சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின்போது 2-வது டெஸ்டுடன் தொடரிலிருந்து விலகினார் ஹேடின். அவருடைய 4 வயது மகளுக்குப் புற்றுநோய் பாதிப்பு உள்ளதால் அவருக்குத் துணையாக இருப்பதற்காக அப்படியொரு முடிவை எடுத்தார். இன்று தன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘ஆஸ்திரேலியாவில் உள்ள எந்தவொரு தந்தையைப் போலவே நானும் உள்ளேன். எல்லோருக்கும் குடும்பம் தான் முதலில் முக்கியம். நானும் அதுபோலத்தான். மகளின் சிகிச்சை இப்போது சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. என்னால் இன்னும் மூன்று டெஸ்டுகள் ஆடமுடியும் என்று மனைவி கூறினார். ஆனால் என் வாய்ப்பை இழக்கும் நிலையை நானே உருவாக்கினேன். அதற்காக நான் சிறிதும் வருத்தப்படப் போவதில்லை. ஏனெனில் வேறொரு இடத்துக்கு நான் தேவைப்படுகிறேன். அதுதான் எனக்கு முக்கியம்’ என்று செய்தியாளர் சந்திப்பில் ஹேடின் கூறினார்.
66 டெஸ்டுகள் ஆடியுள்ள ஹேடின், 3266 ரன்கள் எடுத்துள்ளார். 270 டிஸ்மிஸல்களுடன் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார். ஆடம் கில்கிறிஸ்ட், ஐயன் ஹீலி, ராட் மார்ஷ் ஆகியோர் ஹேடினை விடவும் அதிக டிஸ்மிஸல்களை நிகழ்த்தியுள்ளார்கள்.
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்குப் பிறகு மைக்கேல் கிளார்க், ரியான் ஹாரிஸ், ஷேன் வாட்சன், கிரிஸ் ரோஜர்ஸ், ஹேடின் என 5 ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.