விவாதமேடை

"இன்றைய சூழலில் மாநிலத்தில் மீண்டும் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்படுவது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

கூடவே கூடாது
 இன்றைய சூழலில் மீண்டும் பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது. கரோனா தீநுண்மியின் உருமாற்றங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இதனை முடிவுக்குக் கொண்டுவருவது எளிதல்ல. இந்த நிலையில் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். வறுமையால் பல குடும்பங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும் நிலை உருவாகும். கடந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட இழப்புகளிலிருந்தே பலர் இன்னும் மீண்டு வராத நிலையில் மீண்டும் ஒரு பொதுமுடக்கம் கூடவே கூடாது.
 என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.
 தண்டனை
 மீண்டும் ஒரு பொதுமுடக்கம் என்பது, தனிமனித வாழ்வையும், மாநிலத்தின் பொருளாதார நிலையையும் சீர்குலைத்துவிடும். கடந்த பொதுமுடக்க காலத்தில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து, தொழில் நலிவடைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீண்டும் மேலே வருவதற்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பல குடும்பங்கள் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டன. மீண்டும் ஒரு பொதுமுடக்கத்தை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அரசு, பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக்கலாம். விதியை மீறுபவர்களை தண்டிக்கலாம். பொதுமுடக்கம் என்கிற தண்டனை மட்டும் வேண்டாம்.
 அமிர்தநேயன், உடுமலைப்பேட்டை.
 தற்காப்பு
 பொதுமுடக்கம் என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் அஞ்சுகிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு மக்கள் கடந்த பொதுமுடக்க காலங்களில் அல்லல்பட்டுவிட்டார்கள். மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு, சோதனைகளை விரைவுபடுத்துவதும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதிப்படுத்துவதும் அரசு செய்ய வேண்டிய அவசர, அவசியப் பணிகள். முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அரசு அறிவிக்க வேண்டும். தற்காப்பே தற்போதைய தீர்வு.
 அ. சிவராம சேது, திருமுதுகுன்றம்.
 ஆயுதம்
 இன்றைய சூழலில் பொதுமுடக்கம் என்கிற ஆயுதம் ஒன்றுதான் மக்களைக் கட்டுப்படுத்தும். இப்போதும் கிராமப்புற மக்களிடம் தீநுண்மியின் தீவிரம் குறித்த விழிப்புணர்வு இல்லை. நகர்ப்புற மக்களோ தீநுண்மியின் ஆபத்தை உணர்ந்தும் அலட்சியமாக நடந்துகொள்கின்றனர். மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருந்திருந்தால் பொதுமுடக்கத்திற்கு தேவை ஏற்பட்டிருக்காது. இப்போது நாளுக்குநாள் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் பொதுமுடக்கம் தவிர்க்க முடியாதது. இந்த சிரமத்தை மக்கள் ஏற்கத்தான் வேண்டும். அப்போதுதான் தமிழகம் நோய்த்தொற்றிலிருந்து விரைவில் மீளும்.
 கா. முருகபூபதி, ஆரணி.
 விழிப்புணர்வு
 ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அத்தகைய மோசமான நிலையிலிருந்து, மெல்ல மெல்ல தமிழகம் இப்போதுதான் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு பொதுமுடக்கத்தை மக்கள் தாங்க மாட்டார்கள். அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி, கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குதல் இவற்றின் மூலம் பொதுமுடக்கத்தை தவிர்க்கலாம். கடந்த கால கசப்பான அனுபவங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மக்களும் விழிப்புணர்வோடு செயல்பட்டால் பொதுமுடக்கம் தேவையில்லை.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 கேள்விக்குறி
 கடந்த இரு ஆண்டுகளாகவே பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. தினக்கூலி தொழிலாளிகளின் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டது. மீண்டும் பொதுமுடக்கம் என்பது அன்றாடம் வருவாய் ஈட்டும் அனைவரின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கிவிடும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை பணியாளர்கள் ஆகியோர் பொதுமுடக்கத்தால் வருமான இழப்பை சந்திப்பதில்லை. ஆனால், மற்றவர்கள் நிலை மிகவும் சிரமமானது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதையும் முகக்கவசம் அணிவதையும் அரசு கட்டாயமாக்கினால் போதும். பொதுமுடக்கம் தேவையில்லை.
 இரா. முத்துக்குமரன், தஞ்சாவூர்.
 வேறு வழியில்லை
 அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றாமல் அலட்சியப்படுத்தியதன் விளைவுதான் இன்று மீண்டும் பொதுமுடக்கம் வந்துவிடுமோ என்று அஞ்சும் நிலை உருவாகியிருக்கிறது. மேலும், கரோனா தீநுண்மி தற்போது அதிகமாகப் பரவி வருவதால், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டுமானால், அதற்கு பொதுமுடக்கத்தைத் தவிர வேறு வழியில்லை. பொதுமுடக்கக் காலத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க நேர்வதால் நோய்த்தொற்றுப் பரவல் நிச்சயமாகக் கட்டுக்குள் வரும்.
 க. இளங்கோவன், நன்னிலம்.
 சரியான சான்று
 முந்தைய பொதுமுடக்கத்தின் விளைவாகவே லட்சக்கணக்கானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டுவிட்டனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதே அதற்கு சரியான சான்றாகும். மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, கல்வி நிலையங்கள் மூடப்பட்டால் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்க முடியாது. மேலும், பொதுமுடக்கம் ஒன்றுதான் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் என்று எண்ணுவதும் சரியல்ல. ஒவ்வொரு தனிமனிதனும் சுய கட்டுப்பாட்டோடு நடந்து கொள்வதுதான் இதற்கு சரியான தீர்வாகும்.
 கே. ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை.
 வேதனை
 நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு அறிவித்த நெறிமுறைகளை பெரும்பாலோர் பின்பற்றவில்லை என்பதே உண்மை. தற்போதும் முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி போன்றவற்றை பலரும் அலட்சியப்படுத்தி வருகின்றனர். நம் உயிரைக் காக்க நாமாக செய்ய வேண்டியதை அரசு கட்டாயப்படுத்தியும் செய்ய மறுப்பது வேதனையானது. கட்டுப்பாடான சுதந்திரத்தை அனுபவிக்க மக்கள் மறுக்கின்றனர். பொதுமுடக்கம் போன்ற கட்டாயக் கட்டுப்பாடுதான், அவர்களுக்கு நோய்த்தொற்றின் தாக்கத்தை, உணர வைக்கின்றது. நோய்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் தேவையே.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 கசப்பு மருந்து
 பொதுமுடக்கத்தால் அரசுக்கு பல துறைகளிலும் பாதிப்பு ஏற்படுவதோடு பொருளாதார ரீதியாகவும் பெரும் இழப்பு ஏற்படும். இருந்தும் அரசு பொதுமுடக்கம் அறிவித்தால் அது மக்களின் உயிரைக் காக்க வேண்டிய கடமையால்தான் என்பதை மக்கள் உணர வேண்டும். நோய்த்தொற்றுப் பரவலை தடுக்க பொதுமுடக்கமே அருமருந்து என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மக்கள் ஒத்துழைப்பும் இதற்கு அவசியம். எத்தனை சிரமம் வந்தாலும், நோய்த்தொற்றிலிருந்து முழுவதும் விடுபட பொதுமுடக்கம் என்ற கசப்பான மருந்தை நாம் சிலகாலத்திற்கு ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
 வே. வரதராஜன், மகாஜனம்பாக்கம்.
 தேவையில்லை
 இன்றைய சூழலில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட வேண்டும் என்று சிலர் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் இன்னும் அதிலிருந்து மீண்டு வரவில்லை. எனவே, இன்றைய சூழலில் மாநிலத்தில் பொதுமுடக்கம் கொண்டு வருவதைவிட, கட்டுப்பாடுகளை அதிகரிப்பதே சிறந்தது. தமிழகத்தில் பெரும்பாலோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு விட்டனர். முகக்கவசம் போன்ற தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுகின்றனர். எனவே, பொதுமுடக்கம் தேவையில்லை. மக்கள் கூட்டமாகக் கூடுவதைக் கட்டுப்படுத்தினாலே போதும். கரோனா கட்டுக்குள் வந்துவிடும்.
 எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
 காலத்தின் கட்டாயம்
 இன்றைய சூழலில் மாநிலத்தில் மீண்டும் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கரோனா தீநுண்மியின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் மிகவும் வேகமாகப் பரவிவருகிறது. அரசு அறிவிக்கும் கட்டுப்பாடுகள் நமது உயிரைக் காப்பதற்காகத்தான் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய சூழலில் மாநிலத்தில் பொதுமுடக்கம் அவசியம்தான். மக்கள் சில நாட்கள் சிரமத்தைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். அரசின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு மக்கள் எச்சரிக்கையாக இருந்தால் நோய்த்தொற்றுப் பரவலை முடிவுக்குக் கொண்டுவரலாம்.
 ச. கண்ணபிரான், திருநெல்வேலி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT