சறுக்கிய சகோதரர்கள்!
சமீப காலங்களில் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் என்றாலே, அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருபவர்கள் அமெரிக்காவின் பிரையன் சகோதரர்கள்தான். கடந்த 9 ஆண்டுகளாக ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் கோலோச்சி வந்த ம
சமீப காலங்களில் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் என்றாலே, அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருபவர்கள் அமெரிக்காவின் பிரையன் சகோதரர்கள்தான்.
கடந்த 9 ஆண்டுகளாக ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் கோலோச்சி வந்த மைக் பிரையனும், பாப் பிரையனும் சமீப காலமாக சறுக்கலைச் சந்தித்துள்ளனர்.
பிறப்பால் இரட்டையர்களான இவர்கள், தங்களது 6 வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கினர். தங்களுடைய அபரிமிதமான ஆட்டத்தால் தொடர்ந்து ஏராளமான வெற்றிகளை குவித்ததன் மூலம் 1995-ம் ஆண்டு தொழில்முறை டென்னிஸ் வீரர்களாக மாறினர்.
அந்த ஆண்டு நடைபெற்ற கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபனில் முதல்முறையாக பங்கேற்ற அவர்கள், முதல் சுற்றிலேயே தோல்வி கண்டனர். அதன்பிறகு 4 ஆண்டுகள் கழித்து அமெரிக்க ஓபனில் பங்கேற்ற அவர்கள் காலிறுதி வரை முன்னேறினர்.
அதைத்தொடர்ந்து அவர்களின் டென்னிஸ் வாழ்க்கை ஏற்றம் மிகுந்ததாகவே அமைந்தபோதிலும், கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பட்டம் வெல்ல மேலும் 3 ஆண்டுகள் ஆனது. 2003-ல் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதே அவர்களின் முதல் கிராண்ட் ஸ்லாம் வெற்றியாகும்.
அதைத்தொடர்ந்து 2005-ல் அமெரிக்க ஓபன், 2006-ல் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், 2007-ல் ஆஸ்திரேலிய ஓபன், 2008-ல் அமெரிக்க ஓபன், 2009-ல் ஆஸ்திரேலிய ஓபன், 2010-ல் ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன், 2011-ல் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் என 9 ஆண்டுகளில் 11 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றனர் இந்த இரட்டையர்கள். அதுமட்டுமின்றி 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றனர். தொடர் வெற்றிகளால் டென்னிஸ் வரலாற்றில் ஆடவர் இரட்டையர் தரவரிசையில் ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்த பெருமையையும் தங்கள் வசமாக்கினர். இதுவரை வேறு எந்த ஜோடியும் இவ்வளவு காலம் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டதில்லை.
2011 விம்பிள்டன் போட்டியில் பட்டம் வென்றபிறகு இந்த ஜோடியின் டென்னிஸ் வாழ்க்கை, ஆட்டம் காணத் தொடங்கியது. அந்த ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் அப்போதைய நடப்புச் சாம்பியனான பிரையன் சகோதரர்கள் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டனர்.
கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டீபானேக் ஜோடியிடம் தோல்வி கண்டு சாம்பியன் பட்டத்தை இழந்தனர். அதன் எதிரொலியாக தரவரிசையிலும் முதலிடத்தை இழந்தனர்.
இதன்பிறகு ஓரிரு சர்வதேச போட்டிகளில் வென்றனர். சமீபத்தில் முடிவடைந்த பிரெஞ்சு ஓபன் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய பிரையன் சகோதரர்கள், கனடாவின் டேனியல் நெஸ்டர்-பெலாரஸின் மேக்ஸ் மிர்ன்யி ஜோடியிடம் தோல்வி கண்டதன் மூலம் மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
வழக்கமாக எதிர்ஜோடிகளை நேர் செட்களில் தோற்கடிக்கும் பிரையன் சகோதரர்கள், இப்போது எதிர்ஜோடிகளிடம் நேர் செட்களில் தோல்வி கண்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலிய ஓபனில் 6-7, 2-6 என்ற நேர் செட்களில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டீபானேக் ஜோடியிடமும், பிரெஞ்சு ஓபனில் 4-6, 4-6 என்ற நேர் செட்களில் கனடாவின் டேனியல் நெஸ்டர்-பெலாரஸின் மேக்ஸ் மிர்ன்யி ஜோடியிடமும் தோல்வி கண்டனர்.
இந்த தொடர் தோல்விகள் அவர்களின் ஆட்டத்திறன் குறைந்துவிட்டதையே காட்டுவதாக அமைந்துள்ளது. இந்தத் தோல்விகளால் டென்னிஸில் பிரையன்ஸ் சகோதரர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே டென்னிஸ் பிரபலங்களும், ரசிகர்களும் கருதத் தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் வரும் 26-ம் தேதி விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டியின் முன்னோட்டமாக கருதப்படும் இந்தப் போட்டி, பிரையன் சகோதரர்களின் டென்னிஸ் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. விம்பிள்டன் நடப்புச் சாம்பியனான பிரையன் சகோதரர்கள் இந்தப் போட்டியை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே சர்வதேச டென்னிஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
டேனியல் நெஸ்டர்-மேக்ஸ் மிர்ன்யி, லியாண்டர் பயஸ் உள்ளிட்ட முன்னணி ஜோடிகளின் சவால்களுக்கு மத்தியில் மிகுந்த நெருக்கடிக்கு இடையே களம் காண்கின்றனர் இந்த சகோதரர்கள், சோதனையைக் கடந்து சாதிப்பார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒலிம்பிக்கும், பிரையன்ஸ்களும்...
ஒலிம்பிக் போட்டி தொடங்க சுமார் ஒரு மாத காலமே உள்ளது. விம்பிள்டன் போட்டியில் சிறப்பாக ஆடினால் மட்டுமே, ஒலிம்பிக் போட்டியை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும். அது மட்டுமின்றி அவர்களின் கடைசி ஒலிம்பிக் போட்டியாகக்கூட லண்டன் ஒலிம்பிக் போட்டி இருக்கலாம். ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர் டென்னிûஸப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் பிரையன் சகோதரர்கள், இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி (இருவரும் இணைந்து விளையாடினால்) ஜோடிகளுக்கே பதக்கம் வெல்வதற்கான அதிக வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
சர்வதேச டென்னிஸ் போட்டிகளைப் பொறுத்தவரையில் ஒருநாட்டு வீரர், மற்றொரு நாட்டு வீரருடன் இணைந்து இரட்டையர் பிரிவில் களமிறங்கலாம். ஆனால் ஒலிம்பிக் போட்டியைப் பொறுத்தவரையில் சக நாட்டு வீரருடன் மட்டுமே ஒரு வீரர் விளையாட முடியும். அதனால் உலகின் முன்னணி வீரர்களுக்கு இரட்டையர் பிரிவில் சரியான ஜோடி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
அது பிரையன் சகோதரர்களுக்கு சாதகமானதாக இருக்கும் என்றாலும், அவர்கள் இருவரும் இப்போது சுதாரித்துக் கொண்டு தங்களின் ஆட்டத்திறனை மேம்படுத்தாத வரையில் ஒலிம்பிக் பதக்கம் கனவாகவே அமையும்.