தோனி இரட்டைச் சதம்; இந்தியா-515/8
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 141 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 515 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 141 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 515 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 135 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கேப்டன் தோனி 243 பந்துகளில் 5 சிக்ஸர், 22 பவுண்டரிகளுடன் 206 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். விராட் கோலி 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சென்னையில் நடைபெற்று வரும் இப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 380 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட் செய்த இந்தியா 2-வது நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 52 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் 71, கோலி 50 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
சச்சின் 81: மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் சச்சின் மேலும் 10 ரன்கள் சேர்த்த நிலையில் நாதன் லியான் பந்துவீச்சில் போல்டு ஆனார். 159 பந்துகளைச் சந்தித்த அவர் 7 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து கோலியுடன் இணைந்தார் கேப்டன் தோனி. சச்சின் வெளியேறியதால் இந்தியாவை எளிதாக சுருட்டிவிடலாம் என்று நினைத்த ஆஸ்திரேலியர்களை தோனி ஆரம்பம் முதலே பதம்பார்த்தார். மறுமுனையில் கோலியும் சிறப்பாக விளையாட 75 ஓவர்களில் 250 ரன்களைக் கடந்தது இந்தியா.
கோலி சதம்: மிட்செல் ஸ்டார்க் வீசிய 86-வது ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விளாசிய தோனி, 59 பந்துகளில் அரைசதம் கண்டார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 29-வது அரைசதம் ஆகும். இதைத்தொடர்ந்து பட்டின்சன் வீசிய 87-வது ஓவரின் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து டெஸ்ட் போட்டியில் 4-வது சதத்தைப் பூர்த்தி செய்தார் கோலி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த 2-வது சதம் இது. இந்திய அணி 324 ரன்களை எட்டியபோது கடும் போராட்டத்துக்குப் பிறகு இந்த ஜோடியைப் பிரித்தார் நாதன் லியான். 206 பந்துகளைச் சந்தித்த கோலி 1 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்து ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆனார். கோலி-தோனி ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தது.
தோனி சதம்: கோலியைத் தொடர்ந்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 16 ரன்கள் எடுத்த நிலையில், பட்டின்சன் பந்தில் தேவையில்லாமல் ஸ்டெம்பை பறிகொடுத்தார். பட்டின்சன் மிகத் துல்லியமாக பந்தை ஸ்டெம்புக்கு வீசினார். ஆனால் ஜடேஜாவோ, அந்த பந்தை தவறாகக் கணித்து அதைத் தொடாமல் இருப்பதற்காக பேட்டை மேலே தூக்கினார். இதனால் அந்த பந்தால் தகர்க்கப்பட்ட ஸ்டெம்ப், சில அடி தூரம் பறந்தது. பின்னர் வந்த அஸ்வின் 3 ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்பஜன் சிங் களமிறங்கினார். 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஹர்பஜன், சென்னை ரசிகர்களின் பலத்த கரகோஷத்துக்கு இடையே களம்புகுந்தார்.
இதனிடையே மறுமுனையில் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசிய தோனி, பீட்டர் சிடில் வீசிய 106-வது ஓவரின் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து டெஸ்ட் போட்டியில் 6-வது சதத்தைப் (119 பந்துகள்) பூர்த்தி செய்தார். ஹர்பஜன் தன் பங்குக்கு நாதன் லியான் ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசினார். இதன்பிறகு தோனி ஒரு சிக்ஸரை விரட்ட, 112 ஓவர்களில் 400 ரன்களைக் கடந்தது இந்தியா.
தோனி இரட்டைச் சதம்: ஹர்பஜன் சிங் 11 ரன்கள் எடுத்திருந்தபோது ஹென்ரிக்ஸ் பந்துவீச்சில் போல்டு ஆனார். அறிகமுகப் போட்டியில் விளையாடும் ஹென்ரிக்ஸூக்கு ஹர்பஜன்தான் முதல் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து புவனேஸ்வர் குமார் களம்புகுந்தார். ஒரு முனையில் தோனி ரன் குவிப்பில் ஈடுபட, மறுமுனையில் புவனேஸ்வர் குமார் ஆஸ்திரேலிய பெளலர்களை அற்புதமாக எதிர்கொண்டதோடு, நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட தோனி, 185 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக 150 ரன்களை அடித்தார். இதன்பிறகு 3-வது நாளிலேயே இரட்டைச் சதமடிப்பதற்காக தோனி சற்றுவேகமாகவே விளையாடினார்.
இதனால் அடுத்த 46 பந்துகளில் அவர் இரட்டைச் சதத்தை எட்டினார். 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 141 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 515 ரன்கள் குவித்துள்ளது.
தோனி 243 பந்துகளில் 5 சிக்ஸர், 22 பவுண்டரிகளுடன் 206 ரன்களும், புவனேஸ்வர் குமார் 56 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
4-வது நாள் ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. உடை விதிமுறைகளை மீறியதாகக் கூறி, அஸ்வினுக்கு தனது ஊதியத்திலிருந்து 10 சதம் அபராதம் விதிக்கப்பட்டது.
கிளார்க்கின் "கங்னம்' டான்ஸ்
3-வது நாளில் போட்டி எந்தளவுக்கு விறுவிறுப்பாக இருந்ததோ, அதே அளவுக்கு பிரதான பலகையில் இடம்பெற்ற ரசிகர்களின் எஸ்.எம்.எஸ்.களும் சுவாரஸ்மயாக இருந்தன. போட்டி தொடங்கியது முதலே ரசிகர்கள் தங்களின் விருப்பங்களை வீரர்களுடனும், வீரர்கள் தங்களின் விருப்பங்களை ரசிகர்களுடனும் பிரதான ஸ்கோர் பலகையில் இடம்பெற்ற எஸ்.எம்.எஸ்.கள் மூலம் பறிமாறிக் கொண்டனர். அப்போது சச்சினை ஏராளமான வீரர்கள் புகழ்ந்து தள்ளினர். அவரைப் பார்ப்பதற்காகவே மைதானத்துக்கு வந்ததாகத் தெரிவித்தனர்.
சச்சின் ஆட்டமிழந்த பிறகு ரசிகர்கள் தங்கள் கவனத்தை கிளார்க்கின் பக்கம் திருப்பினர். அப்போது சமீபத்தில் சர்வதேச அளவில் ஹிட் அடித்த தென் கொரிய நடனமான கங்னம் டான்ûஸ ஆடுமாறு ரசிகர்கள் கேட்டதைத் தொடர்ந்து, கிளார்க் நடனமாடி இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். கடந்த இரு நாள்களாகவே இந்த எஸ்.எம்.எஸ். மூலம் இந்திய ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டுவிட்டார் கிளார்க். சச்சின் சதத்தை எதிர்பார்த்து வந்த ரசிகர்கள், அவர் 81 ரன்களில் ஆட்டமிழந்தபோதும்கூட, தோனியின் இரட்டைச் சதத்தாலும், கிளார்க்கின் நடனத்தாலும் மிக மகிழ்ச்சியாக போட்டியை கண்டுகளித்தனர்.
கிரிக்கெட் வரலாற்றில் இந்த நாள் போல் இனியொரு நாள் மீண்டும் வராது என்றாலும், போட்டியைக் காண வந்த ரசிகர்கள் மற்றும் கிளார்க்கின் நினைவுகளில் இந்த இனிய நினைவுகள் எப்போதுமே நீங்காது.
சரித்திரம் படைத்த தோனி
இந்தப் போட்டியில் இரட்டைச் சதமடித்த கேப்டன் தோனி, பல்வேறு சாதனைகளை முறியடித்து புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் அவர் சதமடித்தபோது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 117 ரன்களை எடுத்தபோது டெஸ்ட் போட்டியில் 4,000 ரன்களை எட்டினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் 4,000 ரன்களை தொட்ட முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றார். சர்வதேச அளவில் இந்த சாதனையை செய்த 7-வது விக்கெட் கீப்பர் தோனி.
அவர் 164 ரன்களை எட்டியபோது இந்திய கேப்டன் ஒருவர், ஓர் இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ரன் என்ற மைல்கல்லை எட்டினார். முன்னதாக அசாருதீன் எடுத்த 163 ரன்களே இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும்போது ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.
தோனி 193 ரன்களை எட்டியபோது ஓர் இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். முன்னதாக 1964-ல் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் புத்தி குந்தரன் என்பவர் எடுத்த 192 ரன்களே இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.
தோனி 200 ரன்களை எட்டியபோது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார். சென்னை மைதானத்தில் இரட்டைச் சதமடித்த 8-வது வீரர், சர்வதேச அளவில் இரட்டைச் சதமடித்த 7-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமைகளும் அவர் வசமானது.
தற்போது ஆட்டமிழக்காமல் 206 ரன்கள் குவித்துள்ள தோனி, ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் 5-வது இடத்தில் உள்ளார். அவர் இன்னும் 27 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜிம்பாப்வே கீப்பர் ஆண்டி பிளவரின் (232) சாதனையை முறியடித்துவிடுவார்.
ஒரே நாளில் 200 ரன்கள் எடுத்த 2-வது இந்திய வீரர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டைச் சதமடித்த முதல் இந்திய கேப்டன், சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்த முதல் இந்திய வீரர், டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்த 4-வது இந்திய கேப்டன், சர்வதேச அளவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதமடித்த 4-வது வீரர் என்ற சாதனைகளுக்கும் தோனி சொந்தக்காரரானார்.
இந்திய அணியின் கேப்டனாக 44-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தோனி, இதுவரை மொத்தம் 2,667 ரன்களைக் குவித்துள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்கு தலைமை வகித்து விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியை பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தைப் பிடித்தார் தோனி. 47 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை வகித்துள்ள சுநீல் கவாஸ்கர் 3,449 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
220 சர்வதேச போட்டிகளுக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி உள்பட) கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்துள்ள தோனி, தற்போது 8 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இதன்மூலம் 8,000 ரன்களைக் குவித்த முதல் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் தன் வசமாக்கியுள்ளார்.
முக்கியமான நேரத்தில் சிறப்பாக ஆடி இரட்டைச் சதமடித்து இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டு சென்றதன் மூலம் கடந்த சில மாதங்களாக தன் மீது கூறப்பட்டு வந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தோனி.
ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தோனி
இந்தப் போட்டியில் தோனி 112 ரன்கள் எடுத்திருந்தபோது, 4,000 ரன்களை எட்டுவதற்கு 5 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அப்போது சிக்ஸர் அடித்து 4,000 ரன்களை எட்டுமாறு சில ரசிகர்கள் தோனிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வேண்டுகோள் விடுத்தது மைதானத்தில் உள்ள பிரதான ஸ்கோர் பலகையில் இடம்பெற்றது. அப்போது நாதன் லியானின் ஓவரை எதிர்கொண்ட தோனி, முதல் 4 பந்துகளை வீணடித்த நிலையில், 5-வது பந்தில் சிக்ஸர் அடித்து 4,000 ரன்களைக் கடந்ததோடு, ரசிகர்களின் ஆசையையும் நிறைவேற்றினார்.
தோனி ஹெலிகாப்டர்
தோனி பேட் செய்ய வந்தபோது பலத்த கரகோஷத்தோடு ரசிகர்கள் அவரை வரவேற்றனர். அப்போது ரசிகர் ஒருவர் இஎஸ்பின் கிரிக்இன்போ இணையதளத்துக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ். மைதானத்தின் பிரதான ஸ்கோர் பலகையில் இடம்பெற்றது. அதில், தோனி களத்தில் பேட் செய்து கொண்டிருப்பதால் மைதானத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்துக்கு யாரும் காரை நிறுத்த வேண்டாம். அவரின் ஹெலிகாப்டர் சிக்ஸர், உங்கள் காரை பதம்பார்க்கக்கூடும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
உங்கள் சிக்ஸரை எதிர்பார்த்து மெரீனா கடற்கரையில் நிற்கிறேன் என்று ஒரு ரசிகர் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் போர்டு
விக்கெட் வீழ்ச்சி: 1-11 (முரளி விஜய்), 2-12 (சேவாக்), 3-105 (புஜாரா), 4-196 (சச்சின்), 5-324 (கோலி), 6-365 (ஜடேஜா), 7-372 (அஸ்வின்), 8-406 (ஹர்பஜன்).
பந்து வீச்சு: மிட்செல் ஸ்டார்க் 25-3-75-0
ஜேம்ஸ் பட்டின்சன் 26-5-89-4 பீட்டர் சிடில் 22-5-61-0
நாதன் லியான் 40-1-182-3 மோய்சஸ் ஹென்ரிக்ஸ் 17-4-48-1
மைக்கேல் கிளார்க் 8-2-25-0 டேவிட் வார்னர் 3-0-19-0