பரிகாரத் தலங்கள்

விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றும் திருநனிபள்ளி (புஞ்சை)

என்.எஸ். நாராயணசாமி


காவிரி தென்கரை தலங்கள் வரிசையில் 43-வது தலமாக விளங்குவது திருநனிபள்ளி. தற்போது இத்தலம் புஞ்சை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

      இறைவன் பெயர்: நற்றுணையப்பர்
      இறைவி பெயர்: மலையாள் மடந்தை, பர்வதபுத்திரி

திருநனிபள்ளி, தேவார ஆசிரியர் மூவராலும் பாடப்பெற்ற சிறப்பை உடையது. இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 3 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது

மயிலாடுதுறை - திருக்கடவூர் சாலை மார்க்கத்தில் உள்ள செம்பொனார்கோவில் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில்,
புஞ்சை (திருநனிபள்ளி),
கிடாரங்கொண்டான் அஞ்சல்,
மயிலாடுதுறை வட்டம்,
நாகப்பட்டிணம் மாவட்டம் – 609 304.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் பிறந்த தலம் திருநனிபள்ளி. சம்பந்தர் தனது மூன்றாம் வயதில் சிவஞானம் பெற்றதையும், சிவபெருமான் அருளால் திருகோலக்கா திருத்தலத்தில் பொற்றாளம் பெற்றதையும் கேள்விப்பட்ட திருநனிபள்ளியில் வாழும் அந்தணர்கள், சம்பந்தர் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டும் என்று கோரினர். அதற்கு இசைந்த திருஞானசம்பந்தர் தன் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தார். ஆளுடையபிள்ளையார் கால்கள் நோக நடப்பதைக் கண்ட அவரது தந்தை சிவபாத இருதயர், ஞானசம்பந்தரை தனது தோளில் அமர்த்திக்கொண்டு சென்றார்.

திருநனிபள்ளியை நெருங்கியபோது, தந்தையால் இதுதான் திருநனிபள்ளி தலம் என்று கூறக்கேட்டு, "காரைகள் கூகைமுல்லை களவாக ஈகை" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக்கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து இறைவனை வணங்கிப் போற்றினார் சம்பந்தர். இப்பதிகமே பாலை நிலமாக இருந்த திருநனிபள்ளியை அவ்வூர் வாழ் மக்கள் வேண்டுகோளின்படி நெய்தல் நிலமாக மாற்றியருளியது என்று கூறப்படுகிறது. பின்பு நெய்தல் நிலத்தை வயலுமாக ஆக்கி அருளினார்.

தனது தந்தை தோள் மீது அமர்ந்து திருநனிபள்ளி அடைந்ததை சம்பந்தர் தனது பதிகத்தின் கடைசிப் பாடலில் குறிப்பிடுகிறார்

கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி யென்று கருதப்
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன்
இடுபறை யொன்றவத்தர் பியன்மே லிருந்தின் இசையால் உரைத்த பனுவல்
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதல் ஆணை நமதே

பொழிப்புரை

கடல் எல்லையில் உள்ள வெள்ளம்மிக்க கழிகளையும் சோலைகளையும் உடையதாய்க் குவளை மலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும் பதியின்கண் நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களை அறிந்து உர்ந்தவனாய்த் தோன்றிய ஞானமுனிவன் தந்தையார் தோள் மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதிப் பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை நனிபள்ளியை வழிபட வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும்.

இத்தல இறைவன், பாலை நிலத்தை வயலுமாக ஆக்கி அருளியதால் இங்கு இறைவனை வழிபட்டு விவசாயம் செய்பவர்கள், தங்கள் நிலத்தில் நல்ல விளைச்சலைப் பெற்று மகிழ்வார்கள் என்பது ஐதீகம்.

கோவில் அமைப்பு

மூவராலும் பாடப்பெற்ற தலங்களில் ஒன்று என்ற சிறப்பை இத்தலம் பெற்றுள்ளது. இவ்வாலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேலே ரிஷப வாகனத்தின் மீதமர்ந்த சிவன் பார்வதி, மூஞ்சூறு வாகனத்தின் மீதமர்ந்த விநாயகர், மயில் வாகனத்தின் மீதமர்ந்த முருகப் பெருமான் ஆகியோர் சுதைச் சிற்பங்கள் வடிவில் காட்சி அளிக்கின்றனர். உள்ளே கருவறையில் மூலவர் நற்றுணையப்பர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றார். கோஷ்ட மூர்த்தங்களாக அகத்தியர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. கோவிலின் கருவறையும் நல்ல வேலைப்பாடுடையதாக அமைந்துள்ளது. விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம் திருநனிபள்ளி. அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலம் காட்டிய கல்யாணசுந்தரேசர் சந்நிதி ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது.

இங்கு பர்வதபுத்திரி, மலையான்மடந்தை என்ற திருநாமத்தில் இரண்டு அம்மன்கள் அருள்பாலிக்கின்றனர். இங்கு சுவாமியின் வலது பக்கம் அம்மன் வீற்றிருக்கிறார். இது தவிர தனி சந்நிதியில் மூலஸ்தானத்திலேயே அம்மனுடன் கல்யாணசுந்தரேஸ்வரர் அருளுகிறார். உட்பிராகாரத்தில் நால்வர், விநாயகர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன. மகாமண்டபத்தில் நடராசர் சபை உள்ளது. அத்துடன் "நனிபள்ளி கோடி வட்டம்" என்ற மண்டபம் மிகவும் அருமையாக கோயில் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 7-ம் நாள் முதல் 13-ம் நாள் வரை சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது. திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாணசுந்தரரை வணங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், நற்றுணையப்பரை வணங்கினால் செல்வச் செழிப்பு, குழந்தைகளின் படிப்பு சிறக்கும் என்பதும் நம்பிக்கை.

இத்தல இறைவனை வழிபட்டு, அடுத்து வரும் மழைக் காலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தால் நல்ல விளைச்சலைப் பெறலாம் என தல புராணம் கூறுகிறது.

பதிகத்தைப் பாடியவர் குமார வயலூர் திருஞான பாலச்சந்தர் ஓதுவார்

Picture courtesy : www.shivatemples.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT