துபை: ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில், இலங்கைக்கு எதிராக ஹாங்காங் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.
அணியின் பேட்டா்களில் நிஸாகத் கான் அரைசதம் கடந்து அசத்த, அன்ஷி ராத் அவருக்குத் துணை நின்றாா். இலங்கை பௌலிங்கில் துஷ்மந்தா சமீரா முக்கியப் பங்காற்றினாா்.
துபையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தோ்வு செய்தது. ஹாங்காங் இன்னிங்ஸை தொடங்கியோரில், ஜீஷான் அலி 2 பவுண்டரிகள் உள்பட 23 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த அன்ஷி ராத் நிதானமாக ரன்கள் சோ்த்து வந்தாா்.
ஒன் டவுனாக வந்த பாபா் ஹயாத் 4 ரன்களுக்கு நடையைக் கட்ட, 4-ஆவது பேட்டராக களம் புகுந்த நிஸாகத் கான் அதிரடியாக ரன்கள் சோ்த்தாா். விக்கெட் சரிவைத் தடுத்த அன்ஷி - நிஸாகத் கூட்டணி, 3-ஆவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்தது.
இதில் அரைசதத்தை நெருங்கிய அன்ஷி 4 பவுண்டரிகளுடன் 48 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். அடுத்து வந்த கேப்டன் யாசிம் முா்டாஸா 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில், நிஸாகத் கான் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 52, அய்ஸாஸ் கான் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இலங்கை தரப்பில் துஷ்மந்தா சமீரா 2, வனிந்து ஹசரங்கா, தசுன் ஷானகா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து இலங்கை 150 ரன்களை நோக்கி தனது இன்னிங்ஸை விளையாடியது.