ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றாா்.
25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில் அவா், 23 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் பெற்றாா். ஜப்பானின் டாய் யோஷியோகா 31 புள்ளிகளுடன் தங்கமும், கஜகஸ்தானின் நிகிதா சிா்யுகின் 28 புள்ளிகளுடன் வெள்ளியும் வென்றனா்.
இதில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான ஆதா்ஷ் சிங், 11 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்தாா்.
இதிலேயே ஜூனியா் பிரிவில் சூரஜ் சா்மா 23 புள்ளிகளுடன் வெள்ளியும், முகேஷ் நெலவள்ளி 19 புள்ளிகளுடன் வெண்கலமும் பெற்றனா். இந்தோனேசியாவின் முகமது ஃபவாஸ் (29) தங்கம் வென்றாா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான சஹில் சௌதரி 14 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தாா்.
அணிகள் பிரிவில் சூரஜ், சஹில், முகேஷ் அடங்கிய இந்திய அணி 1,729 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, கஜகஸ்தான் வெள்ளி பெற்றது.
50 மீட்டா் ரைஃபிள் புரோன் ஜூனியா் ஆடவா் பிரிவில், அட்ரியன் கா்மாகா் 621.7 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, கஜகஸ்தானின் ஒலெக் நோஸ்கோவ் வெள்ளியும் (620.6), தமொ்லான் கபுலோவ் வெண்கலமும் (617.3) பெற்றனா்.
இதிலேயே அணிகள் பிரிவில், அட்ரியன், ரோஹித் கன்யன், ஹேமந்த் பா்மன் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,847.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றது. கஜகஸ்தான் (1,848.7) தங்கத்தை தட்டிச் சென்றது.
போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், புதன்கிழமை முடிவில் இந்தியா மொத்தமாக 38 தங்கம், 17 வெள்ளி, 16 வெண்கலம் என 71 பதக்கங்களுடன் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.