அரும்பும் நினைவுகளில் அவ்வை சண்முகம் - டி.கே.எஸ்.கலைவாணன்; பக்.176; ரூ.180; வானதி பதிப்பகம், சென்னை-17; ✆ 044- 2434 2810.
தமிழ் நாடக உலகில் பெரும் பங்களிப்பு செய்த அவ்வை டி.கே.சண்முகம் குறித்து, 'அமுதசுரபி' இதழில் அவரது மகனான நூலாசிரியர் டி.கே.எஸ்.கலைவாணன் எழுதிய தொடரும், 'கல்கி' இதழுக்கு அளித்த பேட்டியுடன் கூடுதல் விவரங்களுடன் நூலாகியிருக்கிறது.
டி.கே.எஸ்ஸின் இளமைப் பருவம், குடும்பத்தினருடனான நெருக்கம், உறவினர்களிடம் காட்டிய பரிவு, நண்பர்களுடனான நேசம், நாடகக் குழுவைத் தொடங்கியது, நாடகங்களை அரங்கேற்றியது, நாடகக் குழுவினரை தன் குடும்பம்போல நினைத்தது, பெற்ற விருதுகள், பாராட்டுகள் என்று அவரது வாழ்க்கையின் முழு பரிணாமத்தையும் விவரித்துள்ளார் நூலாசிரியர்.
நடிகர், நாடகவியலாளர், இசை ஆர்வலர், புத்தகப் பிரியர், ஆன்மிகவாதி, இலக்கியவாதி, நாட்டுப்பற்றாளர், மனிதநேயம் கொண்டவர் என்று டி.கே.சண்முகத்தின் அறிவும், ஆற்றலும், கலையும், துணிவும் இந்த நூலில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, மறைந்த முதல்வர் எம்ஜிஆர், ஆர்.எம்.வீரப்பன் போன்ற முக்கியத் தலைவர்களுடன் டி.கே.சண்முகம் கொண்டிருந்த நட்பும் விவரிக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு தீர்மானம் குறித்து சட்ட மேலவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, மேலவை உறுப்பினரான டி.கே.சண்முகம் தனது கடந்தகால வாழ்க்கை மதுவினால் பாதிக்கப்பட்டது குறித்து கண்ணீர் மல்க பேசியது, தனது இல்லத்திலேயே 12 ஆயிரம் நூல்களைக் கொண்ட நூலகம் அமைத்திருந்த டி.கே.சண்முகத்தின் மறைவுக்குப் பின்னர், அவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு அளிக்கப்பட்டதும், அவை 'அவ்வை சண்முகம் நினைவு நூலகம்' என்ற பெயரில் இன்றும் இயங்கி வருதல், சுதேசி ஆடைகளை அணிபவர் உள்பட பல ருசிகரத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நடைபெற்ற பல்வேறு நாடகக் காட்சிகள், நாடக விழாக்களில் பங்கேற்ற தலைவர்கள் குறித்த அரிய புகைப்படங்கள் நூலுக்கு மெருகேற்றுகிறது.
நாடகப் பிரியர்கள் வாசிக்கத் தவறவிடக் கூடாத நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.