கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பல்கேரியாவின் வெஸலின் டோபலோவுடன் டிரா செய்தார். இதன்மூலம் 4.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார் ஆனந்த்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது. அதில் நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதவுள்ள வீரரை தேர்வு செய்வதற்காக கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி நடத்தப்படுகிறது. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், உலக செஸ் போட்டியில் கார்ல்சனை எதிர்கொள்வார்.
நேற்று நடந்த 8-வது சுற்றில் டோபலோவை எதிர்கொண்டார் ஆனந்த். அவர் கருப்பு நிறக் காய்களுடன் விளையாடினார். Nbd7 என்கிற 4-வது நகர்த்தலின் மூலம் அருமையான தொடக்கத்தை உண்டுபண்ணினார் ஆனந்த். 22-வது நகத்தலில் Nxf4 என்கிற தவறைச் செய்தார் டோபலோவ். அதன்பிறகு ஆட்டத்தில் ஆனந்த் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார். டோபலோவ் தற்காப்பு ஆட்டம் ஆடவேண்டிய நிலைமைக்குச் சென்றார்.
ஆனால், ஆனந்தால் ஒருகட்டத்துக்கு மேல் வெற்றிக்கான நகர்த்தல்களை உருவாக்கமுடியவில்லை. 27வது நகர்த்தலின்போது b6 என்கிற தவறைச் செய்தார் ஆனந்த். இதனால் அவருடைய வெற்றி சாத்தியப்படாமல் போனது. 43-வது நகர்த்தலில் ராணியை எதிராளியின் கூடாரத்தில் நிறுத்தினார். ஆனால் குதிரையின் உதவி எதுவும் இல்லாததால் பலன் கிடைக்கவில்லை. ஆட்டம் 51-வது நகர்த்தலின்போது டிரா ஆனது.
8-வது சுற்றின் முடிவில்
1. செர்ஜி கர்ஜாகின் 5/8
2. லெவோன் ஆரோனியன் 5/8
3. விஸ்வநாதன் ஆனந்த் 4/8
4. ஃபாபியானோ கருணா 4/8
5. அனிஷ் கிரி 4/8
6. பீட்டர் ஸ்விட்லர் 3.5/8
7. ஹிகாரு நகமுரா 3/8
8. வெஸலின் டோபலோவ் 2.5/8
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.