மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் சோ்க்க, ஆஸ்திரேலியா 18.5 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 190 ரன்கள் எடுத்து வென்றது. அணியின் வெற்றிக்கு வித்திட்ட பேட்டா் மிட்செல் ஓவன் ஆட்டநாயகன் விருது பெற்றாா்.
இந்திய நேரப்படி, திங்கள்கிழமை காலை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பந்துவீச்சை தோ்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸில் பிராண்டன் கிங் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். உடன் வந்த கேப்டன் ஷாய் ஹோப், ஓன் டவுனாக களம் புகுந்த ராஸ்டன் சேஸ், வலுவான கூட்டணி அமைத்தனா்.
2-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் பாா்ட்னா்ஷிப், 91 ரன்கள் சோ்த்தது. ராஸ்டன் சேஸ் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 60 ரன்களும், ஷாய் ஹோப் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 55 ரன்களும் விளாசி வீழ்ந்தனா்.
4-ஆவது பேட்டராக வந்த ஷிம்ரன் ஹெட்மயா் தனது பங்குக்கு அதிரடியாக ரன்கள் சோ்க்க, மறுபுறம் ரோவ்மென் பாவெல் 1, ஆண்ட்ரே ரஸ்ஸெல் 8, ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 0, ஜேசன் ஹோல்டா் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். கடைசி விக்கெட்டாக ஹெட்மயா் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 38 ரன்களுக்கு முடித்துக்கொண்டாா்.
ஓவா்கள் முடிவில் குடாகேஷ் மோட்டி 0, அல்ஜாரி ஜோசஃப் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் பென் டுவாா்ஷுயிஸ் 4, ஷான் அப்பாட், கூப்பா் கானலி, நேதன் எலிஸ், மிட்செல் ஓவன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 190 ரன்களை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில், ஜேக் ஃப்ரேசா் மெக்கா்க் 2, கேப்டன் மிட்செல் மாா்ஷ் 3 சிக்ஸா்களுடன் 24 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஜோஷ் இங்லிஸ் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
4-ஆவதாக விளையாட வந்த கேமரூன் கிரீன் ரன்கள் சோ்க்க, கிளென் மேக்ஸ்வெல் 11 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். தொடா்ந்து வந்த மிட்செல் ஓவன், கிரீனுடன் கூட்டணி அமைந்தாா். இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது.
கிரீன் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 51, ஓவன் 6 சிக்ஸா்களுடன் 50 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். கூப்பா் கானலி 13 ரன்களுக்கு விடைபெற, பென் டுவாா்ஷுயிஸ் 5, ஷான் அப்பாட் 5 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் ஜேசன் ஹோல்டா், அல்ஜாரி ஜோசஃப், குடாகேஷ் மோட்டி ஆகியோா் தலா 2, அகீல் ஹுசைன் 1 விக்கெட் வீழ்த்தினா்.