நாள்தோறும் நம்மாழ்வார்

ஏழாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

செ.குளோரியான்


பாடல் - 9

மாயம் அறிபவர் மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ?
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே.

நாட்டுக்காகத் தாயாதிமுறையில் சண்டையிட்டார்கள் நூறு கௌரவர்கள். அப்போது, அவர்களுக்கு எதிரணியில் இருந்த ஒப்பற்ற பாண்டவர்கள் ஐவரின் பக்கம் நின்றான் எம்பெருமான், அந்த ஐந்து பேருக்காக, தேசமே அறியும்படி தேரோட்டியாகச் சென்றான் எம்பெருமான், நூறு கௌரவர்களும் மங்கும்படி கௌரவர்களின் சேனையை நாசம் செய்தான், எம்பெருமான் செய்த இத்தகைய நல்ல செயல்களைக் கேட்டு அறிந்தவர்கள், அவனுடைய மாயத்தை உணர்ந்தவர்கள், அந்த மாயனுக்கு ஆட்படாமலிருப்பார்களா? (மாட்டார்கள். அவனுக்கே ஆட்படுவார்கள்.)

***

பாடல் - 10

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை
பேர்த்துப் பெரும்துன்பம் வேர்அற நீக்கித் தன் தாளின்கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவு உற்றே.

ஆத்மா தன்னுடைய தன்மையை அறிந்துகொள்ள இயலாதபடி மறைக்கின்ற பிறப்பு, நோய், மூப்பு, இறப்பு என்ற சுழலை நீக்கி, பிறவி என்கிற இந்தப் பெரிய துன்பத்தை வேரோடு களைகிறவன் எம்பெருமான், பின்னர், நம்மைத் தன் திருவடியிலே சேர்த்துக்கொண்டு நன்மைதருகிறவன், இவ்வாறு எம்பெருமான் நமக்குச் செய்யப்போகும் நன்மையை எண்ணித் தெளிவானவர்கள், அவன் சொன்ன சொற்களை நன்கு அறிந்தவர்கள், அந்த மாயவனுக்கு ஆட்படாமலிருப்பார்களா? (மாட்டார்கள். அவனுக்கே ஆட்படுவார்கள்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT