விளையாட்டு

70 பயிற்சியாளர் பணியிடங்கள் காலி: விளையாட்டு விடுதி மாணவர்கள் தவிப்பு

தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், விளையாட்டு விடுதிகளில்

ஆ. நங்கையார் மணி

தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், விளையாட்டு விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 32 மாவட்டங்களிலும் விளையாட்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும், பள்ளி மாணவர்கள் தங்கி பயிற்சி பெறுவதற்கான 30 விளையாட்டு விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.
 தடகளம், கால்பந்து, நீச்சல், ஹாக்கி, வாலிபால், குத்துச் சண்டை, கூடைப்பந்து, கிரிக்கெட், கையுந்து பந்து, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், வலு தூக்குதல், கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் மாணவர்கள் பயிற்சி பெற தமிழகம் முழுவதும் 18 விடுதிகள் உள்ளன.
 இதேபோல், மாணவிகளுக்கு தடகளம், வாலிபால், கால்பந்து, ஹாக்கி, வாள்சண்டை, கைப்பந்து, இறகுப்பந்து, கபடி, வலுதூக்குதல், டென்னிஸ், கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிப்பதற்காக 12 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
 விளையாட்டு ஆர்வம் உள்ள 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களை தேர்வு செய்து, இந்த விடுதிகளில் தங்க வைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
 30 விளையாட்டு விடுதிகளில் 1200-க்கும் மேற்பட்ட மாணவர்களும், சுமார் 850 மாணவிகளும் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தங்கியுள்ளனர். இவர்களுக்கு உணவு, தங்குமிடம், விளையாட்டுச் சீருடை, விளையாட்டு பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. பெற்றோர்கள் தரப்பில் கல்விக் கட்டணம் மட்டுமே செலுத்தப்படுகிறது.
 இந்த நிலையில், பல விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் இல்லாததால், எதிர்காலத்தில் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், விடுதியில் சேர்ந்த மாணவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வு அடைந்துள்ளனர்.
 போட்டியில் வெல்வதற்கான உத்திகளையும், குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை கடந்து சாதனை புரிவதற்கும் பயிற்சியாளரின் வழிகாட்டுதல் அவசியம். ஆனால், பயிற்சியாளர் இல்லாததால், உணவுக் கூடமாகவும், தங்குமிடமாகவும் மட்டுமே விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருவதாக மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் தலா 4 முதல் 5 பயிற்சியாளர் பணியிடங்கள் உள்ளன. தற்போதைய நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 முதல் 3 பயிற்சியாளர்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. 70-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால், விடுதி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
 இதுகுறித்து விளையாட்டு அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, "ஒருசில மாவட்டத்திற்கு அதிகபட்சமாக 7 பயிற்சியாளர் பணியிடங்கள் உள்ளன. தற்போதைய நிலையில் சராசரியாக ஒரு மாவட்டத்தில் 2 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். புதிய பயிற்சியாளர்கள் நியமனத்திற்கு, தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வந்த பயிற்சியாளர்கள் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர். இதன் காரணமாக 85 பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது.
 இந்த பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து, பயிற்சியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, இளைஞர் நல அமைச்சகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக' தெரிவித்தார்.
நீச்சல் பயிற்சியாளரும் இல்லை
 தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட விளையாட்டு அரங்குகளில் நீச்சல் குளங்கள் உள்ளன. இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்ட விளையாட்டு அரங்குகளில் பயிற்சியாளர் இல்லை. இதனால், நீச்சல் வீரர்கள் மட்டுமின்றி, நீச்சல் கற்றுக் கொள்ள வரும் சிறுவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT