விளையாட்டு

அங்கித் கேஷ்ரியின் மரணத்தால் மனமுடைந்து போயிருக்கும் சகவீரர் சவுரவ் மண்டல்!

சவுரவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் அவர் வாழ்க்கையில் இப்படியொரு துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதிலிருந்து அவர் எப்படி மீள்வார்...

சநகன்

இந்திய கிரிக்கெட் உலகை அதிர வைத்த பெங்கால் இளம் கிரிக்கெட் வீரர், அங்கித் கேஷ்ரியின் மரணத்தில் மற்றொரு கிரிக்கெட் வீரரும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார். சவுரவ் மண்டல். அவர்தான் சம்பவத்தன்று, கேட்ச் பிடிப்பதற்காக கேஷ்ரியுடன் மோதியவர்.

30 வயது சவுரவ் மண்டல், சென்ற வருடம் பெங்கால் ரஞ்சி அணியில் இடம்பிடித்தார். ஈஸ்ட் பெங்கால் கிளப்புக்காக தொடர்ந்து ஆடிவருபவர். இப்போது அவர் வாழ்க்கையே மாறிப் போய்விட்டது. சவுரவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் அவர் வாழ்க்கையில் இப்படியொரு துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதிலிருந்து அவர் எப்படி மீள்வார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை, கொல்கத்தா ஜதாவ்புர் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் டிவிஷன் மேட்ச் ஒன்றில், ஈஸ்ட் பெங்கால் மற்றும் பொவானிபோர் ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்கால் அணியின் முன்னாள் U19 கிரிக்கெட் வீரரான கேஷ்ரி விளையாடவில்லை. ட்வெல்த்மேனாக இருந்தார். ஈஸ்ட் பெங்கால் அணியின் அர்நாப் மண்டி என்கிற வீரருக்கு மாற்றாக கேஷ்ரி, ஃபீல்டிங் செய்ய களத்தில் இறங்கினார். பொவானிபோர் அணியின் 44-வது ஓவரை சவுரவ் மண்டல் வீசினார். அப்போது பேட்ஸ்மேன் அடித்த ஷாட்டை சவுரவும் டீப் கவரில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கேஷ்ரியும் கேட்ச் பிடிக்க முயன்றார்கள். இருவரும் ஒருவரையொருவர் கவனிக்காததால் கடுமையாக மோதிக்கொண்டார்கள். மண்டலின் முழங்கால் கேஷ்ரியின் தலை மற்றும் கழுத்தில் மோதியது. இருவரும் பலமாக அடிபட்டு கீழே விழுந்தார்கள். கேஷ்ரி அப்போதே நினைவிழந்தார். அவர் வாயிலிருந்து ரத்தம் ஒழுகியது. ஆம்புலன்ஸ் மூலமாக அருகே இருந்த மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டார். திங்கள் அன்று எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார் கேஷ்ரி.

சென்ற வருடம் ஆஸி. வீரர் பிலிப் ஹியூஸின் மரணத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளானவர், பவுன்சர் பந்தை வீசிய வேகப்பந்து வீச்சாளர் சீன் அபாட். தீவிர கவுன்சிலிங்குக்குப் பிறகே அபாட்டால் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடிந்தது. அதேபோலொரு நிலைமையில் தான் இருக்கிறார் சவுரவ் மண்டல். இப்போது பெங்கால் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் நிர்வாகிகளும் சவுரவுக்கு ஆறுதலாக உள்ளார்கள். அவரை இந்தப் பாதிப்பிலிருந்து மீட்டுக்கொண்டுவர முயற்சி செய்துவருகிறார்கள்.

“அங்கித்துக்குக் காயம் ஏற்பட்டபோதே உடைந்துபோய்விட்டார் சவுரவ். அவரை மீண்டும் மைதானத்துக்குக் கொண்டு வருவது ஒரு பெரிய சவால்தான். கேஷ்ரி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சவுரவ் சென்றபோது சங்கடமான கேள்விகளை எதிர்கொண்டார். ஏன் அவ்வளவு வேகமாக கேட்ச் பிடிக்க ஓடினாய் என்றெல்லாம் கேட்கப்பட்டதால் மிகவும் துயரம் அடைந்தார். அவரைத் தேற்றவே முடியவில்லை. செல்போனை ஆஃப் செய்துவிடு. மீடியாவிடம் பேசாதே என்று அறிவுரை கூறியிருக்கிறோம். இந்தத் துயரச் சம்பவத்திலிருந்து மீண்டுவர அவருக்கு சிறிது காலம் தேவைப்படும்.” என்கிறார் மூத்த ஈஸ்ட் பெங்கால் சுழற்பந்து வீச்சாளர், ஷிவ் சாகர் சிங்.

சம்பவம் நடந்த அன்று ஷிவ் சாகர் சிங்கும் மைதானத்தில் இருந்தார். கேஷ்ரி சுயநினைவை இழந்த தருணத்தில், கேஷ்ரியின் வாயுடன் வாய் வைத்து ஓரளவுக்கு மூச்சை வரவைத்தார். அதன்பிறகுதான் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் கேஷ்ரி. ஷிவ் சாகர் மேலும் கூறும்போது, “நாங்கள் அனைவரும் சவுரவுக்கு ஆதரவாக இருப்போம். பெங்கால் கிரிக்கெட்டும் சவுரவின் பின்னால் இருக்கும். இதிலிருந்து மீண்டு வர அவர்தான் முயற்சி செய்யவேண்டும். ஆனால் இந்தச் சம்பவம் அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.  

கிழக்கு பெங்கால் பயிற்சியாளர் பிரணாப் நண்டி, “சவுரவ் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்புமாறு நாம் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏன் அவரால் முடியாது. காலம் தான் இதற்கு நல்ல மருந்தாக அமையவேண்டும். இப்போதைக்கு அவர் மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார். அவர் மீண்டுவர நாம் அனுமதிக்கவேண்டும். மருத்துவமனையில் அவரிடம் சிலர் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டார்கள். அதனால் நான் அவரை வீட்டுக்குப் போகச் சொன்னேன். மூன்று அல்லது நான்கு நாள்களுக்குப் பிறகு, அவரை கிளப்புக்கு வரச் சொல்வேன். நானும் கேப்டன் சுவோஜித் பானர்ஜியும் மற்றும் இதர சீனியர் வீரர்களும் சவுரவுக்கு கவுன்சிலிங் கொடுப்போம். “ என்றார். 

சவுரவின் தந்தை பாபாசிந்து மிகவும் கவலையுடன் சவுரவ் பற்றி தெரிவித்தாவது:  “சவுரவ் சாப்பிட மறுக்கிறார். விரைவில் அவருக்குத் திருமணம் ஆகவுள்ளது. இந்த நிலையில் அவர் வாழ்க்கையில் இது நடந்திருப்பது பெரிய அடி. நாங்கள் மிகவும் கவலையுடன் உள்ளோம்” என்றார்.

பெங்கால் கிரிக்கெட் வாரியம், கேஷ்ரியின் குடும்பம் மற்றும் சவுரவ் மண்டல் ஆகியோருக்கு வேண்டிய உதவிகளைச் செய்திடத் தயாராக உள்ளது. தற்போது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கேஷ்ரியின் குடும்பத்துக்கு நிதி உதவியும் கேஷ்ரியின் அண்ணனுக்கு ஒரு வேலையும் வழங்கவும் முடிவெடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT