நாள்தோறும் நம்மாழ்வார்

மூன்றாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

செ.குளோரியான்

இடர்இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா
உலகும் கழியப்
படர்புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன்
ஏறத் திண் தேர் கடவிச்
சுடர்ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டுகொடுத்தவனைப்பற்றி
ஒன்றும் துயர் இலனே.

அன்றைக்கு ஒரு வைதிகப் பிராமணனின் பிள்ளைகள் தொலைந்து போனார்கள், அந்தப் பிராமணனையும், பரவுகின்ற புகழைக் கொண்ட அர்ஜுனனையும் வலிமையான தேரில் ஏற்றிக்கொண்டு, அந்தத் தேரைச் செலுத்தினான் எம்பெருமான், ஒரு நாள் ஒரு பொழுதுக்குள் எல்லா உலகங்களையும் தாண்டிச்சென்று பரமபதத்தை எட்டினான், சுடர் ஒளியாக நின்ற தன்னுடைய அந்தப் பரமபதத்திலிருந்து அந்த வைதிகனின் பிள்ளைகளை உடலோடும் (உயிரோடும்) கொண்டுவந்து கொடுத்தான், அத்தகைய பெருமானைப் பற்றினேன், எனக்கு எந்தத் துயரமும் இல்லை.

•••

பாடல் - 6

துயர்இல் சுடர்ஒளி தன்னுடைச் சோதி
நின்றவண்ணம் நிற்கவே,
துயரில் மலியும் மனிசர் பிறவியில்
தோன்றிக் கண்காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்
புக உய்க்கும் அம்மான்,
துயரம்இல் சீர்க்கண்ணன், மாயன் புகழ் துற்ற
யான் ஓர் துன்பம் இலனே.

துயரமில்லாத சுடர்ஒளியான சோதி வடிவத்திலே எம்பெருமான் நின்றவண்ணம் இருக்கிறான், அதேசமயம், துயரிலே வாடுகிற மனிதப் பிறவியிலும் அவதாரம் எடுத்து, நாம் காணும்படி வருகிறான், அடியவர்களை அன்பால் வருத்துகிறான், பிறரைத் தண்டிக்கிறான், இதன்மூலம் தன்னுடைய தெய்வத்தன்மையை இவ்வுலகில் நிலைநிறுத்துகிறான், அத்தகைய அம்மான், துயரமில்லாத சிறப்பைக் கொண்ட கண்ணன், மாயன், எம்பெருமான், அவனுடைய புகழை அனுபவித்த எனக்கு எந்தத் துன்பமும் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT