கவிதைமணி

'பொம்மை' வாசகர் கவிதை பகுதி 2

கவிதைமணி

பொம்மை

பொய்மெய்யாய்த் தோன்றுமொரு தோற்றம் காணப்
        புறத்தினிலே தொலைநோக்க உண்மை போலும்
மெய்நிகர்த்த உருவமெனக் காட்டும் பக்கம்
        விழிகொண்டு நோக்கிடிலோ உயிரே இல்லாப்
பொய்யுருவம் மெய்யெனவே காட்டும் சொல்லும்
        பூந்தமிழின் சொல்செய்யும் மாயந் தானே
பொய்மெய்பொய் மெய்பொய்மெய் என்று சொல்ல
        பொம்மையெனும் சொல்லிங்கே விளங்கு மன்றோ

செயலற்று நிற்பவரை பொம்மை என்பர்
         செய்வதறி யாதவரை பொம்மை என்பர்
முயற்சியின்றி முடங்குவோரைப் பொம்மை என்பர்
         முப்போதும் பிறர்சொல்லைக் கேட்கும் மாந்தர்
தயங்காதுத் தலையாட்டும் பொம்மை என்பர்
         தன்னிச்சை யேதுமின்றித் திரிவோர் தம்மை
அயலாரும் மயங்காது சொல்வர் பொம்மை
        அடையாள மாகமிக அழைப்பர் தாமே!

- கவிமாமணி  " இளவல் " ஹரிஹரன், மதுரை


**

வண்ண வண்ண பொம்மைகள் வனப்பு வாய்ந்த பொம்மைகள் !
எண்ண எண்ண பொம்மைகள் எண்ணில் லாத பொம்மைகள் !

ஓடும் பொம்மை ஒருபுறம் ஒளிரும் பொம்மை மறுபுறம் !
ஆடும் பொம்மை ஒருபுறம் அசையும் பொம்மை மறுபுறம் !

சீறும் பொம்மை ஒருபுறம் திகைக்கும் பொம்மை மறுபுறம் !
நூறு நூறாய் பொம்மைகள் நுவலும் படியாய்ப் பலவிதம் !

பூனை கிளியும் புலிகளும் புல்லும் மரமும் செடிகளும்
யானை பாம்பு பல்லியும் ஆன தலைவர் புலவரும்

அம்மை அப்பர் கடவுளும் அழகுக் கதிரோன் நிலவதும்
சும்மா சுழலும் பொம்மையும் சுற்றிச் சுற்றி எங்கிலும் 

சின்ன பெரிய பொம்மைகள் சிறப்பு மிக்க பொம்மைகள் 
அன்புக் குழந்தை மகிழவே அளிப்போம் பரிசு பொம்மைகள் !

- து.ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி) 

**
 
மண் பொம்மை
மரப்பாச்சி பொம்மை
தலையாட்டி பொம்மை
தரையில் ஒடும் பொம்மை
என எதுவாக இருந்தாலும்
ஒற்றை பொம்மை வைத்து
சுற்றத்துடன் விளையாடியது
நேற்றைய தலைமுறையைச்
சேர்ந்த குழந்தை !
கார்பொமமை முதல்
கரடி பொம்மை வரை
பம்பரம் முதல்
பார்பி பொம்மை வரை
பல பொம்மைகளுடன்
விளையாடுகிறது
ஒற்றைக்  குழந்தையாக
இன்றைய நாட்களில் !
எப்படி இருந்தாலும
ஏட்டுப் படிப்புடன்
எண்ணங்களுக்கு நல்
வண்ணங்கள் பூசி
குழந்தையுடன் பயணிக்கின்றன
பொம்மைகள் !
பாசத்தால் உணவூட்டி 
நேசத்தால் உயிரூட்டி 
பொம்மையுடன் உறவாடி
விளையாடும் குழந்தையின்
மகிழ்ச்சிக்கு நிகர் எதுவும் இல்லை!

- கே. ருக்மணி

**

கண்ணீரில் மிதக்கும் மரப் பொம்மை நான்
கவலைகளைத் தாங்கிக் கொள்ளும் கல்பொம்மை நான்

பாசத்தில் கரையும் சர்க்கரைப் பொம்மை நான்
வேசத்தில் ஏமாறும் ஏமாளிப் பொம்மை நான்

வாா்த்தையெனும் உளியால் உடைபடும் மண்பொம்மை நான்
வாரமொருமுறை கவிதைமணியில் கவிபாடும் பொம்மை நான்

சிறகுகள் பறிக்கப்பட்ட சுதந்திர பொம்மை நான்
சரிந்தபோதும் உயிர்பிக்கும் பீனிக்ஸ் பொம்மை நான்

அன்பிற்கு தலையாட்டும் தலையாட்டி பொம்மை நான்
வம்பிற்கு வேலெடுக்கும் வீரநாச்சி பொம்மை நான்

இருக்கும் பூமியைக் காக்கதவறிய பொம்மை நான்
இல்லாத பூமிக்கு வழிதேடும் பொம்மை நான்

கலங்கரை விளக்கம்தேடும் படகுபொம்மை நான்
கலிகாலத்தில் வந்துபிறந்த மனித பொம்மை நான்

வாழும்போது பிறரை சுமந்த பொம்மை நான்
வீழும்போது பிறருக்கு சுமையாகிவிட்ட பொம்மை நான்

-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**

அழும் முகத்துடன் பொம்மைகள்
தயாரிக்கப் படுவதில்லை
குழந்தைகளை குதூகலமாய் வைப்பதில்
பொம்மைகளுக்கே முதலிடம்

பொம்மைகளின் மொழி
குழந்தைகளுக்குப் புரியும்
குழந்தைகளின் மொழி
பொம்மைகளுக்கும் தெரியும்

பொம்மைகளின் அருகாமை அறியாத குழந்தைகள்
அதன் குழந்தைத்தனத்தை புரிந்து கொள்ளாது
சில சமயம் குழந்தைகளாய் மாறும் சொந்தங்களை
குழந்தைகள் அறிந்தால் விடவே விடாது

குழந்தைகளின் உலகில்
பொம்மைகளே பெரும்பதவியில் இருக்கும்
அதன் ஒவ்வொரு கண்சிமிட்டலுக்கும் ஏற்றபடியே
இக்குழந்தைகள் அடிவைத்து நடக்கும்

- அ.வேளாங்கண்ணி, சோளிங்கர்

**

சில பல
குடும்பங்களில் போலவே
கட்சிகளிலும்
ஆளும் மன்றங்களிலும் கூட
இருக்கத்தான் செய்கின்றன
பேசும் பொம்மைகள்

சில பொம்மைகள்
பேசுவதாகப் போலவே நடிக்கும்
சில பொம்மைகள்
சொன்னதைப் போல் முழக்கும்

தலைமைத் தவிர
பொம்மைகளாக இருப்பவர்கள்
பேசினால்
பொம்மைகளாக இருக்க முடியாது

சந்தைகளில் மட்டும்
பொம்மைகளின் சப்தங்கள் கிழிக்கும்
காதுகளையும் கவனங்களையும்...

பொம்மைகளாக ஆகிவிட்ட
புறங்களில் நின்று
புலம்ப முடியாமல் சில பொம்மைகள்
மனங்களில் புழுங்கும்...

சும்மா சொல்லக் கூடாது
கடவுள் பொம்மைகளுக்கு மவுசு அதிகம்
என்றாலும்
அதையே ஆட்டிப்படைக்கும்
மதமான
சாதி பொம்மைகளுக்கே அதிக சக்தி...

- கவிஞர்.கா.அமீர்ஜான்/திருநின்றவூர்

**

மனிதன்  மனதில்  இருக்கும் 
தனியான உணர்வுகள்தான் 
பணியென  உருவாக்கப்படும் 
பொம்மை!......................
மிருகங்களின் வடிவம்....
மரங்களின் வடிவம்......
மனிதனின் வடிவம்.....
பழங்களின்  வடிவம்..........
காய்களின்  வடிவம்......
 கடவுளின்  வடிவம்............
வாகனங்களின்  வடிவம்.........
என  உருவாக்கப்படும்  
பொம்மை..............
மெழுகில்  உருவாக்கலாம்...........
மண்ணில்  உருவாக்கலாம்...........
சின்னக் குழந்தைகளின்  நண்பன் 
வண்ண  வண்ண  பொம்மைகள்!
பொம்மை கொண்டு உன்னை
உன்னை  உணரச் செய்யும்  ஒரு 
உன்னத  பொருள்  என உணர்!

- உஷாமுத்துராமன், திருநகர்

**
அம்மா  உருவ  பொம்மை 
அப்பா  உருவ பொம்மை 
அண்ணன் உருவ  பொம்மை 
தங்கை  உருவ  பொம்மை 
என பல பொம்மைகளை 
ஒரு கூட்டுக்குடும்பமாக  வைத்து 
மறுப்பின்றி விளையாடும்  மழலைகளின் 
வெறுப்பில்லா  உள்ளத்தில் 
தைத்து விடலாம் அன்பினை!
மருத்துவ செட் பொம்மை 
குழந்தையின் கற்பனைக்கு 
விதை ஊனும்  அருப்புத பொம்மைகள்!
சமையல் செட் பொம்மை 
ஆண்- பெண் ஒற்றுமையுடன் 
கண்ணியமாக  குடும்பம் 
நடத்துவதற்கான ஒத்திகை அறிவுரையினை 
மடை திறந்த  வெள்ளமென போதிக்குமே!
விமானம் என்ற  பொம்மை 
சிறார்களின்  விமானஓட்டியாகும் 
கனவினை கற்பனை  கலந்து 
நனவாக்க  உற்சாகமளிக்கும் அன்றோ?
மொத்தத்தில்  எந்த பொம்மையும் 
சித்தம்  குளிர   மேன்மைகளை 
நித்தம் சொல்லிக்கொடுக்கும்  ஆசான்!

- பிரகதா நவநீதன்.  மதுரை 

**

பொம்மையாய்ப் பலபேரிங்கே போகின்றார் மௌனமாக
தலையாட்டும் பொம்மையாகி தவித்திடும் குடும்பத்தார்க்கு
விடுதலை உண்டாவென்று வைக்கலாம் பட்டிமன்றம்
ஆனாலும்    அரசியலார்    அத்தனை    பேருமிங்கு 
சாவிகொடுத்த பொம்மையாகி சங்கடங்கள் ஏதுமின்றி 
கமிஷனைப் பெற்றுயிங்கு களிக்கின்றார் வாழ்வினையே!

பெற்ற கமிஷனிலே பெரும்பகுதி தேர்தலுக்காய்
ஒதுக்கி வைத்து மக்களையும் ஒன்றாகவிலைபேசி
மீண்டும் பொறுப்பினிலே விரைந்தே அமர்ந்திடுவார்
கல்வித்   தந்தையாகிக்   காசை    எண்ணிடுவார்
பலதொழிலும் செய்துயிங்கே பாவப்பட்ட மக்களையே
பிழிந்தெடுத்து அவர்செல்வம் பெருக்கிச் சுகங்காண்பார்!

ஆற்றினிலே   நீரில்லை   அடிபம்பில்     நீர்வரலை
பொம்மை மனிதர்களோ போயங்கே குடத்துடனே
கொளுத்தும் வெயிலிலே குடல்கருக நின்றிடுவார்
பசிக்கும் வயிற்றுக்குப் பால்வார்க்க யாருமில்லை
அரிசிக்கும் பருப்புக்கும் ஆலாய்ப் பறந்திங்கே
அற்பாயுளில் உயிர்நீப்பார் அதனையே வாழ்வென்பார்!

-ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

**

பொன்னதும் பொருளதும் புகழதும் பொய்யடா
     பொய்பொய்பொய் பொய்யே !
உன்னதும் என்னதும் உயர்வதும் தாழ்வதும்
     உரைப்பதும்பொய் பொய்யே !

சேர்த்ததைக் கூட்டலும் திமிருடன் ஆடலும்
     தீயதுதீத் தீயே !
யார்க்கெது நிரந்தரம் யாருமே அறிந்திலர்
     ஆமதுமெய் மெய்யே !

பொம்மையைப் போலவே பொழுதுமே இருப்பதால்
     புகழிலைவீண் வீணே !
தம்மையே உயர்வெனத் தருக்கியே அளப்பது 
     தாழ்வதுதான் தானே !

பொம்மையாய் இருப்பவர் பொய்யதும் புரட்டதும்
     போலியாய்ப்போம் போமே !
செம்மையாய்ச் சிறப்பவர் சீரறி வாய்த்தவர்
     திகழ்ந்திடல்சீர் சீரே !

அழகுடை பொம்மையில் அழிவெடி குண்டெனில்
     ஆவதுவீண் அழிவே !
அழகிலா ஆளரில் அன்பதே பெருகிடின்
     ஆவதுதாம் வாழ்வே !

பொம்மையைப் போன்றவர் புதுமையாய்ப் புகல்நெறி
     புலர்கதிர்ப்போல் பொலிந்தே !
பொம்மையாய் இருந்துமே புவிவுயர் வாக்கிடின்
     போற்றிடுமிப் புவியே !

- படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு

**

மரம் , செடி , கொடி வரிசையுடன்
பூமித்தாய் கரம் தாங்கும் உயிர்கள்
இறைவன் திருவிளையாடல்களில் உருவான
உயிர் பெற்ற பொம்மைகளே  !
வாழ்க்கை படிகளில் ஏற்றப்பட்ட
நாமும் வாழும் பொம்மைகளே !
வண்ண வண்ண ஆடையுடுத்த 
விதவிதமான அழகு பொம்மைகளே !
வாழ்க்கை காலச்சக்கரமாய் சுழல,
வாழ்வு நிலைகள் நம்மில் மாற,
மேலொருவன் நூல் பிடித்து ஆட்டுவிக்க
செயல்படும் நாமும் பொம்மைகளே !
 
பொம்மை விளையாட்டில் பிள்ளை மனம்
நம்மை ஆட்கொள்ள  மழலைகள் ஆனோமே !

- தனலட்சுமி பரமசிவம்

**

பொம்மையல்ல, பொம்மையல்ல, எவ்வுயிரும் பொம்மையல்லடா !
பூமியில் எவ்வுயிரும் பொம்மையல்லடா, பொம்மையல்லடா! --உனக்கு, 
அன்பு உண்டு; ஆசை உண்டு; பாசமும் உண்டு !
அறம் வழுவா குணமும் உண்டு; அறிவும் உண்டு!--நீ,
அடங்கிப் போவதால், பொம்மையல்ல, பொம்மையல்லடா !
 ஆட்டுவித்தால் ஆடுவதால்,பொம்மையல்ல, பொம்மையல்லடா !
வறுமையினால் வாழ்வினிலே, ஒடுங்குவதுண்டு, ஒடுங்குவதுண்டு!   
வாய்ப்பிருந்தும், வெற்றி கொள்ளத், 
தடைகளுமுண்டு,  தடைகளும் உண்டு! 
ஆணவத்தார் அவமதிக்க, தன்மனம் கலங்கிடுவாரே !
ஆன்றோர் தம் துணையின்றேத் தோற்றிடுவாரே !--அவரைப்,
பொம்மை என்று எள்ளலுமே, நற்குணமாகுமா?
--அவர்,
புரட்சி கொண்டுத் தீதுசெய்ய, ஏதுவாகுமே !
விண்ணும் மண்ணும் வெற்றி காணும் நீ பொம்மையல்லடா! பொம்மையல்லடா! -மண்ணில்,
வித்தகனாய்ச் சிறந்து, வாழ்வில் உயர்ந்து காட்டடா; நீ பொம்மையல்லடா !
வீண் பெருமை ஏதுமின்றி எளிமை கொள்ளடா ; நீ அலங்காரப் பொம்மையல்லடா !
வீணர்கள் யாரென்று அறிந்து ஒதுங்கடா; நீ அறிவு ஜீவியடா !

- கவி. அறிவுக்கண்.

**

உன்னைப்போல் இருக்கிறோம் அத்தனைபேரும்!
உன் குணம் (பாெறுமை) இல்லையே அத்தனை பேருக்கும்!
நினைத்தவுடனே உன்னைப் பெற்றிடவே!
அடைந்திடுவாேம் வீதி கடைகளிலே!
ஏன் இங்கு பெண்ணை,
விலை கொடுத்து வாங்கிட நினைக்கிறார்கள்??
உன் போல் சாவி கொடுத்து
விளையாடிடவா??
பெண்கள் இல்லை பொம்மை!
கொடுங்கள் நல்வாய்ப்பை
பின்னே தெரியவரும்
அவர்கள் மகிமை!
அடிமை இல்லை பெண்கள்,
அவர்கள் நாட்டை ஆளும் தூண்கள்
இம்மை, மறுமையிலும்
பெண்மை இன்றி ஏதும் இல்லை!
இதுவே நிதர்சன உண்மை!
பெண்ணை பொம்மையாக நீ நினைத்தால்!
அழிவுப்பாதை ஆரம்பம் இப்போதே!

- மு.செந்தில்குமார், ஓமன்

**

எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கலையின் வண்ணம் கண்கள் காணத
……………கனிந்தே மகிழும் நெஞ்சமுமே.!
விலையும் கொடுத்தே வாங்கும் பொம்மை
……………வீட்டில் அழகாய் அமர்ந்திடுமே.!
சிலைகள் சிற்பம் சிறப்பாய் இருந்தால்
……………சிந்தை மகிழ்ந்து துள்ளிடுமே.!
கலையின் சிறப்பை கடிதே உணர்த்தும்
……………கல்லில் வடித்த சிலைகளுமே.!
.
பெண்கள் ஆண்கள் பள்ளிக் குழந்தை
……………பலரும் ரசிக்கும் பொம்மைகளாம்.!
கண்கள் மலரக் குளிர வைக்கும்
……………காட்சிப் பொருளே பொம்மைகளாம்.!
எண்ணில் அடங்கா இறைவன் உருவில்
……………எங்கும் கிடைக்கும் பொம்மைகளாம்.!
பண்டைக் காலம் பெருமை சொல்லும்
……………பழமை வாய்ந்த பொம்மைகளாம்.!
.
ஊர்ந்து நடந்து ஓடும் விலங்கும்
……………உளத்தில் நிற்கும் பொம்மையிலே.!
பார்க்கும் போதே பொம்மை போலப்
……………பார்த்தால் தோன்றும் மனிதருண்டு.!
சேர்த்தே குழைத்த சேற்று மண்ணும்
……………சாலையில் விற்கும் விநாயகராய்.!
வார்த்தே பொம்மை வடித்து விற்பார்
……………வயிற்றுப் பிழைப்பை நடத்துதற்கே.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

பொம்மை என்றால் பிடிக்காதவர் உலகில் உண்டோ ? குழந்தைகள் முதல் பெரியவர்வரை.
உண்மையைச்சொன்னால் குழந்தைகளுக்குஉயிருள்ள மனிதரைவிடபொம்மையை பிடிக்கும்

விழிதிறக்காத, பொம்மைகள் அந்நாளில்! படுத்தால்மூடும்நிமிர்த்தால் திறக்கும் இந்நாளில்
பார்பி பொம்மைகள் உலகப் புகழ்வாய்ந்தவை! பார்க் பார்க்க மகிழ்ச்சி தரும் பொம்மை!


போரடித்தால்குழந்தைகள் பொம்மையுடன் தனிமையில்! பூவுலகேவியக்கும் பொம்மைவிழா     
புரட்டாசி திங்களில் அம்மாவாசைமுதல் ஒன்பது நாள்கள் கடைசிநாளில்கலைமகள் விழா!  


கொட்டிக் கொட்டி பணம் கொடுத்து கொலுவிற்கு நல்ல நல்லபொம்மைவாங்கி மகிழ்வார் .
பார்த்து பார்த்து பொம்மைவாங்குவார்!மண்பொம்மை,பாஸ்ட்டராப்பாலிஸ்,ரப்பர்,பிளாஸ்டிக்

படி தட்டுகள் போட்டு பொம்மைகளை அழகழகாய் அடுக்கி அலங்கரித்து அழகு பார்ப்பார்
கடவுள் பொம்மைகள், அவதாரங்கள், மனிதர் வழிகாட்டிகள்,விலங்குகள்,பறவைகள்

தட்டுகளுக்கு கீழே சோழிபோன்ற அலங்காரம்,பாசியில்செய்தவை அழகுப்பொருள்
சிறுசிறு அளவில் பெரியகோபுரங்கள் கோவில்கள் அணைகள் பூங்காக்கள் உண்டு

இப்போதெல்லாம்பேசும்பொம்மைகள் ஐ.சிவைத்து இயங்கும்நகரும் பொம்மைகள்
விட்டால் பெருமாளைக்கூட பேச வைத்துவிடுவார்கள் அனிமேஷனால் பேசும்படி

பொம்மை என்பது நம்மோடு இணைந்தது பொம்மைகளை ரசிப்போம்,பூரிப்போம்

- கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், இராஜபாளையம்

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT