தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 68 ஓவர்களில் 201 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக எல்கர் 8 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்தது. டியான் எல்கர் 13, ஆம்லா 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
தென் ஆப்பிரிக்க அணி இந்திய சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை எல்கரும் ஆம்லாவும் சிறப்பாக ஆடினார்கள். அதிலும் ஆம்லாவின் ஆட்டம், இதுபோன்ற ஒரு ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று பாடம் கற்பிப்பதுபோல இருந்தது. 38-வது ஓவரில் எல்கரின் விக்கெட்டைப் பறித்தார் அஸ்வின். எல்கர் 37 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு மிகவும் வலுவான தடுப்பாட்டத்தினால் இந்திய அணியினரை சோர்வு கொள்ள வைத்த ஆம்லா, அஸ்வினின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். அவர் 43 ரன்கள் மட்டுமே எடுத்தாலும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருந்தது. பலருடைய பாராட்டுகளைப் பெற்றது.
அதே ஓவரில், 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் விலாஸின் விக்கெட் அஸ்வினுக்குக் கிடைத்தது.
இந்தப் போட்டியிலும் அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ள டி வில்லியர்ஸ் மிகவும் தடுமாறினார். இதனால் சிலமுறை அவர் தன் அதிரடி ஆட்டத்தை உபயோகப்படுத்தவேண்டிய நிலைமையும் உருவானது. டி வில்லியர்ஸ் 7 ரன்களில் இருந்தபோது ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் அது நோ பாலாக ஆனதால் டி வில்லியர்ஸ் தப்பிப் பிழைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா வீசிய முதல் நோ பால் என்பதுதான் இன்னும் துரதிர்ஷ்டம்.
உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி, 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. டி வில்லியர்ஸ் 26, பிளாண்டர் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தெ.ஆ அணி முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் பின்தங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.