சமீபத்தில் நடந்துமுடிந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மார்ச் 12-ம் தேதி வரை டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டபோது மரியா ஷரபோவா-வுக்குப் போதைப் பொருள் சோதனை நடத்தப்பட்டது. அதில் மரியா ஷரபோவா ஊக்க மருந்து பயன்படுத்தியது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு எதிராக, அளவுக்கு அதிகமாக மெல்டோனியம் எடுத்துக்கொண்டதும் மேலும் கடந்த 10 வருடங்களாக அவர் அந்த மருந்தைப் பயன்படுத்தி வந்ததம் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று பேசிய மரியா ஷரபோவா, ‘நான் சோதனையில் தோல்வியடைந்துள்ளேன். அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். கடந்த 10 வருடங்களாக எனது குடும்ப மருத்துவரால் மில்ட்ரோனேட் (mildronate) என்கிற மருந்து கொடுக்கப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு சர்வதேச டென்னிஸ் சங்கத்திடமிருந்து கடிதம் வந்தது. அந்த மருந்துக்கு மெல்டோனியம் (meldonium) என்கிற இன்னொரு பெயர் உள்ளதாம். அது எனக்குத் தெரியாது.’ என்றார்.
ஃபுளோரிடாவில் வசித்து வரும் 28 வயது மரியா ஷரபோவாவுக்கு ஜனவரி 26 அன்று போதைப் பொருள் சோதனை நடத்தப்பட்டது. அன்றைய தினம்தான் அவர் ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதிப் போட்டியில் செரினா வில்லியம்ஸிடம் தோல்வியடைந்தார். ‘சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பால் (World Anti-Doping Agency (Wada)) கடந்த 10 வருடங்களாக அந்த ஊக்க மருந்து தடை செய்யப்படவில்லை என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். அதனால் சட்டபூர்வமாகவே அந்த மருந்தை இந்த 10 வருடங்களும் உட்கொண்டு வருகிறேன். ஆனால் கடந்த ஜனவரி 1 முதல் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. மெல்டோனியம் தடை செய்யப்பட்ட பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நான் அறியவில்லை. இது தொடர்பாக டிசம்பர் 22 அன்று இதுகுறித்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. நான் அந்த இணைப்பைப் படிக்காமல் விட்டுவிட்டேன்.’ என்றார்.
கடந்த 11 வருடங்களாக அதிகம் சம்பாதிக்கும் டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்தவர் மரியா ஷரபோவா. அவர் இதுவரை ரூ. 250 கோடி பரிசுத்தொகையாகப் பெற்றுள்ளார். ஆகஸ்ட் 2005-ம் ஆண்டு உலகின் நெ.1 வீராங்கனையாக முன்னேறினார். தற்போது சர்வதேச தரவரிசையில் 7-ம் இடத்தில் உள்ளார்.
‘நான் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டேன். என் ரசிகர்களையும் 4 வயது முதல் ஆர்வத்துடன் விளையாடி வரும் டென்னிஸ் விளையாட்டையும் தலைகுனிய வைத்துவிட்டேன். இதற்கான விளைவுகளை அனுபவிக்கப் போகிறேன் என்பதையும் அறிகிறேன். ஆனால் என் டென்னிஸ் வாழ்க்கையை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்பவில்லை. மீண்டும் விளையாட எனக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என நம்புகிறேன்’ என்று தன் நிலையை ரசிகர்களிடம் வெளிப்படுத்தியுள்ளார் மரியா ஷரபோவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.