நாள்தோறும் நம்மாழ்வார்

எட்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

செ.குளோரியான்


பாடல் - 1

அங்கும் இங்கும் வானவர், தானவர் யாவரும்
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி
அங்கம் சேரும் பூமகள், மண்மகள், ஆய்மகள்
சங்கு, சக்கரக் கையவன் என்பர் சரணமே.

எம்பெருமானே, அங்குள்ள மேலுலகத்தில் வாழும் தேவர்கள், அசுரர்கள் தொடங்கி, இங்குள்ள கீழுலகத்தில் வாழும் மனிதர்கள்வரை யாருக்கும் உன்னுடைய தன்மை விளங்குவதில்லை, நீ எப்படிப்பட்டவன் என்று அறியாமல் ஏதேதோ சொல்லி அழைக்கிறார்கள், ‘திருமகள், நிலமகள், ஆயர்மகளாகிய நப்பின்னையுடன் சேர்ந்து திருக்காட்சி தருபவனே, கையில் சங்கு, சக்கரத்தை ஏந்தியவனே’ என்று சொல்லி அழைக்கிறார்கள்.

பாடல் - 2

சரணம் ஆகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம், தோற்றம், வான் பிணி, மூப்பு என்று இவை மாய்த்தோம்,
கரணப் பல்படை பற்றுஅற ஓடும் கனல் ஆழி,
அரணத் திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே.

நான்கு வேத நூல்களிலும் செல்வத்தைப் பெறும் வழிகளை உபதேசிக்கும் பகுதிகள் இருக்கின்றன, ஆனால், பக்தியில் ஆர்வமுள்ளவர்கள் அதனை ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்கள், வீடுபேறு பெறுகிற வழிகளை விளக்கும் பகுதிகளில்தான் கவனம் செலுத்துவார்கள், ஆகவே, நாங்களும் அவ்விதமாகச் செல்வத்தில் கவனம் செலுத்தாமல் எம்பெருமானின் திருவடிகளை வணங்கினோம், பலவகையான ஆயுதங்களையும் வெல்லக்கூடிய ஒளி நிறைந்த, அடியவர்களுக்குப் பாதுகாவலாகத் திகழும் வலுவான சக்ராயுதத்தை ஏந்திய எம்பெருமானுக்கு அடிமைகளானோம், இறப்பு, பிறப்பு, மிகுந்த நோய், மூப்பு என்கிற சுழலிலிருந்து விடுபட்டோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT