41 வயதில் பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் அனுராக் தாக்குர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இருந்த சஷாங்க் மனோகர், ஐசிசியின் வாரியங்கள் சாரா முதல் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து பிசிசிஐயின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக பிசிசிஐயின் சிறப்பு பொதுக்கூட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிசிசிஐயை பொறுத்தவரையில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள 6 மண்டலங்களில் இருந்து சுழற்சி முறையில் தலைவர் பதவிக்கான வேட்பாளர் பரிந்துரைக்கப்படுவார். அதன்படி இந்த முறை கிழக்கு மண்டலத்தின் சார்பில் அனுராக் தாக்குரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அவருக்கு 6 மண்டலங்களின் ஆதரவும் இருந்ததால் ஒரு மனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அனுராக் தாக்குர் ஏற்கெனவே வகித்து வந்த செயலர் பதவிக்கு அஜய் ஷிர்கே தேர்வு செய்யப்பட்டார்.
பிசிசிஐ தலைவர் பதவியைப் பிடித்த 2-ஆவது முதல்தர கிரிக்கெட் வீரர் அனுராக் தாக்குர் ஆவார். முதல் வீரர் ராஜ்சிங் டங்கர்பூர் ஆவார். அவர் 1998-99 வரை பிசிசிஐ தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அனுராக் தாக்குர், ஹிமாசலப் பிரதேச அணிக்காக ஒரேயொரு ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். அதேநேரத்தில் ராஜ்சிங் 86 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்துப் பேசிய தாக்குர், பிசிசிஐ தலைவராகியிருப்பதைக் கெளரவமாக கருதுகிறேன். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடனான எனது பயணம் 16 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது என்று கூறியுள்ளார்.
படிப்படியான வளர்ச்சி
பாஜக எம்.பியாக உள்ள அனுராக் தாக்குர், பிசிசிஐயின் இளம் தலைவர்களில் ஒருவர். அவருக்கு முன்பு 1963-66 வரை 33 வயது பஃதேசிங் ராவ் கெய்க்வாட் தலைவராக இருந்தார். அவருக்குப் பிறகு இளம் பிசிசிஐ தலைவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தாக்குர்.
1998 - 2003 & 2008 - 2012 ஆகிய காலகட்டங்களில் ஹிமாசலப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த பிரேம்குமார் துமால் தாக்குரின் மகன், அனுராக் தாக்குர். 2008-ல் தந்தை வெற்றி பெற்ற ஹமிர்புரில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அதே தொகுதியில் மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகஜவின் இளைஞர் அணிக்கும் தலைவராகச் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
ஓரளவு உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர். பஞ்சாப் மற்றும் வடக்கு மண்டல இள வயது அணிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார். 2000-ம் வருடம் 25 வயதில் ஹிமாசல பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் தாக்குர். அதே வருடம் ஹிமாசல பிரதேச அணிக்காக ஒரேயொரு ரஞ்சிப் போட்டியில் ஆடினார். ஜம்மு காஷ்மிருக்கு எதிரான அந்தப் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் போனாலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜூனியர் தேர்வுக்குழு உறுப்பினராக வேண்டுமென்றால் ரஞ்சிப் போட்டியில் ஆடியிருக்கவேண்டும் என்கிற விதி இருந்ததால் அப்போட்டியில் அவர் விளையாடியதாகச் சொல்லப்படுகிறது. மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஆன பிறகு முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர் என்கிற அரிதான பெருமையைம் அப்போது பெற்றார்.
ஹிமாசலப் பிரதேசம், கிரிக்கெட் வளர்ச்சி இல்லாத ஒரு மாநிலம். ஆனால் அங்குதான் தனது திறமையை நிரூபித்தார் தாக்குர். இன்று கிரிக்கெட் உலகமே வியந்து பார்க்கும் ஓர் அழகான கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். பிலாஸ்புர், உனா போன்ற சிறிய நகரங்களிலும் தரமான கிரிக்கெட் மைதானங்களை உருவாக்கினார்.
சீனிவாசனை வெளியேற்றினார்
2011-ல் பிசிசிஐயின் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பிசிசிஐயின் தலைவராக என். சீனிவாசன் இருந்தார். ஆனால் 2013-ல் ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு எழுந்து சீனிவாசன் சிக்கலுக்கு ஆளானபோது அவருக்கு எதிராக முதல் குரலை எழுப்பியவர் தாக்குர். அரசியல்வாதியாகவும் இருந்ததால் அச்சம் இன்றி தன் கருத்தை சீனிவாசனுக்கு எதிராக வெளியிட்டார்.
ஐபிஎல் முறைகேடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிசிசிஐ தலைவர் பதவிக்கு சீனிவாசன் மீண்டும் போட்டியிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. இதனால், அவரது ஆதரவாளரான ஜக்மோகன் டால்மியா களமிறங்கினார். 2015 மார்ச் மாதம், அவர் ஒரு மனதாக பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். பிசிசிஐ செயலாளராக என்.சீனிவாசன் அணியின் எதிரணியைச் சேர்ந்த அனுராக் தாக்கூர் ஒரேஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அப்போது பிசிசிஐ நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்களில் அனுராக் தாக்குர் தவிர மற்ற அனைவருமே முந்தைய தலைவர் சீனிவாசனின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு டால்மியாவின் மறைவைத் தொடர்ந்து, பிசிசிஐ-க்கான புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளின்போதும் ஸ்ரீனிவாசனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் தாக்குர்.
அப்போது பிசிசிஐ-யின் செயலராக இருந்த அனுராக் தாக்குர் தலைமையில் ஓர் அணியினரும், முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் தலைமையில் மற்றொரு அணியினரும் புதிய தலைவர் பதவிக்கு தங்களது ஆதரவாளர்களை நிறுத்த முயற்சி செய்தார்கள்.
சீனிவாசன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரைச் சந்தித்து அவருக்கு ஆதரவளிப்பதாக கூறியிருந்தார். பிசிசிஐ தலைவர் பதவிக்கு வர சீனிவாசன் விரும்பவில்லை என்றும், பவார் அல்லது அவரது பிரதிநிதிகள் அந்தப் பதவிக்குப் போட்டியிட்டால் ஆதரவளிக்கத் தயார் என்றும் பவாரிடம் சீனிவாசன் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு கைமாறாக ஐசிசியின் தலைவர் பதவியில் தான் தொடர்ந்து நீடிக்க ஆதரவாக இருக்கும்படியும் பவாரிடம் சீனிவாசன் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. எதிரும் புதிருமாக இருக்கும் பவார் - சீனிவாசன் ஆகியோரின் திடீர் சந்திப்பு, பிசிசிஐ-யின் முக்கிய நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அனுராக் தாக்குர் தலைமையிலான குழுவினர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை அவரது இல்லத்தில் சந்தித்து, சஷாங் மனோகரை ஒருமனதாகத் தலைவர் பதவிக்கு நிறுத்த முடிவு செய்தனர். இந்த முடிவை முதலில் சஷாங் மனோகர் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர், ஜேட்லி உள்ளிட்டோர் அவரைச் சமாதானப்படுத்தி ஒப்புக்கொள்ளவைத்தனர். இதற்கிடையே சரத்பவார், சீனிவாசனுடன் இணைந்து செயல்படுவதற்கு முன்வரவில்லை. இதனால், சஷாங் மனோகர் பிசிசிஐ தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். சஷாங் மனோகர் மீண்டும் பிசிசிஐ தலைவரானதால் பிசிசிஐ அமைப்பில் சீனிவாசனின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இதனால், அவரது ஐசிசி சேர்மன் பதவியும் ஆட்டம் கண்டது. சஷாங் மனோகர் சீனிவாசனை அகற்றிவிட்டு, ஐசிசியின் தலைவராகவும் ஆனார்.
சொந்த நலன்?
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த வருடம் மார்ச் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை இந்தியாவின் 8 நகரங்களில் நடைபெற்றது. முதல் சுற்று என அழைக்கப்படும் தகுதிச்சுற்றில் 8 அணிகள் விளையாடின. அவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, தகுதிச்சுற்று போட்டிகள் மார்ச் 8 முதல் 13 வரை தர்மசாலா, நாகபுரி ஆகிய நகரங்களில் நடைபெற்றன. பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகரின் சொந்த ஊர், நாகபுரி. அதேபோல பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர், ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். தர்மசாலா, அந்த மாநிலத்தில்தான் உள்ளது. எனவே இருவரும் தங்களுடைய சொந்த ஊரைச் சேர்ந்த மைதானங்களுக்கு ஆதரவாக நடந்துள்ளார்கள் என்றொரு புகார் எழுந்தது.
இரு நகரங்களிலும் தங்குவதற்கான செலவுகள் குறைவு என்பதுதான் இதற்குக் காரணம். இதனால் ஐசிசி அதிகம் செலவு செய்யத் தேவையில்லை. வீரர்களும் இரு நகரங்களுக்குப் பயணம் செய்தால் போதும் என்று பிசிசிஐ சார்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேபோல சமீபத்தில், விசாகப்பட்டினம், ராஞ்சி, இந்தூர், புணே, தர்மசாலா, ராஜ்கோட் ஆகிய 6 மைதானங்களுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன்மூலம் இந்த மைதானங்கள் டெஸ்ட் போட்டியை நடத்தும் அங்கீகாரத்தைப் பெற்ற்றன. சமீபத்தில் தான் சர்வதேசப் போட்டிகளை நடத்தும் உரிமை பெற்ற தர்மசாலா மிகக்குறுகிய காலத்தில் தாக்குரின் முயற்சியால் டெஸ்ட் மையமாகவும் ஆகியுள்ளது.
புதிய சவால்!
பிசிசிஐ தலைவராகவும் பிஜேபி எம்பியாகவும் தாக்குரால் இரட்டைச் சவாரி செய்யமுடியுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், இதற்கு முன்பு, எஸ்.என். வான்கடே, என்.கே.பி. சால்வே, மாதராவ் சிந்தியா, சரத் பவார் ஆகியோர் அரசியலில் இருந்துகொண்டே பிசிசிஐ தலைவராகவும் பணியாற்றியுள்ளார்கள். மேலும் கடந்த சில வருடங்களாக அவர் அரசியல், கிரிக்கெட் என இரண்டிலும் தன்னை மும்முரமாக ஈடுபடுத்தி வருவதால் இப்போதைய நிலைமையை அவரால் சமாளிக்கமுடியும் என்றே பிசிசிஐ தரப்பு கூறுகிறது. மேலும் அவருடைய அரசியல் பின்னணி பிசிசிஐயின் செயல்பாடுகளுக்கு உதவும் என்றும் பலராலும் நம்பப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை மாற்றியமைப்பது தொடர்பான பரிந்துரையாக, 159 பக்கங்கள் கொண்ட அறிக்கையை லோதா தலைமையிலான குழு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கின் ஒரு பகுதியாக பிசிசிஐயை சீரமைக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி சில பரிந்துரைகளை அளித்தது. அதன்படி, பிசிசிஐயின் அலுவலகப் பொறுப்பில் உள்ளவர்கள், மாநில கிரிக்கெட் சங்கங்களிலும் பதவி வகிக்கக் கூடாது. இதனால், பிசிசிஐயின் தலைவராகவும் ஹிமாசல கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ள அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் பதவியை இழக்க நேரிடும். இதுபோன்ற நெருக்கடி தருகிற பல பரிந்துரைகளால் லோதாவின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் பிசிசிஐ காலதாமதம் செய்து வருகிறது.
லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்துவதில் சிக்கல்களும் முரண்பாடுகளும் உள்ளதால் பிசிசிஐயில் ஒருவித பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதை முன்வைத்துதான் சமீபத்தில் பிசிசிஐ தலைவர் பொறுப்பை உதறினார் சஷாங் மனோகர். இதனால் தற்போது தலைவர் பொறுபபை ஏற்றுள்ள தாக்குர், இந்தச் சவாலை எப்படிச் எதிர்கொள்ளப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதை நான் சவாலாக மட்டும் பார்க்கவில்லை, ஒரு வாய்ப்பாக பார்க்கிறேன் என்று பிசிசிஐயின் இந்த இக்கட்டான நிலைமை குறித்து பதிலளித்துள்ளார் பிசிசிஐ-யின் புதிய தலைவர்.
ஓர் இளம் தலைவரின் கையில் பிசிசிஐ. நிறைய ஆச்சர்யங்களை எதிர்பார்க்கலாமா தாக்குர்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.