பயிற்சியாளர் விஷயத்தைப் பொறுத்தவரையில் கும்ப்ளேவுக்கு பெரிய அளவில் அனுபவம் கிடையாது. அதனால் அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தபோது பிசிசிஐ வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக பிசிசிஐ சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில், 'பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்கிறவர் சர்வதேச அல்லது முதல்தர கிரிக்கெட் அளவில் பயிற்சியாளராகச் செயல்பட்டிருக்கவேண்டும்' என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகுதி இல்லாவிட்டாலும் வீரராக தான் சாதித்தவற்றை மனத்தில் கொண்டு வாய்ப்பு அளிப்பார்கள் என்கிற நம்பிக்கையில் கும்ப்ளே விண்ணப்பித்தார். ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக உள்ள அவர், இதற்கு முன்பு பிசிசிஐயின் நேஷனல் கிரிக்கெட் அகாடமி மற்றும் தொழில்நுட்பக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரவி சாஸ்திரி தேர்வாக வாய்ப்பிருந்த நிலையில், அனில் கும்ப்ளே தேர்வாகியுள்ளது பிசிசிஐ-யின் புதிய திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அனில் கும்ப்ளே: ஒரு பார்வை... வலது கை சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே, 1990ஆம் ஆண்டில் 19ஆவது வயதில் டெஸ்ட் கிரிக்கெட் மூலம் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். இந்திய அணிக்காக மொத்தம் 132 டெஸ்ட் போட்டிகளிலும், 271 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டியில் 337 விக்கெட்டுகள் என மொத்தமாக 956 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இந்திய அளவில் முதல் இடத்திலும், சர்வதேச அளவில் 3ஆவது இடத்திலும் அனில் கும்ப்ளே உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு ஆலோசகராக இருந்துள்ளார். |
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சரின் பதவிக்காலம் 2015 உலகக் கோப்பை போட்டியோடு முடிவுக்கு வந்தது. இதன்பிறகு பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ரவி சாஸ்திரி இயக்குநராக செயல்பட்டு வந்தார். சஞ்சய் பாங்கர், பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் உதவி பயிற்சியாளர்களாக செயல்பட்டு வந்தனர். இவர்களுடைய பதவிக்காலம் டி20 உலகக் கோப்பை போட்டியோடு முடிவுக்கு வந்தது.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். சாஸ்திரியின் மேற்பார்வையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய அணி, அரையிறுதி வரை முன்னேறியது. இலங்கையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனால் அவர் தேர்வாக வாய்ப்பு அதிகமாக இருந்தது.
அதேபோல, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீலும் விண்ணப்பித்தார். அவருடைய தற்போதைய பதவிக்காலம் செப்டம்பருடன் முடிவடைகிறது. இதற்கு முன்பு சந்தீப் பாட்டீல், கென்யா, ஓமன் அணிகளுக்குப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். 1996-ல் இந்திய அணிப் பயிற்சியாளராக 6 மாதங்கள் இருந்துள்ளார். இவர் கென்யா அணியின் பயிற்சியாளராக இருந்தபோது அந்த அணி 2003 உலகக்கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இதனால் சந்தீப் பாட்டீல் தேர்வாகவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
அதேசமயம், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் பொருத்தமானவராக இருப்பார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியாளர் ஆவதற்கு அவர்களின் ஓய்வுக்குப் பிறகு சில காலம் இடைவெளி அவசியம் என்பதை நீண்ட காலமாக கூறி வருகிறேன். அதன்படி ராகுல் திராவிட் அந்த இடைவெளி காலத்தை கடந்துவிட்டார். பிசிசிஐ மாற்றத்தை விரும்பினால் அதற்கு திராவிடைவிட சிறந்த ஒருவர் கிடைக்கமாட்டார் என்பதே பிசிசிஐக்கு நான் கூறும் மேலான அறிவுரையாகும் என அவர் குறிப்பிட்டார். பிசிசிஐயின் விருப்பமும் அதுவாக இருந்தது. ஆனால் டிராவிட் ஜூனியர் அணிக்குப் பயிற்சியாளராக இருக்கவே விரும்பினார். பெரிய பதவிக்கு, பெரிய சம்பளத்துக்கு அவர் ஆசைப்படவில்லை என்று பிறகு பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் நேற்று தெரிவித்தார். (பயிற்சியாளர் திராவிடுக்கு செலுத்த வேண்டிய கட்டணமான ரூ.2.61 கோடியின் முதல் தவணை கடந்த மார்ச் மாதம் செலுத்தப்பட்டது. இந்நிலையில், நிலுவையில் இருந்த ரூ.1.30 கோடியும் கடந்த மாத தவணையில் செலுத்தப்பட்டுவிட்டது எனச் கடந்த மாதம் பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்தது).
இருப்பினும் கும்ப்ளே மீது பிசிசிஐ நிர்வாகிகள் அதிக நம்பிக்கை வைத்து தேர்வு செய்துள்ளார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் இந்திய அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி, முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி இந்த நேர்காணலை நடத்தியது. இவர்களில் சச்சின் லண்டனில் இருப்பதால் விடியோ கான்பரன்ஸ் மூலம் நேர்காணல் நடத்தினார்.
இதில் அனில் கும்ப்ளே நேரடியாக பங்கேற்றார். அதேநேரத்தில் ரவி சாஸ்திரி வெளிநாட்டில் இருப்பதால் ஸ்கைப் மூலம் நேர்காணலில் பங்கேற்று தனது பயிற்சி திட்டங்கள் குறித்து விளக்கினார். இதேபோல் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டூவர்ட் லா, டாம் மூடி ஆகியோர் விடியோ கான்பரன்ஸ் மூலம் நேர்காணலில் கலந்து கொண்டு தங்கள் தரப்பு திட்டங்கள் குறித்து தெரிவித்தனர். அதேநேரத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை. ஒரே நாளில் நேர்காணல் முடிந்தது.
இது தொடர்பாக கங்குலி கூறியதாவது: பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் செவ்வாய்க்கிழமையோடு முடிந்தது. 10 பேரிடம் நேர்காணல் நடத்தினோம். அவர்கள் அனைவரும் தங்களின் பயிற்சி திட்டங்கள் குறித்து எங்களிடம் விளக்கிக் கூறினர். நாங்கள் உடனடியாக இறுதிப் பட்டியலை தயார் செய்துவிடுவோம். அந்தப் பட்டியலை பிசிசிஐ செயலாளரிடம் சமர்ப்பிப்போம் என்றார். மேலும், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது சுயசரிதை புத்தகத்தை (ஏ செஞ்சுரி இஸ் நாட் எனாஃப்) வெளியிட்ட பிறகு கங்குலி கூறியதாவது:
2005-ல் இந்திய அணியின் பயிற்சியாளரை பரிந்துரைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது சேப்பலின் பெயரை பரிந்துரைத்து தவறு செய்துவிட்டதாக நினைத்தேன்.
ஆனால் இந்த முறை பிசிசிஐ ஆலோசனைக் கமிட்டியில் இடம்பெற்றுள்ள நாங்கள் (சச்சின், கங்குலி, லட்சுமண்), சரியான பயிற்சியாளரைத் தேர்வு செய்வோம் என நம்புகிறேன். இந்த விஷயத்தில் சச்சின், லட்சுமண், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரின் ஆதரவு எனக்கு இருக்கிறது. நாங்கள் அனைவரும் சேர்ந்து சரியான நபரை பயிற்சியாளராக தேர்வு செய்வோம்.
இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிவிடலாமா என இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு சிந்தித்தேன். ஆனால் இப்போது பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலை நடத்துகிறேன். இதுதான் வாழ்க்கை. எதிர்காலத்தில் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில் நானும் பங்கேற்கலாம். வாழ்க்கையில் எதற்குமே உத்தரவாதம் கிடையாது. ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது. பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக நான் வருவேன் என யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். அதுதான் வாழ்க்கை. அதை நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும்.
பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் குறித்த சிந்தனை எனக்குள் ஓடிக்கொண்டிருந்ததால், என்னால் திங்கள்கிழமை இரவு தூங்க முடியவில்லை. லார்ட்ஸில் நான் அடித்த முதல் சதம் தொடர்பான 12 நிமிட விடியோவைப் பார்த்த பிறகே எனக்கு தூக்கம் வந்தது. நானும் சாதாரண மனிதன்தான். நான் விரும்புகிற எந்த விஷயத்தையும் சிறப்பாக செய்ய வேண்டும் என விரும்புவேன்.
கடுமையாக உழைத்தால் இன்னும் 10 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட முடியும் என்ற நம்பிக்கை, லார்ட்ஸில் சதமடித்த பிறகு எனக்கு ஏற்பட்டது. நான், லார்ட்ஸில் அடித்த முதல் சதமும், அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பும் இன்னும் எனக்குள் பசுமையான நினைவுகளாக இருக்கிறது என்றார். இதனால் பிசிசிஐ யாரைத் தேர்ந்தெடுக்கும் என்கிற ஆர்வம் அதிகமானது.
பயிற்சியாளர் பதவிக்கு இறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் பிசிசிஐயிடம் அளிக்கப்பட்ட நிலையில், இந்திய பயிற்சியாளர் குறித்த அறிவிப்பை தர்மசாலாவில் நேற்று வெளியிட்டார் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர். அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.
செளரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழுவுக்கு ரவி சாஸ்திரியை விடவும் கும்ப்ளே மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு வீரராகவும் கேப்டனாகவும் கும்ப்ளே சாதித்த விஷயங்கள் அவரைத் தேர்வு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயமாக கும்ப்ளேவின் தேர்வு மதிப்பிடப்படுகிறது. வெளிநாடுகளில் இந்திய அணி வெற்றி பெற கும்ப்ளேவின் பங்களிப்பு மிகவும் உதவும் என்றும் கணிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.