன் தொல்லை நீங்கி நிம்மதி ஏற்படும். கோயிலைப் பற்றிய முழு விவரங்கள் அறிய..

திருமண பரிகாரத் தலம் வேதபுரீஸ்வரர் கோவில், திருவேற்காடு

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 22-வது தலமாக திருவேற்காடு விளங்குகிறது. இத்தலத்தில் அகத்திய முனிவர் இறைவனை வழிபட்டு சிவபெருமானின் திருமண திருக்கோலத்தைக் கண்டதால், இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனைத் தலமாக கருதப்படுகிறது.

இறைவன் பெயர்: வேதபுரீஸ்வரர், வேற்காட்டீசர்
     இறைவி பெயர்: பாலாம்பிகை, வேற்கண்ணி அம்மை
     இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

இத்தலத்தில் அகத்திய முனிவர் வழிபட்டு, சிவபெருமானின் திருமண திருக்கோலத்தைக் கண்டதால், இத்தலம் ஒரு திருமண தடை நீங்கும் தலமாக விளங்குகிறது. இத்தல இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம் செய்து மனமுருக வேண்டிக்கொண்டால், திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் தடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இத்தலம் நவக்கிரக தோஷம் தீக்கும் தலமாகவும் உள்ளது.

வேதபுரீஸ்வரர் கோயில் பற்றிய முழுமையான விவரங்களுக்கு..

வேலை வாய்ப்பு பெற - திருமணத் தடை அகல ஆட்சீஸ்வரர் சுவாமி கோவில், அச்சிறுபாக்கம்

பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 28-வது தலமாக அச்சிறுபாக்கம் விளங்குகிறது.

இறைவன் பெயர்: ஆட்சீஸ்வரர், உமையாட்சீஸ்வரர்

இறைவி பெயர்: இளங்கிளி அம்மை, உமையாம்பிகை

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

கருவறைக்குள் உமையாட்சீஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் காட்சி தருகிறார். லிங்க உருவின் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியருக்கு தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்று. ஆகையால், இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனைத் தலமாக கருதப்படுகிறது. அருகில் தெற்கு நோக்கிய உமையாம்பிகை திருஉருவச் சிலையும் உள்ளது.

ஆட்சீஸ்வரர் சுவாமி கோவில் பற்றி முழு விவரங்கள்

திருமணத் தடை, குரு தோஷம் போக்கும் வலிதாயநாதர் கோவில், திருவலிதாயம்

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 20-வது தலமாக இருப்பது திருவலிதாயம். தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் திருவலிதாயம் என்ற பெயருடன் விளங்கிய இத்தலம் இன்றைய நாளில் சென்னை நகரின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ளது.

இறைவன் பெயர்: வலிதாயநாதர், வல்லீஸ்வரர்

இறைவி பெயர்: ஜகதாம்பாள், தாயம்மை

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.


இத்தல இறைவனை வழிபடுவதால் துன்பங்களோ நோய்களோ வந்தடையாது என்றும் வினை அல்லல் துயர் ஆகியன வந்தடையாது என்றும, வினைகள் தீரும், நலங்கள் உண்டாகும் என்றும், இத்தல இறைவன் திருவடிகளை வணங்கினால் வீடு பேறு அடையலாம் என்றும், திருவலிதாயத் தலத்தை நினைக்க மனத்துயர் கெடும் என்றும் பலவாறு இத்தல இறைவனின் பெருமைகளை பாடியுள்ளார்.

திருவலிதாயம் கோயிலின் சிறப்புகள் அறிய

அனைத்து நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய தலம் - ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர்

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 19-வது தலமாக இருப்பது திருவொற்றியூர். திருமணத் தடை நீங்க, புத்திர பாக்கியம் பெற 27 நட்சத்திரங்களின் பெயரில் இத்தலத்தில் அமைந்துள்ள சிலலிங்கங்களில் தங்கள் நட்சத்திரத்துக்கு உரிய சிவலிங்கத்தை வழிபாடு செய்வதன் மூலம் பலன் பெறலாம்.

இறைவன் பெயர்: ஆதிபுரீஸ்வரர், படம்பக்கநாதர், தியாகராஜர்


இறைவி பெயர்: வடிவுடைஅம்மன், திரிபுரசுந்தரி


ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் (பகுதி 1)

ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் (பகுதி 2)

சென்னை மற்றும் சென்னையை சுற்றிலும் ஏராளமான பரிகாரத் தலங்கள் நிறைந்துள்ளன. அவற்றில் சிறுவாபுரி முருகன் கோயில், பெரியப்பாளையம் பவானியம்மன் ஆலயம், திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் சிவன் கோயில் என பல அற்புதமான கோயில்கள் அமைந்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →