உலக தடகளப் போட்டிக்கு தகுதி பெறுவதே இலக்கு
ஆசிய தடகளப் போட்டியின் மூலம் உலக தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவதே இலக்கு என்று தமிழக தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ் தெரிவித்தார்.
ஆசிய தடகளப் போட்டியின் மூலம் உலக தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவதே இலக்கு என்று தமிழக தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ் தெரிவித்தார்.
20-வது ஆசிய தடகள விளையாட்டுப் போட்டி வரும் ஜூலை 3 முதல் 7-ம் தேதி வரை மகாராஷ்டிர மாநிலம் புணேவில் நடைபெறுகிறது.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வரும் ஆகஸ்டில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் தகுதிச்சுற்றான ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களில் ஆரோக்கிய ராஜீவும் ஒருவர். இவர் ஆடவர் 400 மீ. ஓட்டத்தில் பங்கேற்கிறார்.
ராணுவ வீரர்: திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா, வழுதியூரைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், உதகையில் உள்ள எம்.ஆர்.சி. ராணுவ மையத்தில் ஹவில்தாராகப் பணியாற்றி வருகிறார்.
ராணுவத்தில் சேர்ந்தபோது நீளம் தாண்டுதல் வீரராக இருந்த ராஜீவ், பயிற்சியாளர் ராம்குமாரின் ஆலோசனையின் பேரில் 400 மீ. ஓட்டத்தின் மீது கவனம் செலுத்தத் தொடங்கினார். அடுத்த ஓர் ஆண்டிலேயே 400 மீ. ஓட்டத்தில் கணிசமான பதக்கங்களை வென்றுள்ளார் ராஜீவ்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:
சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அதற்கான வாய்ப்பு இப்போது எனக்கு கிடைத்துள்ளதாக நினைக்கிறேன்.
ஆசிய தடகளப் போட்டியில் பல்வேறு நாட்டினர் பங்கேற்கவுள்ளனர்.
அவர்களுடன் போட்டி போடும்போது, நல்ல அனுபவம் கிடைப்பதோடு, என்னுடைய ஆட்டத்திறனிலும் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன்.
ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றால் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றுவிட முடியும்.
இதேபோல் 45.4 விநாடிகளில் இலக்கை எட்டும்பட்சத்தில் உலக தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட முடியும். அதனால் என்னால் தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
இளம் வயதில் பெரிய அளவில் வசதி வாய்ப்புகள் இல்லாததால், தடகளத்தில் சாதிக்க முடியாமல் போனது. ராணுவத்தில் பணியில் சேர்ந்த பிறகு, நான் சாதிப்பதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கு சுபேதாராக பணிபுரியும் ராம்குமார்தான் எனக்கு பயிற்சியளித்து வருகிறார். அவரால்தான், இப்போது தொடர்ச்சியாக பதக்கம் வென்றிருக்கிறேன். ஒலிம்பிக் மற்றும் உலக தடகளப் போட்டிகளில் தங்கம் வெல்ல வேண்டும். உலக சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.
ஆசிய கிராண் ட்ப்ரீ தடகளப் போட்டிகளில் பங்கேற்று 3 பதக்கங்கள் வென்றதால் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றுள்ளேன்.
சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டிக்கு முன்னதாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன்.
அதனால் அந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கமே வெல்ல முடிந்தது என்றார்.
ராஜீவ் வென்ற பதக்கங்கள்: 22 வயதாகும் ஆரோக்கிய ராஜீவ், கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற தேசிய ஓபன் தடகளப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். கடந்த மே மாதம் தாய்லாந்து மற்றும் இலங்கையில் நடைபெற்ற ஆகிய கிராண்ட்ப்ரீ போட்டிகளில் இரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் வெண்கலம் வென்றார்.