விவாதமேடை

"பாமக உட்கட்சி பிரச்னை: குழப்பத்துக்குக் காரணம் திமுகவா, குடும்பமா?' குறித்து......வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

வீண் பழி

பாமக உட்கட்சி பிரச்னை குழப்பத்துக்கு, காரணம் திமுக என்று கூற இயலாது. தந்தைத்கும் மகனுக்கும் உள்ள குடும்ப பிரச்னைதான். ராமதாஸின் வயது முதிர்வால் அவரது மகன் அன்புமணி கட்சிப் பொறுப்புகளை தான் ஏற்க முனைந்தார். ஆனால், இது தந்தைக்கு பிடிக்கவில்லை; எனவேதான் பாமக-வில் பிரச்னை தொடர்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லை. பதவி ஆசை இருவரிடமும் உள்ளது. இதனால் கட்சிக்குத்தான் இழப்பு. திமுக ஆட்சியில் இருப்பதால் அதன்மீது வீண் பழி சுமத்துகின்றனர்.

கே.ஆனந்தநாராயணன், கன்னியாகுமரி.

பாவம் தொண்டர்கள்!

பாமகவின் உட்கட்சி பிரச்னைக்குக் காரணம் திமுகவும் அல்ல; குடும்ப அரசியலும் அல்ல. அடிப்படைக் காரணம் பாஜகவும் அன்புமணியும்தான்! காரணம். அமலாக்கத் துறையைக் கொண்டு மிரட்டும் பாஜக, தந்தை-மகனைப் பிரித்துவிட்டது. பாஜகவோடு சேர்ந்தால் மாநிலங்கள் அவை சீட் கிடைத்து மீண்டும் பாஜகவில் அமைச்சராகலாம் என்ற எண்ணம் அன்புமணிக்கு உண்டு. அதிகாரம்-பணம்-குடும்ப அரசியல் என்ற தளமே பாமகவின் கொள்கை அரசியல். இவர்களை நம்பி இத்தனை வருஷமாக அரசியலில் இருந்த தொண்டர்கள்தான் பாவம்.

கலைப்பித்தன், கடலூர்.

திசைதிருப்புகிறார்...

பாமக நிறுவனர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் ஒற்றுமையாக இருந்திருந்தால் பாமகவின் உட்கட்சிப் பிரச்னை வெளி உலகுக்குத் தெரிந்திருக்காது. பாமக பேருந்தின் உரிமையாளர், ஓட்டுநர், நடத்துநர் எல்லாம் நானே என்கிறார் ராமதாஸ்; பாமகவின் நடத்துநராகத் துடிக்கிறார் அன்புமணி . இது பாமக உட்கட்சி பிரச்னையின் தொடக்கப்புள்ளி. தந்தை-மகன் யுத்தத்தில் பாமகவின் தொண்டர்கள் கட்சியின் எதிர்காலம் பற்றி கலங்குவதைக் கண்டு, அன்புமணி "பாமக உட்கட்சி பிரச்னைக்கு திமுக காரணம்' என்று பழிபோடுகிறார்; திசை திருப்புகிறார்.

எம்.ராஜம்மாள், சென்னை.

தெளிவாகத் தெரிகிறது!

திமுக தனது கூட்டணிக் கட்சிகளை தக்கவைத்துக் கொள்வதே அதற்குபோதுமானதாகும். பாமகவை பிளவுபடுத்தி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் அதற்கு இல்லை. அப்படி திமுக கூட்டணியில் பாமக சேர்ந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணியிலிருந்து விலகக்கூடும். பாமகவா? விசிகவா? என்றால் விசிகவையே திமுக தேர்ந்தெடுக்கும். ராமதாஸும் அன்புமணியும் மாறிமாறி வசைபாடிக் கொள்வதிலிருந்தே இது முழுக்கமுழுக்க குடும்ப அரசியல் என்பது தெளிவாகிறது.

க.ரவீந்திரன், ஈரோடு.

மக்கள் தெளிவாக உள்ளனர்

வன்னியர் சமுதாயத்துக்காக ஆரம்பித்து, பின்னர் அரசியல் கட்சியாக உருமாறி இன்று குடும்ப உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக பாமக மாறியுள்ளது. பணத்துக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப்படுபவர்களுக்கு இடையே கட்சியில் நடக்கும் சண்டை. அன்று ராமதாஸ் மகனை உயர்த்தி அழகு பார்த்தார், இன்று மகள்வழிப் பேரனை கட்சிக்குள் கொண்டுவர விரும்புகிறார். இது அன்புமணிக்குப் பிடிக்காததால் குடும்ப பிரச்னை கட்சியில் வெடித்து மக்களை தெளிவு படுத்திவிட்டது.

நா.குழந்தைவேலு, மதுரை.

உள்ளங்கை நெல்லிக்கனி!

"கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை' என்பதைப் போல பாமக உட்கட்சிப் பிரச்னைக்குக் காரணம் ராமதாஸின் குடும்பமே. அன்புமணிக்கு அனைத்து அதிகாரமும் கொடுத்த ராமதாஸ், அதனைத் திரும்பப் பெற்றதாலேயே இவ்வளவு பிரச்னையும். ராமதாஸ் வீட்டில் உட்கார்ந்தபடி அரசியல் செய்கிறார். அன்புமணி களத்தில் அரசியல் செய்கிறார். இதனால் தொண்டர்களில் பெரும்பாலானோர் அன்புமணி பக்கம் நிற்கிறார்கள். இதைப் பொறுக்க முடியாமலேயே பலரையும் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்குகிறார். இந்த இடத்தில் திமுக என்ற பேச்சுக்கே இடமில்லை. பாமக உட்கட்சிப் பிரச்னைக்கு காரணம் குடும்பமே என்பது "உள்ளங்கை நெல்லிக்கனி'.

ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

நியாயமில்லை!

விவாதமே விநோதமானதுதான்! இரண்டு மருத்துவர்கள் தந்தையும் மகனுமாக இருந்து கட்சி நிறுவனர் ராமதாஸýம், மத்திய அமைச்சராக இருந்த அன்புமணியும் கட்சிரீதியாக மோதிக் கொள்வது இருவரையுமே கொச்சைப்படுத்திவிட்டது . திமுக காரணம் என்று அன்புமணி கூறியது ஆதாரமற்றது. குடும்பத்துக்குள் ஏற்பட்ட குழப்பமே கட்சிக்குள் வெடித்துள்ளது கண்கூடு ! விட்டுக்கொடுப்போர் கெட்டுப்போவதில்லை என்பார்கள். திமுகவை அன்புமணி ராமதாஸ் காரணம் காட்டுவது நியாயம் இல்லை.

ஆர்.ஜி .பாலன், திசையன்விளை.

ஊர் இரண்டுபட்டால்...

பாமக உட்கட்சி பிரச்னை குழப்பத்துக்குக் காரணம் திமுகதான், ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல பாமக தலைவர் ராமதாஸும் அன்புமணியும் மோதிக்கொள்வதை ரசிக்கும் ஆளும் கட்சி, அவர்களின் மோதலில் தங்களின் வெற்றியைச் சுவைக்க காத்திருப்பதுதான் உண்மை. அவர்களின் இந்த மோதலால் திமுகவின் எந்த ஒரு நிகழ்வும் பெரிதாகப் பேசப்படாது. இதனால் நாளுக்குநாள் மோதல் ஒரு பெரிய சர்ச்சையாகிவிடும் என்பதால், இந்த பிரச்னைக்குத் தாங்கள்தான் காரணம் என்று வெளியே தெரியாதபடி திமுக நடந்துகொள்வதைப் பார்க்க முடிகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியலில் நடக்கும் இதுபோன்ற நாடகங்களை அமைதியாக மக்கள் வேடிக்கை பார்ப்பது சாதாரணமாகிவிட்டது.

பிரகதாம்பாள், கடலூர்.

ஊடக வெளிச்சத்துக்காக...

பாமக உட்கட்சி பிரச்னைக்கு நிச்சயமாக குடும்பம்தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் அன்புமணி ஊடக வெளிச்சம் தன்மீது விழுவதற்கு திமுகவைச் சீண்டுகிறார். பாமக குழப்பத்தில் திமுகவுக்கு எள் முனை அளவும் தொடர்பில்லை. அன்புமணி இன்னும் ராமதாஸின் மகனாகவே பேசுகிறார்; ஒரு கட்சியை நிர்வகிப்பவராக அவரின் பேச்சு மாறவேண்டும்.

ந.கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.

அரசியல் நாகரிகமல்ல!

மன்னர் காலம்போல தந்தையும் மகனும் தலைமைக்கு மோதிக்கொள்வதால், கட்சி பலவீனமடைவதைஇன்னும் உணராமல் பொதுவெளியில் பிரச்னையை பெரிதாக்குவது பரபரப்புக்கான விளம்பர உத்தியாகவே தோன்றுகிறது. ராமதாஸும் அன்புமணியும் நேரடியாக சந்தித்தாலும் சமரசமாகாமல், குடும்பமும், வெளியாள்களும் முயற்சித்தும் சமாதானமாகாமல், மோதல் முற்றுவதற்குக் காரணம் தந்தை-மகனின் ஈகோதானே தவிர, பிரச்னையைத் திசைதிருப்ப திமுக மீது பழிபோடுவது அரசியல் நாகரிகமல்ல.

ஜ.அண்ணா அன்பழகன், அந்தண பேட்டை.

திமுகவும் ஒரு காரணம்...

வடமாவட்டங்களில் ஒரு சமூகத்தினரை ஒருங்கிணைத்து, ஒரு வலுவான அரசியல் கட்சியினை உருவாக்கி, மத்திய அமைச்சரவையில் இடம்பெரும் அளவுக்கு உயர்வுகண்ட ராமதாஸ், கண்ணெதிரிலேயே அவர் தோற்றுவித்த கட்சியில் உட்பூசல்கள் காரணமாக பிளவு காணும் நிலைக்குச் சென்றுள்ளது. வலுவான கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது திமுக. பாமகவினை உடைத்து, பிரிவினை உண்டாக்கி, அதன் ஜாதிசார் வாக்குகளைப் பெற சாதகமாகக் காய்களை நகர்த்தி வருகிறது. பாமகவின் உட்கட்சிப் பிரச்னைக்கு திமுகவும் ஒரு காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது !

கே.ராமநாதன், மதுரை.

மோதலுக்கு...

பா. ம.க. உட்கட்சி பிரச்னை குழப்பத்துக்குக் காரணம் நிறுவனர் ராமதாஸ் -தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான். இந்த மிகப் பெரிய மோதலுக்குக் காரணம், ராமதாஸ் தனது மகள்வழி பேரனான முகுந்தனை பாமக இளைரணி தலைவராக யாருடைய சம்மதமும் இல்லாமல் நியமித்ததே. எனவே இவ்வளவு மோதலுக்கும் முக்கியக் காரணமே குடும்பம் என்று தெளிவாகத் தெரிகிறது.

நந்தினி கிருஷ்ணன், மும்பை .

விவேகம்

கடந்த ஆண்டில் மாமல்லபுரத்தில் நடந்த பாமக மாநாட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தன் மகள் வழி பேரனை, இளைஞரணி தலைவராக அறிவித்ததை அன்புமணி கோபமாக மேடையிலேயே மறுத்தார். அண்மையில் அதனை கடுமையான விமர்சனத்துடன் தன் மகன் அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தான் செய்த தவறு என்றார். வெளிப்படையாக ஊடகங்கள் வாயிலாகவே தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் பழித்துக்கொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சியிலும் அதன் தலைமையிலும் திமுக குழப்பம் உண்டாக்கியது என்று கூறமுடியாது. குழப்பம் என்பது தந்தை மகனுக்கு மட்டுமே; கட்சியில் அல்ல. அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு திமுக தலைமை பதில் எதுவும் கூறாமல் இருப்பது, அவர்களின் விவேகத்தைக் காட்டுகிறது.

ஆ. லியோன், மறைமலைநகர்.

பல காரணங்கள்...

பாமக நிறுவனரான தன் தந்தை ராமதாûஸ ஓரங்கட்டிவிட்டு, சகலகலா வல்லவராக நிரந்தரத் தலைவராக வலம்வர அன்புமணி எண்ணியது, தனது சகோதரி மகன் முகுந்தனுக்கு இளைஞர் அணி பதவிதர மறுத்தது, கடந்த மக்களவைத் தேர்தலில் ராமதாஸின் விருப்பத்துக்கு மாறாக பாஜகவுடன் கட்டணி அமைத்தது எனப் பல காரணங்களைக் கூறலாம். பாமகவின் உட்கட்சி பூசலுக்கு திமுக காரணம் இல்லை என ராமதாஸை கூறிவிட்டார். மொத்த குழப்பத்துக்கும் காரணம் குடும்ப அரசியல்தான்.

பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

SCROLL FOR NEXT