தினம் ஒரு தேவாரம்

59. ஒருவராய் இரு மூவராய் - பாடல் 5

என். வெங்கடேஸ்வரன்

திங்கள் தங்கிய செஞ்சடை மேலும் ஓர்
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்
பொங்கு சேர் மணல் புன்னையும் ஞாழலும்
தெங்கு சேர் கடம்பூர்க் கரக்கோயிலே
 

விளக்கம்

ஞாழல் = புலி நகம் போன்ற அமைப்பில் உள்ள கொன்றைப் பூ. தெங்கு = தென்னை மரங்கள். மணாளன் = என்றும் மணக்கோலம் கொண்டிருப்பவன். என்றும் மணக்கோலத்தில் இருப்பவன் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு திருவாசகம் அன்னைப் பத்து பாடலை நினைவூட்டுகின்றது. பெருமான்பால் காதல் வயப்பட்ட தலைவியின் நிலையை உணர்ந்த அவளது தோழி, தலைவியின் தாய்க்கு தலைவியின் நிலையை எடுத்துச் சொல்வதாக அமைந்த பதிகம். நித்த மணாளராக இருக்கும் பெருமானது அழகினை விவரிக்க முடியாமல் நிரம்ப அழகியர் என்று கூறுவது நயமானது. அழகியர் என்று சொன்னவுடன், எவருக்கும் அந்த அழகினை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்படும். ஆனால் தலைவியோ, தனது மனம் கவர்ந்த பெருமானை எவரும் காணலாகாது என்ற எண்ணத்தில் உள்ளாள் போலும். எனது சித்தத்துள்ளே இருக்கும் பெருமான் என்று கூறி, பெருமானின் இடத்தை மறைத்தாலும், அவளையும் அறியாமல் பெருமானின் பெயரைச் சொல்லும்போது, தென்னன், பெருந்துறை அத்தன் என்று சொல்லி அவனது இருப்பிடத்தை சொல்லி விடுகின்றாள். காதல் வயப்பட்ட தலைவியின் சிந்தனையும் சொற்களும் அவள் வயமின்றி இருப்பதையும் நாம் இங்கே காண்கின்றோம்.

நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத்து இருப்பரால் அன்னே என்னும்
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும்

பொழிப்புரை

தனது உடலின் இடது பாகத்தில் பார்வதி அன்னையைக் கொண்டுள்ள பெருமான், திங்கள் தங்கியுள்ள தனது செஞ்சடையில் கங்கை நங்கையையும் கொண்டுள்ளார். அவர் என்றும் இளையவராய் மணக்கோலத்தில் காணப்படுகின்றார். அவர் தங்கும் இடம், மணற்பாங்கான நிலத்தில் புன்னை மரங்களும் புலிநகக் கொன்றை மரங்களும் தென்னை மரங்களும் அதிகமாக காணப்படும் கடம்பூர் தலத்தில் உள்ள கரக்கோயிலாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT