தோனிக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை!
கடந்த 2013ம் ஆண்டு வெளியான ஒரு பிசினஸ் மாத இதழில் தோனியை விஷ்ணு போல சித்தரித்து அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு வெளியான பிசினஸ் மாத இதழ் ஒன்றில் தோனியை விஷ்ணு போல சித்தரித்து அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தோனிக்கு பல கைகள் இருப்பது போலவும் ஒவ்வொரு கையிலும் ஒரு வியாபாரப் பொருளை வைத்திருப்பது போலவும் அட்டைப் படம் இருந்தது. இதில் ஷூ ஒன்றும் இடம்பெற்றிருந்தது. ‘God of Big Deals’ என்று கட்டுரைக்குத் தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரம் இந்துக் கடவுளை அவமதிப்பது போல இருக்கிறது என்று சிவசேனா இந்துஸ்தான் அமைப்பை சேர்ந்த ராஜிந்தர் சிங் ராஜா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கர்நாடக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
Advertisement
இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தோனி மனு ஒன்றை தாக்கல் செய்தார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியிருந்தார். ‘நான் விஷ்ணு போல புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கவில்லை. இது தொடர்பாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று தன் மனுவில் தோனி குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.