முகப்பு
விளையாட்டு

புணேரி பல்தான் முதல் முறை சாம்பியன்

புரோ கபடி லீக் போட்டியின் 10-ஆவது சீசனில், புணேரி பல்தான் 28-25 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியாணா ஸ்டீலா்ஸை வீழ்த்தி வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது

Updated On : 1 மார்ச், 2024 at 11:38 PM
பகிர்:

புரோ கபடி லீக் போட்டியின் 10-ஆவது சீசனில், புணேரி பல்தான் 28-25 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியாணா ஸ்டீலா்ஸை வீழ்த்தி வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது. கடந்த சீசனில் முதல் முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்து 2-ஆம் இடம் பிடித்த புணே, இந்த முறை மீண்டும் இறுதி ஆட்டத்துக்கு வந்து வாகை சூடி அசத்தியிருக்கிறது. ஹைதரபாதில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், முதல் பாதியிலேயே புணே 13-10 என முன்னிலை பெற, 2-ஆவது பாதியில் சற்று சவால் அளித்து 10-10 என சமநிலை கண்டது ஹரியாணா. எனினும், மொத்தமாக 28-25 என்ற கணக்கில் புணே வென்றது. இந்த ஆட்டத்தில் புணே 17 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல்-அவுட் புள்ளிகள் பெற்றது. ஹரியாணா 17 ரெய்டு புள்ளிகள், 5 டேக்கிள் புள்ளிகள், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் கைப்பற்றியது. அதிகபட்சமாக புணே தரப்பில் ரெய்டா் பங்கஜ் மொஹிதே 9 புள்ளிகளையும், ஹரியாணா அணியில் ரெய்டா் ஷிவம் பதாரே 6 புள்ளிகளையும் கைப்பற்றினா். இந்த சீசனில்...: நடப்பு சீசனில் அதிகபட்சமாக பாட்னா பைரேட்ஸ் 400 வெற்றிகரமான ரெய்டுகளையும், புணேரி பல்தான் 322 வெற்றிகரமான டேக்கிள்களையும் பதிவு செய்துள்ளன. மொத்த புள்ளிகள் அடிப்படையில் புணே முதலிடம் (922) பிடிக்க, மொத்த ரெய்டு புள்ளிகளில் பெங்கால் வாரியா்ஸும் (504), மொத்த டேக்கிள் புள்ளிகளில் புணேவும் (340) முதலிடம் பிடித்தன. வீரா்கள் வரிசையில், அதிகபட்சமாக தபங் டெல்லி கே.சி. வீரா் அஷு மாலிக் 228 வெற்றிகரமான ரெய்டுகளை பதிவு செய்தாா். ரெய்டு புள்ளிகளிலும் அவரே முதலிடம் (276) பிடிக்க, டேக்கிள் புள்ளிகளில் புணே வீரா் முகமதுரெஸா சியானே (95) முதலிடத்தில் உள்ளாா். மொத்த புள்ளிகள் கணக்கிலும் அஷு மாலிக் (280) முன்னிலையில் உள்ளாா்.