கனவை விடப் பெரிசு...
ஆறடி ஒரு அங்குல உயரம்,85 கிலோ எடை, உலக அரங்கில் தலைசிறந்த டென்னிஸ் வீரராக அறிமுகமான ஆண்டு 2001. ஆண்டு வருமானம் சுமார் 32,248,542 அமெரிக்க டாலர்கள். இவை ரஃபேல் நடாலின் தன்குறிப்பு தரும் விவரங்கள். யார்
ஆறடி ஒரு அங்குல உயரம்,85 கிலோ எடை, உலக அரங்கில் தலைசிறந்த டென்னிஸ் வீரராக அறிமுகமான ஆண்டு 2001. ஆண்டு வருமானம் சுமார் 32,248,542 அமெரிக்க டாலர்கள். இவை ரஃபேல் நடாலின் தன்குறிப்பு தரும் விவரங்கள்.
யார் இந்த ரஃபேல் நடால்? 24 வயதில் இரண்டாவது முறையாக விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளைஞர்.
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மெஜோர்கன் என்கிற தீவிலுள்ள ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறு நகரம் மேனாக்கர். இந்த நகரில் செபஸ்டியன் நடால் என்பவரின் மகன்தான் ரஃபேல் நடால். இவரது பெரியப்பா மிக்குவன் நடால் ஒரு கால்பந்தாட்ட வீரர். ஸ்பெயின் நாட்டுக்காக விளையாடி இருப்பவர். சிறுவயதில் நடாலுக்கும் முதலில் கால் பந்தாட்டத்தில்தான் நாட்டம் இருந்தது.
இவரது சித்தப்பா டோனி நடால் ஒரு முழு நேர டென்னிஸ் வீரர் என்பதாலோ என்னவோ ரஃபேல் கால்பந்தாட்டத்தைவிட டென்னிஸில் பெயரும் புகழும் அடைய முடியும் என்று இனம் கண்டுகொண்டார்.
விஷயம் தெரியுமா? ரஃபேலின் பெரியப்பாவும் சித்தப்பாவும் போட்டி போட்டுக்கொண்டு மூன்று வயது முதலே ரஃபேலைக் கால்பந்தாட்டத்துக்கும் டென்னிஸýக்கும் தயார் செய்ய முற்பட்டனர்.
எட்டு வயதில், பிராந்திய அளவிலான சிறுவர்களுக்கான டென்னிஸ் பந்தயத்தில் வெற்றி பெற்றபோது ரஃபேல் ஒரு பிரகாசமான கால்பந்தாட்ட வீரராகவும் இனம் காணப்பட்டார். டென்னிஸில்
ஃபோர்ஹாண்ட் ஷாட் என்பது பந்தை அடிக்கும் முக்கியமான முறை. சிறுவன் ரஃபேலுக்கு இந்த ஃபோர்ஹாண்ட் ஷாட்டை இயற்கையாகவே இரண்டு கைகளாலும் அடிப்பதில் திறமை இருப்பதை கவனித்த சித்தப்பா டோனி நடால் ஒரு புத்திசாலித்தனமான முடிவெடுத்தார். டென்னிஸ் விளையாட்டில் இடது கைப்பழக்கம் என்பது சாதகமான அம்சம். எதிரியைச் சட்டென்று வீழ்த்திவிடும் லாவகம் இடது கையால் வலிமையாக அடிக்கும்போது கிடைக்கும். ரஃபேலை இடதுகை விளையாட்டு வீரராக உருவாக்க தலைப்பட்டார் டோனி. ஒரே நேரத்தில் டென்னிஸிலும் கால்பந்திலும் வெற்றிகளைக் குவித்து வந்தார் சிறுவன் ரஃபேல். ஒரு நாள் தந்தை செபாஸ்டியன் தனது மகனை அழைத்தார்.
உனது படிப்புக்குக் குந்தகம் வந்துவிடக்கூடாது, அதனால் ஏதாவது ஒரு விளையாட்டை மட்டும் தேர்ந்தெடுத்து அதிலும் படிப்பிலும் கவனம் செலுத்தினால் போதும் என்றுஅறிவுறுத்தியபோது, ரஃபேல் தேர்ந்தெடுத்தது டென்னிûஸ. அப்போது, சிறுவன் ரஃபேலை வாரி அணைத்துக் கட்டிக் கொண்டு குதூகலித்தாராம் சித்தப்பா டோனி. இன்றுவரை ரஃபேலின் டென்னிஸ் பயிற்சியாளர் சித்தப்பா டோனி நடால்தான்.
÷14 வயதாக இருக்கும்போதே, ரஃபேலின் திறமை வெளியுலகத்துக்குப் பளிச்சிட்டது. ஸ்பானிஷ் டென்னிஸ் பெடரேஷன், பார்சிலோனாவுக்கு வரும்படியும், அங்கே பயிற்சி மேற்கொள்ளலாம் என்றும் ரஃபேலுக்கு அழைப்பு விடுத்தது. அமெரிக்காவிலிருந்து, எல்லா வசதிகளையும் செய்து தருவதாகவும், அங்கேயே தங்கியிருந்து பயிற்சி எடுக்கும்படியும் வற்புறுத்தல்கள் வந்தன.
÷""உனது திறமையை இங்கேயே இருந்து பார்த்துக் கொள்ளலாம். இதற்காக அமெரிக்கா போக வேண்டிய அவசியம் இல்லை. நமது ஊர், நமது தேசம் நமக்குத் தரும் வசதிகளை பயன்படுத்தி நமது ஊருக்கும் தேசத்துக்கும் நீ புகழ் சேர்க்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்!'' - இது தந்தை செபாஸ்டியன் நடாலின் தீர்மானமான முடிவு. மகன் தந்தையின் விருப்பத்துக்கு முகம் சுளிக்காமல் மகிழ்ச்சியுடன் தலைவணங்கினான்.
÷17 வயதில் உலகின் தலைசிறந்த 50 டென்னிஸ் வீரர்களில் ஒருவர். 18 வயதிற்குள் 24 தனிமைப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று ஆண்ட்ரி அகாசியின் சாதனையை முறியடித்த பெருமைக்குரிய வீரர். வெற்றிகள் தொடர்ந்தன.
2005-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் அறிமுக போட்டியில் பட்டம் வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை நடால் பெற்றார்.
தொடர்ந்து 2006, 2007, 2008-ம் ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார் நடால். 2009-ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்ச் ஓபனில் ஸ்வீடனின் ராபின் சோடர்லிங்கிடம் தோற்றார். 2010 பிரெஞ்ச் ஓபனில் ராபின் சோடர்லிங்கை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார் நடால். இதில் ஒரு செட்டை கூட இழக்காமல் நடால் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
÷2009-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
÷2008-ம் ஆண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடால், 2009-ம் ஆண்டு அதை தவறவிட்டார். கால் முட்டியில் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த ஆண்டு ஏற்பட்ட தோல்வியை இந்த ஆண்டு சமன் செய்திருக்கிறார் ரஃபேல்.
÷விம்பிள்டன் சாம்பியனாகி இருக்கும் ரஃபேல் நடால் 24 வயதுக்குள் 8 பெரிய டென்னிஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் நடால் 6-3, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தினார்.
÷ கடந்த 11 மாதங்களில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெற முடியாத அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இரண்டாவது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது பற்றி நடால் என்ன கூறுகிறார்? ""எனது கனவைவிடப் பெரிய வெற்றி!''