நெ. 1 டெஸ்ட் அணி: பாகிஸ்தானுக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றியை அடைந்த நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை அடைந்துள்ளது நியூசிலாந்து அணி.
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை அடைந்துள்ளது நியூசிலாந்து அணி. இதன்மூலம் நெ.1 அணியாக உயர்ந்துள்ள நியூசி. அணி டெஸ்ட் தொடரை 2-0 என வெற்றி அடைந்துள்ளது.
கிறைஸ்ட்சா்ச் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் நாளிலேயே 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில் அஸாா் அலி மட்டும் அதிகபட்சமாக 97 ரன்கள் அடிக்க, நியூஸிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.
திங்கள்கிழமை முடிவில் 85 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்திருந்தது நியூஸிலாந்து. வில்லியம்சன் 112, நிகோலஸ் 89 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
Advertisement
நேற்று, வில்லியம்சன் இரட்டைச் சதத்தையும் நிகோல்ஸ் சதத்தையும் பூர்த்தி செய்தார்கள். வில்லியம்சன் 238 ரன்களிலும் நிகோல்ஸ் 157 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். டேரில் மிட்செல் 102 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 158.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் அந்த அணி 362 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஹேமில்டனில் 251 ரன்கள் எடுத்தார் கேன் வில்லியம்சன். அடுத்த ஒரு மாதத்தில் மற்றொரு இரட்டைச் சதத்தை எடுத்துள்ளார். கடந்த மூன்று டெஸ்டுகளில் 251, 129, 21, 238 என ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 186 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை அடைந்துள்ளது. கைல் ஜேமிசன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ள நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என வென்று நெ.1 டெஸ்ட் அணியாக உயர்ந்துள்ளது.
கைல் ஜேமிசன் ஆட்ட நாயகன் விருதையும் கேன் வில்லியம்சன் தொடர் நாயகன் விருதையும் பெற்றுள்ளார்கள்.