முகப்பு
விளையாட்டு

டேவிஸ் கோப்பை: தகுதிச் சுற்று தொடரை வென்றது இந்தியா

சென்னை, செப். 19: சென்னையில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின்தகுதிச் சுற்றுத் தொடரை இந்தியா வென்றது.  டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா - பிரேசில் அணிகளுக்கு இடையேயான தகுதிச் சுற்றுப

Updated On : 20 செப்டம்பர், 2012 at 11:23 PM
பகிர்:

சென்னை, செப். 19: சென்னையில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின்தகுதிச் சுற்றுத் தொடரை இந்தியா வென்றது.

 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா - பிரேசில் அணிகளுக்கு இடையேயான தகுதிச் சுற்றுப் போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் மூன்று நாள்கள் நடைபெற்றன.

முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒற்றையர் போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான சோம்தேவ் தேவ் வர்மன் மற்றும் ரோஹன் போபண்ணா ஆகிய இருவரும் தேல்வியடைந்தனர். இதனால் 2-0 என்ற நிலையில் பிரேசில் அணி முன்னிலை பெற்றது.

Advertisement

இரண்டாம் நாள் நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி பொறுப்பை உணர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை வென்றது. இதன் மூலம் 1-2 என்ற நிலையை இந்தியா எட்டியது.

மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சோம்தேவ் தேவ் வர்மன் மற்றும் பிரேசில் வீரர் தாமஸ் பெல்லுசி இடையே முதல் ஒற்றையர் போட்டி நடைபெற்றது. இதில் சோம்தேவ் எளிதாக வெற்றி பெற்றார்.

சிறப்பான ஆட்டம்: முதல் செட்டில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் டை-பிரேக் வரை ஆட்டம் நீண்டது.

டை-பிரேக்கில் சோம்தேவ் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பிரேக் பாயின்ட்களை பெற்று 7-6 என்ற புள்ளிகளில் செட்டை தன்வசப்படுத்தினார்.

கடும் வெயில்: முதல் செட் டை-பிரேக்கின் போதே தாமஸ் பெல்லுசி கடுமையான வெயில் காரணமாக பாதிக்கப்பட்டார். இதனால் இரண்டாவது செட் தொடக்கம் முதலே அவர் சோர்ந்து காணப்பட்டார். இந்த செட்டின் 2-வது சுற்றின் போதே ஆடையைக் கழற்றிவிட்டு ஈரத் துணி மூலம் உடலின் சூட்டைத் தணித்து வந்தார்.

இதை சாதமாக்கிக் கொண்ட சோம்தேவ் இரண்டு சுற்று முடிவில் 2 பிரேக் பாயின்ட்களைப் பெற்று முன்னிலை பெற்றிருந்தார்.

அப்போதே தான் வெளியேறுவதாக அறிவித்து, சோம்தேவை கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதன் மூலம் சோம்தேவ் எளிதாக வெற்றி பெற்றார். இரண்டாம் சுற்று முடிவின்போது 4-0 என்ற நிலையில் சோம்தேவ் முன்னிலை பெற்றிருந்தார்.

போபண்ணா வெற்றி: இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவதாக நடைபெற்ற ஒற்றையர் போட்டியில் ரோஹன் போபண்ணா பிரேசிலின் ரிகார்டோ மெலோவை தோற்கடித்து வெற்றிவாகை சூடினார்.

6-3, 7-6(7-2), 6-3 என்ற செட் கணக்கில் போட்டியில் அவர் வெற்றி பெற்றார்.

ஆபார ஆட்டம்: முதல் செட்டை 6-3 என்ற புள்ளிகளில் ரோஹன் போபண்ணா எளிதாக கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் 5 சுற்று டை-பிரேக் வரை நீண்டது. டை-பிரேக்கில் 3 பிரேக் பாயின்ட்களை பெற்று 7-6 என்ற கணக்கில் செட்டை போபண்ணா தன்வசப் படுத்தினார்.

மூன்றாவது செட் ஆட்டத்தின் போது சுறுசுறுப்பாக ஆடிய போபண்ணா மீண்டும் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக செட்டை தன்வசப் படுத்தி வெற்றிவாகை சூடினார். போட்டியை வென்றதும் மைதானத்தில் படுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

போட்டி முடிந்தவுடன் லியாண்டர் பயஸ், சோம்தேவ் ஆகியோர் மைதானத்துக்குள் வந்து ரோஹன் போபண்ணாவை தோள் மீது தூக்கி மைதானத்தை வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த வெற்றிகளின் மூலம் இந்தியா 3-2 என முன்னிலை பெற்று தகுதிச் சுற்றுத் தொடரை கைப்பற்றியது.



வெயிலால் வெற்றி பெற்றேன்: சோம்தேவ்

போட்டியில் வெற்றி பெற வெயில் சாதகமாக இருந்தது என சோம்தேவ் தேவ் வர்மன் கூறினார். வெற்றிக்குப் பின் அவர் அளித்த பேட்டி:"வெள்ளிக்கிழமை நடந்த போட்டி 4 மணி 28 நிமிடங்கள் நீண்டதால் மிகவும் சோர்ந்துவிட்டேன். எனவே, ஞாயிற்றுக்கிழமை போட்டியில் நான்கு மணி நேரம் விளையாடக் கூடிய வகையில் என்னை தயார்படுத்தியிருந்தேன்.

ஆட்டத்தின் முதல் செட்டில் தாமஸ் பெல்லுசியின் சர்வீஸ்கள் அபாரமாக இருந்தன.

இருந்தபோதும் டை-பிரேக் எனக்கு திருப்புமுனையாக அமைந்திருந்தது. நான்கு பிரேக் பாயின்ட்களை பெற்று செட்டைக் கைப்பற்ற முடிந்தது.

இறுதியில் வெயில் எனக்கு சாதகமாக அமைந்தது. கடும் வெயிலால் பெல்லுசி சோர்ந்து காணப்பட்டார். இதன் மூலம் இரண்டு பிரேக் பாயின்ட்களை அந்த செட்டில் பெற முடிந்தது' என்றார்.

புள்ளிகளைத் தவறாகக் காட்டிய டிஜிட்டல் அறிவிப்பு பலகை

முதல் நாளைப் போலவே ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தின் போதும் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பலகை தவறான புள்ளிகளைக் காட்டியது.

சென்னையில் டேவிஸ் கோப்பை டென்னிஸின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்ற நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் ஆட்டப் புள்ளிகள் மற்றும் நேரத்தைக் காட்டுவதற்காக எதிர் எதிர் திசைகளில் டிஜிட்டல் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. முதல் நாள் ஆட்டத்தின் போதே டிஜிட்டல் பலகை பல முறை புள்ளிகளைத் தவறாகக் காட்டியது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை நடந்த மூன்றாம் நாள் ஆட்டத்தின் போதும் டிஜிட்டல் பலகை தவறான புள்ளிகளைக் காட்டியது. சோம்தேவ் - பெல்லுசி இடையேயான ஆட்டத்தில் முதல் செட்டின் 5-வது சுற்றின் போது இரண்டு வீரர்களும் 40-40 என சம புள்ளிகளை (டியூஸ்) பெற்றிருந்தனர். ஆனால் டிஜிட்டல் பலகை 0-0 என புள்ளிகளை காட்டியது. மேலும், டை-பிரேக்கின் போது சோம்தேவ் 4-1 என்று முன்னிலை பெற்றிருந்த போது, டிஜிட்டல் பலகை 3-2 எனக் காட்டியது இதனால் ரசிகர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து ரசிகர் ஒருவர் கூறுகையில், "சர்வதேச அளவிலான போட்டி நடைபெறும் போது கூட டிஜிட்டல் பலகை இதுபோல் தவறான புள்ளிகளைக் காட்டுவது வருத்தம் அளிக்கிறது. ரூ. 500 மற்றும் ரூ. 1000 மதிப்பில் டிக்கெட்டுகளை பெற்று ஆர்வத்துடன் ஆட்டத்தைக் காண வந்தோம். இது போல் தவறான அறிவிப்புகளை டிஜிட்டல் பலகை காட்டியதால் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்தோம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.