தினம் ஒரு தேவாரம்

56. நோதங்கம் இல்லாதார் - பாடல் 3

என். வெங்கடேஸ்வரன்

பூதப் படை உடையார் பொங்கு நூலார் புலித்தோல்
        உடையினார் போர் ஏற்றினார்
வேதத் தொழிலார் விரும்ப நின்றார் விரிசடை மேல் வெண்
                திங்கள் கண்ணி சூடி
ஓதத்து ஒலி கடல்வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு
            அம்பொன் உலகம் ஆண்டு
பாதத்தொடு கழலார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார்
            பந்தணைநல்லூராரே
 

விளக்கம்

வேதத் தொழிலார் = வேதம் ஓதுதலைத் தொழிலாகக் கொண்ட அந்தணர்கள்; பண்டைய இலக்கியங்கள் அந்தணர்களை அறுதொழிலர் என்று குறிப்பிடுகின்றன. வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல், தானம் வாங்குதல் மற்றும் தானம் கொடுத்தல் என்பனவே அந்த ஆறு தொழில்கள் ஆகும். அத்தகைய அந்தணர்கள் வேதத்தில் விதிக்கப்பட்ட நெறியின் வழியே வேள்விகள் செய்து, வேள்வியின் முதல்வனாக சிவபெருமானை கருதி அவருக்கு ஆகுதிகள் வழங்க, அவற்றை ஏற்கும் பெருமான், அந்தணர்கள் விரும்புவதை அளிக்கின்றார். இவ்வாறு பெருமான் அருள் புரிவதை, அப்பர் பிரான் வேதத்தொழிலார் விரும்ப நின்றார் என்று கூறுகின்றார். போரேறு என்ற சொல்லுக்கு போர்க்குணம் கொண்ட எருது என்றும் போரினில் பயன்படுத்திய எருது என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். தருமதேவதை சிவபெருமானை வேண்டி அவரது வாகனமாக அமர்ந்ததை, அறவிடை என்றும் திருமால் திருபுரத்து அரக்கர்களுடன் போர் செய்தபோது தாங்கியதை மறவிடை, போர்விடை என்றும் குறிப்பிடுவார்கள். எனவே போர்விடை என்று இங்கே கூறுவதை, மறவிடையாக பொருள் கொள்வதும் பொருத்தமே ஓதம் = அலைகள்.

பொழிப்புரை

பூதப்படையினை உடைய பெருமான், பொலிந்து விளங்கும் பூணூல் அணிந்தவராகத் திகழ்கின்றார். அவர் புலித்தோலினை ஆடையாக அணிந்தவரும், திரிபுரத்து அரக்கர்களுடன் போர் தொடுத்த சமயத்தில், விடையாக மாறிய திருமாலை வாகனமாகக் கொண்டவரும் ஆவார். வேதம் ஓதுதலைத் தொழிலாகக் கொண்ட அந்தணர்கள், வேதங்களில் விதித்துள்ள முறையின் வழியே, பெருமானை வேத முதல்வனாக ஏற்று வேள்விகள் செய்தபோது, அந்த அந்தணர்கள் வேண்டுவன எல்லாம் அளிக்கும் தன்மையால், அந்த அந்தணர்கள் பெரிதும் விரும்பும் கடவுளாக விளங்குகின்றார். தனது விரிந்த சடையின் மீது வெண்ணிறம் கொண்ட பிறைச் சந்திரனை ஏற்றிக்கொண்டு அவனுக்கு அபயம் அளித்த பெருமான், இடைவிடாது அலைகள் ஒலிக்கும் கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்டு, தேவர்களுக்கு அபயம் அளித்தவராவார். இவ்வாறு தேவர்களுக்கு அபயம் அளித்தமையால், தேவர்களைத் தனது அடிமைகளாக ஏற்று அவர்களது உலகத்தையும் பெருமான் ஆள்கின்றார். தனது திருவடிகளில் கழல் ஆபரணத்தை அணிந்தவராக பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாக ஏற்றவராய், பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்கின்றார். இவர்தான் பந்தணைநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT