இங்கிலாந்து கிளப் கிரிக்கெட் போட்டியின்போது, பவுலர் வீசிய பந்து நெஞ்சில் பலமாகத் தாக்கியதால் பாவலன் பத்மநாதன் என்கிற 24 வயது தமிழ் வம்சாவளி இங்கிலாந்து வீரர் மரணம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஹார்ட்லே கல்லுாரியில் பட்டப்படிப்பு முடித்த பாவலன், இங்கிலாந்தில் நடக்கும் பிரிட்டிஷ் தமிழ் லீக் போட்டியில் கலந்துகொண்டார். அவர் மணிபே பாரிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்காக கடந்த 5-ம் தேதி விளையாடினார்.
சர்ரேவில் நடந்த அந்தப் போட்டியின் போது பேட்டிங் செய்து கொண்டிருந்த பாவலன் நெஞ்சில் எதிரணி பவுலர் வீசிய பந்து வேகமாகத் தாக்கியது. இதனால் அவர் வலியால் துடிக்க ஆரம்பித்தார். உடனே மறுமுனையில் இருந்த வீரர், பாவலனிடம், எதுவும் பிரச்னையில்லையே என்று கேட்டுள்ளார். அதற்கு, தான் நன்றாக இருப்பதாக பாவலன் செய்கை செய்துள்ளார். ஆனால் சில அடிகள் முன்னே சென்ற அவர், சுருண்டு கீழே விழுந்துவிட்டார். உடனடியாக அவருக்குக் களத்தில் முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. அதன் பின்னர் அவர் கிங்ஸ்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி இரண்டு நாள்கள் கழித்து மரணமடைந்துள்ளார்.
மணிபே பாரிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளிட்ட இங்கிலாந்தில் உள்ள பல்வேறு கிரிக்கெட் கிளப்புகள் பாவலனின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்டு பிறகு மருத்துவமனையில் மரணமடைந்தார். அதேபோலொரு சம்பவத்தில் பாவலனும் மரணம் அடைந்துள்ளது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.