கண்டுகொள்வதில்லை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காவல் துறை மற்றும் பிற அரசு துறைகளின் மெத்தனமே காரணம் என்ற விமர்சனம் மிகவும் சரியானதே. காவல் துறைக்குத் தெரியாமல் எந்தத் தவறும் நடப்பதில்லை. சிலவற்றைக் கண்டு கொள்ளாமல் இருக்க வைக்கப்படுகிறார்கள். உயிரிழப்பு ஏற்பட்டதும் கள்ளச்சாராயம் விற்பவர்கள், தயாரிப்பவர்கள் என பல நூறு பேரை சில மணி நேரத்தில் கைது செய்ய முடியும்போது அவர்களை ஏன் முன்னதாகவே தடுத்து நிறுத்த முடியவில்லை? தனி மனிதன் திருந்தாத வரை தவறுகள் நடக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. தவறு செய்யாமல் இருப்போம். பிள்ளைகளையும் தவறு செய்யாத வண்ணம் தவறுகளைச் சுட்டிக்காட்டி வளர்ப்போம்.
ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
மக்களும் திருந்தவில்லை
கள்ளக்குறிச்சி மட்டுமல்ல பிற பகுதிகளிலும் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காவல் துறை மற்றும் பிற அரசுத் துறைகளின் மெத்தனமே காரணம் என்பது சரிதான். மெத்தனம் என்பதைவிட எதிர்பார்ப்புகளும் காரணம்தான். இத்தனை உயிரிழப்புகளுக்குப் பிறகு, நாடே பரபரப்பானபோது, கல்வராயன் மலையில் ஒரேயிடத்தில் மட்டும் 2,000 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டு
பிடிக்கப்பட்டு காவல் துறையால் அழிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது வேறு பின்னணிகளினால் ஏற்பட்ட மெத்தனம் என்பது ஊர்ஜிதமாகிறது. மறுபுறம், எத்தனையோ கள்ளச்சாராய மரணங்கள் குறித்துக் கேள்விப்பட்டும் கூட, மக்களும் திருந்தவில்லை.
பி.சுந்தரம், வெண்ணந்தூர்.
சரிவரக் கண்காணிக்கவில்லை
கிராமங்களில் கிராம நிர்வாக அதிகாரி முதல் உள்ளாட்சி வார்டு, தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மற்றும் காவல் நிலைய அதிகாரிகள் வரை பலரும் உள்ளனர். கிராமத்தில் நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு அவர்கள் அனைவரும் பொறுப்பு ஏற்காமல் பிறகு யார் பொறுப்பேற்பார்கள்? இவர்களுக்கு தெரியாமல் ஒரு விஷயம் நடக்கிறது என்றால் இவர்கள் தங்கள் பணியை சரிவரச் செய்யவில்லை என்றுதானே அர்த்தம். மேல் அதிகாரிகளும் சரிவரக் கண்காணிக்கவில்லை என்பதும் தெரிகிறது. கள்ளச்சாராய உயிர் இழப்பிற்கு காவல் துறை மற்றும் பிற அரசு துறைகளும் அடங்கிய கூட்டு மெத்தனமே காரணமாகும் என்பதே உண்மை.
கே.அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
பூரண மதுவிலக்கு
கள்ளச்சாராய விபரீதத்தின் வீரியத்தை உணராமல், தொடக்கத்தில் சாதாரண வயிற்றுப்போக்கு என மாவட்ட ஆட்சியர் சப்பைக்கட்டு கட்டியதால் மரண எண்ணிக்கை அதிகமானதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாகக் கள்ளச்சாராய மரணங்கள் நடந்து வந்துள்ளதை அறிந்தும் அரசு கண்மூடி மெüனமாக இருந்ததன் விளைவே இந்தப் பேரிழப்பு. இப்பகுதிகளில் கடந்த 20 வருடங் களாக கள்ளச்சாராய விற்பனை கனஜோராக நடந்து வந்துள்ளது. கள்ளச்சாராய வியாபாரி அனைத்து அரசியல்வாதிகளாலும் காப்பாற்றப்பட்டு வந்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. முழு மதுவிலக்கை அமல்படுத்தினால் வருங்கால சந்ததியினர் துயர வாழ்வு நீங்கி மனமகிழ்ச்சி கொள்ளலாம்.
எஸ்.சிறீகுமார், கல்பாக்கம்.
பலிகடாவைத் தேடுகிறார்கள்
கடந்த 2022, 2023-ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்து கொண்டிருக்கும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் மூலம் யாரும் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லையே? ஊடக வெளிச்சம் பெறுவதற்கு முன், முதல் மரணத்தின் செய்தி வெளியாகியும் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. உயிரிழப்புகள் அதிகமான பிறகுதான் உயர் அதிகாரிகள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் செல்வாக்கு பெற்றவர் கள்ளச்சாராயத் தொழில் செய்யும்போது யார் என்ன செய்ய முடியும்? பூனைக்கு யார் மணி கட்டுவது என்று தெரியாமல், பலிகடா யார் என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது.
ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
தலையாய கடமை
குற்றங்களைக் கவனிப்பதும், தடுப்பதும் காவல் துறையின் தலையாய கடமை. இத்தொழில் பெரிய அளவில் நடந்திருக்கும்போது, காவல் துறை எவ்வாறு இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது என்ற கேள்வி மக்களிடையே எழும்புகிறது. ஆனால் முழு தவறும் காவல் துறை மீது மட்டுமே இருப்பதாக சொல்லிவிட முடியாது. அரசு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்திருந்தாலும், கள்ளச்சாராயத்தால் உயிரிந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் உதவி வழங்கியது, மக்களின் வரிப்பணத்தை அரசு எவ்வாறு பயனற்ற முறையில் செலவிடுகிறது என்பதைக் காட்டுகிறது.
த. கவிதா தாமரைச்செல்வன், ஈரோடு.
விமர்சனம் சரியானதே
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காவல்துறை மற்றும் பிற அரசு துறைகளின் மெத்தனமே காரணம் என பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்வது சரிதானே. பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. அரசு நிர்வாகம் மற்றும் காவல் துறையின் நடவடிக்கை சரியாக இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம். அரசியல் தலையீடு இதில் இருப்பதாகத் தெரிகிறது. காவல் துறை முழு சுதந்திரத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். இனியேனும் காவல் துறையும் அரசின் பிற உரிய துறைகளும் விரைந்து செயல்பட்டு இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டியது அவசியம்.
மா.பழனி, கூத்தப்பாடி.
நடவடிக்கை எடுக்காதது ஏன்?
நீதிமன்றம், காவல் நிலையம் ஆகியவற்றுக்கு அருகிலேயே நகரின் மையத்தில் கள்ளச்சாராய விற்பனை நடந்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. கள்ளச்சாராய விபாபாரம் அரசுத் துறைகளுக்குத் தெரியாமமல் நடந்துள்ளது என்றால் நம்ப முடியவில்லை. ஏராளமான கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்குப் பிறகு, நிறைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டு, ஒருசிலர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதைக் காவல் துறை மற்றும் பிற அரசுத் துறைகள் ஏன் முன்னமே இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்னும் கேள்வி எழுப்புவது நியாயம்தானே. அவை மெத்தனமாக இருந்தன என எண்ணத் தோன்றுகிறது.
வளவ.துரையன், கடலூர்.
தற்காலிகத் தீர்வு
மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம், காவல் துறை கண்காணிப்பில் உள்ள அந்தப் பகுதி காவல் நிலையம், மதுவிலக்கு அமலாக்கத் துறை, அரசின் உளவுத் துறை உள்ளிட்டோருக்கு கள்ளக்குறிச்சி பகுதியில் நடைபெறும் கள்ளச்சாராயம் குறித்த விஷயம் எப்படி தெரியாமல் இருந்திருக்கும்? ஊரகப் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை அந்தந்தப் பகுதி அரசியல் தலைவர்களின் ஆசியோடும் காவல் துறை துணயோடும் அமோகமாக நடந்துகொண்டுதான் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த, அந்தந்த நேரத்தில் ஏற்படும் பாதிப்புக்களை முடிவுக்கு கொண்டுவர, எந்த அரசானாலும் தற்காலிகத் தீர்வையே கையாளுகின்றனது.
ரமிலா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.
கொடூரமான கொலைச் செயல்
கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவரையும் பதவி நீக்கம் செய்து, அவர்கள் மீது கொலைக் குற்றம் பதிவு செய்ய வேண்டும். அரசியல் சார்ந்த பிறர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஒரு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தால் கூட அறுபது பேர் இறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மிக மிக கொடூரமான கொலைச் செயல் இது. மன்னிக்க முடியாத குற்றம். தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஒன்றிணைந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனைக்கு குறைவில்லாத கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் தாமாக முன்வந்து வழக்கு எடுத்து விசாரணை செய்ய வேண்டும்.
எஸ்.பிரகாஷ், முத்தரசநல்லூர்.
மாற்றுக் கருத்தில்லை
கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்குக் காவல் துறை மற்றும் பிற அரசுத் துறைகளின் மெத்தனமே காரணம் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. கள்ளச் சாராய விற்பனை கள்ளக்குறிச்சியில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டதால் இப்போது இந்த ஊர் ஊடகங்களின் கண்ணுக்குத் தெரிகிறது. ஆக காவல் துறை நினைத்தால் கள்ளச்சாராய விற்பனை, போதைப் பொருள்கள் விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்தலாம். ஏராளமானோர் பலியாகிவிட்ட நிலையில், அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நூ. அப்துல் ஹாதி பாகவி, பட்டினப்பாக்கம்.
இனி மெத்தனம் கூடாது
உயிரிழப்புகள் அதிகமாக நிகழும்போதுதான் ஒரு பகுதியில் கள்ளச்சாராய புழக்கம் இருப்பது வெளி உலகிற்குத் தெரியவரும். ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த எல்லைக்குட்பட்ட காவல் துறைக்கும் இன்ன பிற துறை அலுவலர்களுக்கும் இவ்விஷயம் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அரசியல் செல்வாக்கு கொடிகட்டி பறக்கும் நபர்களே இப்பாதகச் செயல்களை அரங்கேற்றுகின்றனர். பிரச்னைகள் ஏற்படாதவரை, அவற்றைக் கண்டும் காணாமலேயே காவல் துறை செயல்படுகிறது என்பது ஊரறிந்த ரகசியம். இரும்புக் கரம் கொண்டு அவற்றைத் தடுக்க வேண்டிய அரசுத் துறைகள் முழுமூச்சில் செயற்படவில்லை என்பதே உண்மை.
வே. வரதராஜன், மகாஜனம்பாக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.