திருப்பத்தூர் நகரப் பேருந்து நிலையத்துக்கு அருகே மிகப்பெரிய நகைக் கடை ஒன்று இருந்தது. அந்தக் கடைக்குள் வெள்ளையும் தொப்பையும் நிரம்பிய பெரியவர் ஒருவர் முதலாளியாக உட்கார்ந்துகொண்டிருந்தார். வெள்ளை நிற ஜிப்பாவும், முகம் நிறைய பவுடரும் அவரின் ஆடம்பரத்தைக் காட்டின. அவரின் தலைக்கு மேலே சுவரில் சமூகசேவகர் எஸ்.பவர்லால், கொடை வள்ளல் என்ற பெயர் போட்ட வண்ணப் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அவருக்கு வழங்கப்பட்ட கேடயங்களும் நினைவுப் பரிசுகளும் கடை முழுவதும் மாட்டப்பட்டிருந்தன.
வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கிய நேரத்தில் தனது செல்பேசியைப் பார்த்து,
‘‘இதோ பாருங்கய்யா வேடிக்கையை, இந்தியா ஹாக்கியில தோத்துடுச்சாம். இவனுங்களுக்குப் போய் பெரிய பில்டப் வேற. பேசாமல் சச்சினையும் கோலியையும் ஹாக்கி டீம்ல சேத்துக்கலாம்’’ - ஏளனமாகச் சிரித்ததைப் பார்த்து, பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த அவருடைய மகனும் சிரித்தான்.
முதலாளி மகனின் கழுத்திலும் மணிகட்டிலும் விரல்களிலும் தங்க நகைகள் மின்னின.
அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கடைக்குள் நுழைந்தார்.
‘‘என்னம்மா வேணும்?’’
‘‘சார், அடகு வைக்கணும், கம்மல் கொண்டு வந்திருக்கேன்’’
‘‘எவ்வளவு வேணும்?’’
‘‘எவ்வளவு வருமோ அவ்ளோ கொடுங்க’’‘‘இது என்ன உடைஞ்ச மாதிரி இருக்கு? சரி ஒரு 2500 ரூபாய் வரும்’’
‘‘2 கிராமுங்க. எனக்கு 4000 வேணுங்க’’
‘‘அதெல்லாம் முடியாதுமா’’
பவர்லால் தலையிட்டார்.
‘‘எதுக்குமா உனக்குப் பணம்?’’
‘‘என் மகன் வாலிபால் போட்டியில மாவட்ட அளவில செலக்ட் ஆகியிருக்கான். ஸ்டேட் போட்டிக்காக சென்னைக்கு போறான். அதுக்குதான்…’’
‘‘சரி, 3000 வேணும்னாலும் தரேன். மாசத்துக்கு வட்டி 100 ரூபாய் தெரியுமா?’’
2900 ரூபாயை வாங்கிக்கொண்டு கிளம்ப முற்பட்டபோது,
‘‘சில்லறை இருந்தா 5 ரூபாய் கொடும்மா, ரசீது புத்தகத்துக்கு’’
5 ரூபாயைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள்.
அம்மாவின் வருகையை எதிர்பார்த்து, வீட்டுக்கு வெளியே அவளுடைய 15 வயது மகன் வேல்முருகன், பைகளைத் தூக்கிக்கொண்டு தயாராக இருந்தான்.
‘‘கார்ல போகப்போற. நல்லா தூங்கிட்டு போ. அப்பதான், காலைல நல்லா விளையாட முடியும்’’
‘‘சரிம்மா’’
அப்போது வீட்டுக்கு வெளியே 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தார்கள்.
‘‘எங்கம்மா உங்க வீட்டுக்காரர் முனியப்பன், வீட்டுல இல்லையா?’’
‘‘இல்லீங்க. அவர் கார் கூட்டிட்டு வர்றதுக்காக பஸ் ஸ்டாண்ட் போயிருக்கார்’’
‘‘எதுக்கு கார்?’’
‘‘என் பையன் ஸ்போர்ட்ஸுக்காக சென்னைக்கு போறான். அதுக்குதான்...’’
‘‘போன வருஷம் ஏதோ வாலிபால் மேட்ச்னு சொல்லிட்டு 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிட்டுப் போனாரு. 5 மாதமா வட்டியே வரல. மாதம் 400 ரூபாய். 5 மாதத்துக்கு 2000 ஆவுது. கொடுங்க’’
‘‘வட்டி மட்டும் 2000 ரூபாயா?’’
‘‘என்னம்மா நீ, அவனவன் 10 ரூபா 5 ரூபான்னு வட்டி வாங்கறான். 4 ரூபாய்க்கு இப்படி சொல்ற. அடகுக் கடையில கொஞ்சம் முன்னாடி உங்கள பார்த்தேன். அங்க மட்டும் கேள்வி கேட்காம 3 ரூபாய் வட்டியைக் கொடுத்துட்டு வர்றீங்க. நாங்க ஒரே ஒரு ரூபாய்தான அதிகமா கேட்கிறோம்’’
‘‘சார், என் பையன் இப்போ ஸ்டேட் விளையாடப் போறான். அடுத்த வாரம் தர்றோம்’’
‘‘அதெல்லாம் முடியாதும்மா. உங்களுக்கு லட்சுமிபதி பைனான்ஸ் பத்தி தெரியாது. மாசாமாசம் வட்டி தரணும். இல்லேன்னா வக்கீல் நோட்டீஸ் வந்துடும். ஏதோ உன் புள்ளை மூஞ்சிய பார்த்து 5 மாதம் விட்டுட்டோம். கொஞ்சம் புரிஞ்சிக்குங்க’’
தன் மகனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
‘‘அம்மா, நான் பஸ்லயே போறேம்மா’’
2000 ரூபாயை எடுத்து அவர்கள் கையில் கொடுத்தாள்.
‘‘இது வட்டி மட்டும்தாம்மா. அசல் அப்படியே இருக்கு. சென்னைக்குப் போய்ட்டு வந்ததும் கொடுத்துடுங்க. உங்க புள்ள ஸ்போர்ட்ஸுக்கு போறதால ஒருநாள் வேணும்னா டைம் தர்ரோம். நம்ம ஊர் புள்ள, ஜெயிச்சா எங்களுக்கும் பெருமைதானே?’’
பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்கள் கிளம்பினார்கள்.
முனியப்பன் காரில் வந்து இறங்கினார்.
‘‘என்னங்க, பையன் பஸ்லயே போறானாம்’’
‘‘காரைக் கூட்டிக்கினு வந்துட்டேன். பஸ்ல போனா பையன் களைச்சிப்போயிடுவான். காலையில சரியா விளையாட முடியாது’’
‘‘டிரெய்ன்ல போறேம்பா’’
‘‘ரிசர்வேஷன் பண்ணலப்பா. நின்னுட்டு போனா இன்னும் களைப்பா இருக்கும். நீ கார்ல போ. ஏன், நீ போய் கம்மலை அடகு வெக்கலையா?’’
கார் டிரைவர் இவர்கள் பேசுவதை, கேட்டும் கேட்காதவர்போல் நின்றுகொண்டிருந்தார்.
‘‘சரிப்பா, கார் வேணாம் நீங்க கிளம்புங்க’’
‘‘சாவு கிராக்கி. உன்னால நான் வேற கிராக்கியை விட்டுட்டேன். அதெல்லாம் தெரியாது. நீங்க ஒருநாள் வாடகை கொடுத்துத்தான் ஆகணும்’’
‘‘இல்லப்பா, முடியாதுப்பா’’
‘‘சரி, 500 கொடுங்க’’
எப்படியோ பேசி, 200 ரூபாயைக் கொடுத்தனுப்பினார்கள்.
வேல்முருகனும் அவனுடைய அப்பாவும், பேருந்தில் சென்னைக்குப் பயணமானார்கள்.
மறுநாள், திருமண நாள்போல் இருக்கிறது. பேருந்தில் நிறைய கூட்டம். இருக்கைகளின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாகப் பயணிகளை ஏற்றிக்கொண்டார் நடத்துநர். பயணிகள் அதிகமாக இருந்ததால், விளக்குகள் எதையும் அணைக்கவில்லை. பஸ்ஸில் காது கிழியும் அளவுக்கு பாடலை ‘ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்’ ஓட்டுநர். இது போதாதென்று, பயணிகளின் பேச்சுக் குரல். மொத்தத்தில், ஓடும் சந்தைக்கடைபோல் இருந்தது இந்தப் பேருந்து.
தன் மகனுக்குத் தூக்கம் போய்விடுமே என்ற கவலை முனியப்பனுக்கு மட்டும்தான் இருந்தது.
எப்படியோ ஒருவழியாகச் சென்னை வந்து சேர்ந்தார்கள்.
காலையில் போட்டி தொடங்கியது. வேல்முருகனால் குளிக்கக்கூட நேரம் கிடைக்கவில்லை, வசதியும் இல்லை.
இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமத் தேசியப் போட்டியில் பங்குபெறுவதற்கான தேர்வுப் போட்டி தொடங்கியது.
யாரும் எதிர்பார்க்காத திறமையை வேல்முருகன் வெளிப்படுத்தினான்.
தொடக்கச் சுற்றுகளில், வேல்முருகனின் திறமை வியப்புக்கு உரிய வகையில் வெளிப்பட்டது.
இந்தச் சின்ன வயதிலேயே இவனால் 2 அடியைவிட உயரமாகத் தரையிலிருந்து ஏறிக் குதிக்க முடிந்தது. இவன் பந்தை அடித்த அடிகள், அனைவருக்கும் ஆச்சரியத்தை வரவழைத்தன.
இந்தக் கைப்பந்து (வாலிபால்) போட்டியில், பந்தை அடித்துத் தாக்குபவர்க்கு எதிராகத் தடுப்பதற்காகவும் கைகளைக் காண்பிப்பார்கள். வலைக்கு மேலே நடக்கும் இந்த யுத்தத்தில், வேல்முருகனின் கையே ஓங்கியிருந்தது. தடுக்க நினைப்பவர்களால் வேல்முருகனின் ஏறிக் குதிக்கும் உயரத்தோடு போட்டியிட முடியவில்லை.
பார்த்தவர் எல்லோரும், ‘‘பையனுக்கு யாருங்க பயிற்சி தருவது?’’ என்றார்கள்.
முனியப்பன் பெருமையாகச் சொன்னார்.
‘‘காலைல தூங்கி எந்திரிச்சதும் 5 கிலோமீட்டர் ஓட்டப் பயிற்சி. அதுக்கப்பறம் 200 முறை தண்டால். இப்படி சொல்லிக்கிட்டே போலாம். நான் சம்பாதிக்கறதுல முதல் செலவே இவனுக்குதான். எவ்வளவு ஷூ, எவ்வளவு டீ சர்ட், சார்ட்ஸ், எவ்வளவு பயணம்? நினைக்கிற மாதிரி சத்தான உணவு, வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குறோமோ இல்லியோ, இவனுக்கு மட்டும் மாசத்துக்கு 2000 ரூபாய்க்குப் பால் வாங்கிக் கொடுப்போம்’’
‘‘உங்க பையன் ஸ்டேட்ல செலக்ட் ஆகி, நேஷனல்லயும் ஜெயிச்சிட்டா, என்ன பரிசுப்பா கொடுப்பாங்க’’
‘‘தேசிய அளவில் முதல் பரிசு வாங்கினா 6 ஆயிரம் ரூபாய் கொடுப்பாங்க. இரண்டாவது பரிசுன்னா 4000 ரூபாய் கொடுப்பாங்க. மூணாவது பரிசுன்னா 2000 ரூபாய் தருவாங்க. சரி, அப்புறம் பேசலாம்’’
மகனின் ஆட்டத்தைப் பார்ப்பதில் கவனம் செலுத்தினார்.
இறுதிக்கட்டம் வந்துவிட்டது.
வாழ்வா சாவா போராட்டம். இந்த ஆட்டத்தில் வேல்முருகன் முழுத்திறனையும் வெளிபடுத்தி விளையாட வேண்டும். கொஞ்சம் தவறவிட்டாலும் தேர்வுக் குழுவினர் இவன் பெயரைத் தவறவிட்டு விடுவர்.
வேல்முருகன், அப்பாவிடம் ஓடிவந்தான்.
வாழ்த்து வாங்க வருகிறான் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டார். ஆனால் வந்தவன், அப்பா எனக்குத் தலை வலிக்குதுப்பா, கண் எரியுது.
‘‘நீ சரியா தூங்கலேல்ல, அதான். சரி, இந்தா முகம் கழுவிக்கோ’’
தண்ணீர் பாட்டிலைத் திறந்து முகம் கழுவிக்கொண்டு, வேகமாகத் திடலுக்குள் நுழைந்தான்.
என்ன நடக்கிறது என்றே முனியப்பனுக்குப் புரியவில்லை. வேல்முருகன் உயர எகிறிக் குதித்து அடிக்கிற பந்துகள், வலையின் உயரத்தைக்கூடத் தாண்டாமல் கீழே விழுந்தன.
அடுத்தப் பந்தை எப்படியோ எம்பி அடித்தான். வலைக்கு மேலேதான் பந்து பறந்தது. ஆனால், எதிரில் இருந்த தடுப்பாட்டக்காரர்களின் கைகளைத் தாண்டமுடியாமல் பந்து இவன் பக்கமே விழுந்தது.
வேல்முருகனும் வியர்வையில் களைத்துப்போயிருந்தான்.
தேர்வுக்குழுவினர், வேல்முருகனின் பெயரை நீக்கிவிட்டார்கள். சிவந்துபோன கண்களுடன் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே அப்பாவைப் பார்த்தான்.
அப்பா சிரித்துக்கொண்டே வேல்முருகனை ஆரத் தழுவினார். துக்கத்தின் துன்பங்களைத் தொண்டைக்குள்ளேயே அணைபோட்டுத் தடுக்கும் ஆற்றல் அப்பாக்களுக்கு மட்டுமே உண்டு போலிருக்கிறது.
‘‘பரவாயில்லை விடு ராஜா. அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்’’
‘‘அம்மா ரொம்ப வருத்தப்படுவாங்க, இல்லப்பா…’’
‘‘அதெல்லாம் ஒன்னுமில்லை. நான் பேசிக்கிறேன், வா போகலாம்’’
நாளைக்கு வந்து கடனுக்கான அசல் கேட்பார்கள் என்ற கவலை இப்போதுதான் முனியப்பனுக்கு வந்தது.
வேல்முருகன், அப்பாவிடம் சொன்னான்.
‘‘அப்பா, நாம கார்ல வந்திருந்தா களைச்சிப் போயிருக்கமாட்டேன் இல்லப்பா…’’
முனியப்பன் தலைகுனிந்தார்.
‘‘சாரிப்பா’’
அப்பாவின் கண்களில் ஈரம் கசிந்ததைப் பார்த்ததும், வேல்முருகனின் விழிகளிலும் ஈரம் எட்டிப் பார்த்தது.
‘‘அப்பா, நான் விளையாடறத நிறுத்திடறேன்பா. நான் அப்படியே நேஷனல்ல முதல் பரிசு வாங்கினாலும், அரசாங்கம் எனக்கு 6000 ரூபாய்தான் தரப்போவுது. ஆனா, அதுக்காக நீங்க பல லட்ச ரூபாய் கடன் வாங்கவேண்டி இருக்கும்...’’
‘‘அதெல்லாம் என் பிரச்னை. நான் யார் கால்ல விழுந்தாவது உனக்கு வேண்டியத செஞ்சிக்கிட்டே இருப்பேன். நீ பயிற்சியை தொடர்ந்து பண்ணிக்கிட்டே இரு. அடுத்த வருஷம் கண்டிப்பாக ஸ்டேட்ல செலக்ட் ஆயிடுவே…’’
‘‘சமுத்திரக்கனிக்கு எங்க அப்பா கதையை யாராவது சொல்லுவாங்களாப்பா?’’
முனியப்பன், மகனை பிரமிப்பாகப் பார்த்தார்.
மாநிலப் போட்டியில் தேர்வான மாணவர்களைப் பாராட்டி, அந்த ஊரின் சமூகச் சேவகரும், அந்த ஊரின் லட்சுமிபதியாகிய ஒருவரும் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.
‘‘இந்தியாவின் ஒலிம்பிக் கனவுகள் வெகுதூரத்தில் இல்லை. இந்த மாதிரியான இளைஞர்களை நாம் ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான், ஒலிம்பிக்கில் இந்தியா ஜெயிக்கும்.’’
சி.சரவணன் – 9976252800
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.