லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த இணையத் தொடரை வெளியிட வேண்டாமென மத்திய அரசு அறிவுறுத்தல்...
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த இணையத் தொடரைத் வெளியிட வேண்டாம் என ஜி5 ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பிரபல பாடகர் சித்து மூஸேவாலாவின் படுகொலை உள்ளிட்ட ஏராளமான குற்றவழக்குகளில் தொடர்புடைய தாதா லாரன்ஸ் பிஷ்னோய்யின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “லாரன்ஸ் ஆஃப் பஞ்சாப்” எனும் புதிய இணையத் தொடர் வரும் ஏப். 27 ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, லாரன்ஸ் பிஷ்னோய் போன்ற கொடூரமான நபர்கள் போற்றப்படக் கூடாது எனவும்; இந்த இணையத் தொடருக்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமரிந்தர் சிங் ராஜா வாரிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த வியாழக்கிழமை (ஏப். 23) அன்று கடிதம் எழுதியிருந்தார்.
Advertisement
இத்துடன், இந்த விவகாரம் குறித்து அமரிந்தர் சிங் ராஜா வாரிங் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளார். மேலும், இந்த தொடரைத் தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தி சமூக நல ஆர்வலர்கள் சிலரும் பொதுநல வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், தாதாக்கள் மற்றும் குற்றவாளிகள் போன்ற நபர்கள் குறித்த திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை வெளியிட வேண்டாமென ஜி5 ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் இன்று அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகத்தின் துணை இயக்குநர் க்ஷிதிஜ் அகர்வால் வெளியிட்ட அறிக்கையில்,
“வன்முறையைத் தூண்டக்கூடிய அல்லது பொது அமைதிக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் கும்பல் தலைவர்கள், குற்றவாளிகள் குறித்த வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் மற்றும் ஆவணப்படங்களை வெளியிடுவதற்கு முன்னதாக போதிய முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு ஓடிடி தளங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த இணையத் தொடரில் நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களின் சித்திரிப்புக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக பஞ்சாப் மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளதாகவும்; இதனால், குற்றவாளிகளைப் போற்றக் கூடிய உள்ளடகங்களைத் தவிர்க்க வேண்டுமெனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.