தினம் ஒரு தேவாரம்

56. நோதங்கம் இல்லாதார் - பாடல் 9

என். வெங்கடேஸ்வரன்

ஏறேறி ஏழுலகு ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும்
                இறைஞ்ச நின்றார்
நீறேறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார்
              அங்கை அனலும் உண்டார்
ஆறேறு சென்னியார் ஆனஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய்
                அரவும் ஆர்த்தார்
பாறேறு வெண் தலையார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார்
                   பந்தணைநல்லூராரே

விளக்கம்

நீலம் = பெருமானின் கழுத்தினில் நீலநிறத்தை உண்டாக்கிய விடம். நெருப்பு = நெருப்பினில் இடப்படும் அவிர்பாகம். பாறு = பருந்து.

பொழிப்புரை

ஏழுலகும் புகழும் வண்ணம், எருதின் மீதேறி எங்கும் திரியும் பெருமானை, தேவர்கள் எப்பொழுதும் வேண்டி வழிபடுகின்றார்கள். நீறணிந்த மேனியராக காணப்படும் பெருமான், தனது கழுத்தினில் விடத்தை அடைத்து வைத்ததால் நீல நிறமாக மாறிய கழுத்தினை உடையவர் ஆவார். வேள்விகளில் அளிக்கப்படும் அவிர்பாகத்தை விரும்பி ஏற்கும் பெருமான், தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தியவாறு நடமாடுகின்றார். கங்கை ஆற்றினைத் தனது சடையில் ஏற்றுக்கொண்ட பெருமான், பசுவிலிருந்து பெறப்படும், பால் தயிர் நெய் கோமியம் மற்றும் கோசலம் ஐந்து பொருட்களையும் கொண்டு அடியார்கள் நீராட்ட, அதனை மிகவும் உகந்து ஏற்கின்றார். நெருப்பு போன்ற கொடிய விடத்தை கக்கும் ஐந்து தலைகள் கொண்ட நாகத்தினைத் தனது இடையில் இறுகக் கட்டி சுற்றிய பெருமான், புலால் நாற்றம் வீசுவதால் பருந்துகள் சுற்றித் திரியும் பிரமனின் மண்டையோட்டினைக் கையில் ஏந்தியவாறு. பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாக ஏற்று, பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்கின்றார். இவர்தான் பந்தணைநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT