முகப்பு
விவாதமேடை

மதச்சார்பற்ற பொது சிவில் சட்டத்துக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்...

மதம் மற்றும் கடவுள் கொள்கைகளை அவரவர் வீட்டிற்குள் பின்பற்ற வேண்டும். வாழ்வியல் சார்ந்த சட்டங்கள் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 2:32 AM
பகிர்:

மதச்சார்பற்ற பொது சிவில் சட்டத்துக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் பேசியிருப்பது குறித்து... என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

அவசியம்

மதம் மற்றும் கடவுள் கொள்கைகளை அவரவர் வீட்டிற்குள் பின்பற்ற வேண்டும். வாழ்வியல் சார்ந்த சட்டங்கள் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். சிவில் சட்டங்கள் எல்லா மதத்தினருக்கும் பொதுவாக இருப்பதுதான் மதச்சார்பற்ற தன்மையாக இருக்கும். ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு விதமாக சட்டங்கள் இருப்பது மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது. கடவுள் கொள்கை, வழிபாட்டு முறைகளில் மதங்களைப் பின்பற்றுவற்கு எந்த தடையும் செய்ய இயலாது. ஆனால் சிவில் சட்டங்கள் பொதுவாக இருப்பதுதான் நாட்டுக்கு நன்மை. நம் மக்களிடையே பன்முகத்தன்மை இருந்தாலும் அனைவரையும் இணைக்கும் ஒரு நூல் இழையாக பொது சிவில் சட்டம் இருப்பது அவசியம்.

Advertisement

தி சேகர், பீர்க்கன்கரணை.

மதச்சார்பற்ற நாடு

நம் நாடு மதச்சார்பற்ற நாடு. மக்களை மதத்தின் பெயரால் பிரிக்கக் கூடாது என்று மனித நேயம் மிக்க தலைவர்கள் எல்லாம் சொல்கிறார்கள். ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒரு தனிநபர் சட்டம் என்று இருப்பது சரியில்லை. குற்ற வழக்குகளுக்குரிய சட்டங்கள் எல்லோருக்கும் ஒன்று போலவே இருப்பது போல உரிமையியல் சட்டங்களும் ஒன்று போலவே இருப்பது சரியானதுதான். மதத்தின் பெயரால் சலுகைகளைப் பெறுவதும், அச்சுறுத்துவதும், துன்புறுத்துவதும் அந்தந்த மதத்தின்படி குற்றங்கள் ஆகும். எனவே, ஜாதி, மத வேறுபாடுகளைப் பாராமல், சட்ட ரீதியாக எல்லோரையும் ஒன்று போல் பார்ப்பதைத் தவறு என்று சொல்ல முடியாது.

மு.சிதம்பர விஸ்வநாதன், ஆதம்பாக்கம்.

தேச ஒற்றுமைக்குத் தேவை

பாரதத்தில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், பெüத்த மதத்தினர் உள்ளிட்டோர் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொருவித தனிநபர் சட்டம் இருப்பின் எவ்விதம் ஒற்றுமை மற்றும் நீதி கிடைக்கும்? நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அனைவருக்கும் சம வாய்ப்பு, சம நீதி மற்றும் ஒரே சட்டம் அளிக்கப்பட வேண்டும். ""ஒரே பாரதம் உன்னத பாரதம்'' மற்றும் ""காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதம் ஒன்றே'' ஆகியவற்றை நிறைவேற்ற, எல்லோருக்கும் பொதுவானதும் நன்மை அளிக்கக் கூடிய சமய சார்பற்ற பொது சிவில் சட்டம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

கே.எ.நாராயணன், மருங்கூர்.

குழப்பத்தில் மூழ்கடிக்கும்

""மதச்சார்பற்ற பொது சிவில் சட்டத்துக்கு மாற வேண்டியது, காலத்தின் கட்டாயம்'' என பிரதமர் கூறியிருப்பது, நாட்டைக் குழப்பத்தில் மூழ்கடிக்கும். வங்கதேச அரசியல் தரும் பாடங்களை உணர்வோம். கோடிக்கணக்கில் வேலையில்லா இளைஞர்கள், தாய் நாட்டிலேயே கல்வி கற்க வசதியில்லாமல் அயல் நாடுகளுக்குச் செல்லும் நிலை உடனே தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள். மத்திய அரசை ஆதரிக்கும் 2 கட்சிகளும் இச்சட்டத்தை எதிர்க்கின்றன.

அரசியல் நிர்ணய சபையிலேயே இச்சட்டமாக்கும் முடிவு நிராகரிக்கப்பட்டது. 21-ஆவது சட்ட ஆணையமும் நிராகரித்துவிட்டது. வேற்றுமையில் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ்வதையே பாரத மாதா விரும்பும் நிலை.

தாமஸ் எட்மண்ட்ஸ், தாம்பரம்.

காலத்தின் கட்டாயமே

அரசியல் சாசன வழிகாட்டுதலும், உச்சநீதிமன்ற வலியுறுத்தல்களும் அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை நமக்கு அறிவுறுத்துகின்றன. ஒரு நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரே விதமான சட்டம் இருப்பதுதான் நல்ல ஜனநாயகத்திற்கு அடையாளம்? மதச்சார்பின்மை பேசும் கட்சிகள் எதற்காக "மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்கு' எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? வாக்குவங்கி அரசியல் தவிர வேறு இல்லை. மதச்சார்பான சிவில் சட்டத்தை ஆதரிப்பவர்கள் மத ரீதியான கிரிமினல் சட்டங்களை அமல்படுத்துவதை ஆதரிப்பார்களா? மதச்சார்பற்ற சிவில் சட்டம் காலத்தின் கட்டாயமே.

முகதி.சுபா, திருநெல்வேலி.

வரவேற்கலாம்

இந்தியாவில் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி சட்டங்கள் இருப்பதனால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்தியர் என்ற பார்வையில் ஒன்றுபட்டாலும், திருமணம், சொத்து, வாரிசு, மணமுறிவு என்பதில் ஏகப்பட்ட வேறுபாடுகள். சிக்கலான மதமாற்றங்கள், நில உரிமை போன்றவற்றில் சட்ட சிக்கலை ஏற்படுத்துகிறது. பொதுவான சிவில் சட்டம் இந்தியா முழுமைக்கும் உள்ள அனைத்து மதத்தினருக்கும், ஏற்புடையதாக இருக்க வேண்டும். அதை அனைவரும் ஒரு மனதாக ஏற்க வேண்டும். பிரதமரின் கனவு நமக்கு நன்மை பயக்கும் எனில் கண்டிப்பாக வரவேற்கலாம்.

ஜீவன். பி.கே., கும்பகோணம்.

கட்டாயத் தேவை

உலகின் பல்வேறு நாடுகள் மதச்சார்புடைய நாடாக இருக்கும்போது இந்தியா ஒரு மதச்சார்பற்ற, சுதந்திர நாடாக விளங்குவது சிறப்பு. அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்வது நம் உயரிய பண்பு. இந்திய நாடு சுதந்திரம் பெற்றது முதல் ஒவ்வொரு மதத்தினருக்கும் மத அடிப்படையிலும் சில சட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. மதச்சார்புடன் வகுக்கப்பட்டுள்ளன தனியார் விவகார சட்டப் பிரிவுகள் சமத்துவமின்றி பிரிவினையைத் தூண்டலாம். எனவே மதச்சார்பற்ற நாட்டில் மதச் சார்புடைய சட்டப் பிரிவுகள் தேவையற்றது. நாட்டின் ஒருங்கிணைந்த சீரான வளர்ச்சிக்கு மதச்சார்பற்ற பொது சிவில் சட்டம் கட்டாயத் தேவை என்பதை மறுக்க முடியாது.

வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.

அவசர அவசியம்

"மதச்சார்பற்ற பொது சிவில் சட்டத்துக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்' என்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் பேசியிருப்பது நூறு விழுக்காடு ஏற்றுக்கொள்ளப்பட்டே ஆக வேண்டும். நமது அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் நெறிகளில் நாட்டுமக்கள் அனைவருக்குமான பொது சிவில் சட்டம் அமலுக்கு வர வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் இந்தியாவின் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற பரப்புரை வாக்கு வங்கி அரசியல்தானே தவிர வேறு அல்ல. மத வேறுபாடுகளைக் கடந்த இந்திய மக்கள் ஒற்றுமையாக வாழ பொது சிவில் சட்டம் இப்போது அவசர அவசியம்.

ஹம்ஸô சந்தானம் ஐயர், வில்லிவாக்கம்.

சரியானதுதான்

மதச்சார்பற்ற பொது சிவில் சட்டத்திற்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் பேசியுள்ளார். மதச்சார்பற்ற சிவில் சட்டம் நமது நாட்டிற்குத் தேவைதான்.அரசியல் சாசனம் இயற்றப்பட்ட சமயத்தில் சில தேசிய தலைவர்கள் நடுநிலை மற்றும் அவர்களின் தனிப்பட்ட சில குணங்களால் பொதுவான சிவில் சட்டம் இயற்றத் தடையாக இருந்தனர். உலகில் வேறெங்கும் இதுபோன்ற ஒவ்வொரு சமயத்தினருக்கும் ஒரு சட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. திருமணம், சொத்து போன்ற விவகாரங்களில் அனைவருக்கும் பொதுவான சட்டம் தேவையானதுதான். ஆனால் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

தி.ரெ.ராசேந்திரன், திருநாகேச்சரம்.

திணிக்கக் கூடாது

பாரதப் பிரதமர் மோடி மதச்சார்பற்ற பொது சிவில் சட்டத்திற்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று சுதந்திரதின உரையில் பேசியிருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு மதத்திற்கும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை போன்ற நிகழ்வுகளில் ஒவ்வொருமுறை பின்பற்றப்படுகிறது. இவை அனைத்திற்கும் பொது சிவில் சட்டம் பொருந்திப் போகாது என்பதால் சிறுபான்மை மக்கள் இதற்கு எதிராக நிற்கிறார்கள். பொதுசிவில் சட்டத்தை சிறுபான்மையினர் ஏற்பதற்கான சூழல் வரும்போதுதான் அது கொண்டுவரப்பட வேண்டும். அச்சட்டம் திணிக்கப்படுமேயானால் ஒருங்கிணைந்த இந்திய சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் .

எஸ்.சிறீகுமார், கல்பாக்கம்.

அடிப்படைத் தேவை

நமது நாடு சுதந்திரம் அடைந்த பின் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை இயற்ற முடியாத சூழல் நிலவியது. இன்று அபார தொழில் மற்றும் விஞ்ஞான வளர்ச்சி கண்டு, உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னோடியாக நிற்கும் நம் நாட்டில் மத ரீதியாக, சமூக, பொருளாதார ரீதியாக நிலவும் வேறுபாடுகளைக் களைய வேண்டிய தருணம் வந்துவிட்டது. "ஒரே நாடு, ஒரே மக்கள்' என்ற கோட்பாடு வந்த பின் ஒவ்வொருவருக்கும் தனித்தனி சட்டம் என்பது முரணானது. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்பதே அடிப்படைத் தேவை.

கே.ராமநாதன், மதுரை.

ஒரு சாராரைத் திருப்திப்படுத்த...

பிரதமர் மோடி சுதந்திர தின உரையில்ஆற்றிய உரை குறிப்பிட்ட ஒரு சாராரை திருப்திப்படுத்தும் வகையில் பேசப்பட்டது என்றே கூறலாம். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டின் பிரதமர் இந்தியா மதச்சார்பற்ற நாடு இந்த நாட்டில் வாழக் கூடிய மக்கள் அவரவர் விரும்பிய உணவை உடையை கலாசாரத்தை மொழியைத் தேர்ந்தெடுத்து நடப்பதற்கு முழு உரிமை கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை மறந்து காலத்தின் கட்டாயம் என்று பேசி இருப்பது என்பது அறிந்திருந்தும் அறியாமையின் வெளிப்பாடாகவே இதைக் கருதலாம். அது எப்படி சாத்தியம்? ஒரு கூட்டத்தினரை திருப்திப்படுத்துவதற்காகப் பேசப்பட்ட பேச்சுதான் அது!

மவ்லவீ மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments