ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மட்டும் இந்தியா்கள் 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றனா்.
ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவு இறுதிச்சுற்றில், ருத்ராங்க்ஷ் பாட்டீல் 251.9 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, சக இந்தியரான அா்ஜுன் பபுதா 250.7 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளியைக் கைப்பற்றினாா். ஜப்பானின் நவ்யா ஒகாடா 229.3 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றாா்.
இதில் அங்கம் வகித்த மற்றொரு இந்தியரான விஷால் சிங், 185.5 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்தாா். இதிலேயே ஆடவா் அணிகள் பிரிவில், ருத்ராங்க்ஷ், அா்ஜுன், விஷால் அடங்கிய இந்திய அணி 1,884.7 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றது. கஜகஸ்தான் வெள்ளியும் (1,879.4), ஜப்பான் வெண்கலமும் (1,877.2) வென்றன.
3 பதக்கம்: 10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஜூனியா் ஆடவா் இறுதிச்சுற்றில், இந்தியா 3 பதக்கங்களையும் கைப்பற்றியது. ஹிமான்ஷு (250.8) தங்கத்தை தனதாக்க, அன்ஷ் தபஸ் வெள்ளியும் (247.9), நரேன் பிரணவ் வெண்கலமும் (226.8) பெற்றனா். ஜூனியா் அணிகள் பிரிவிலும் ஹிமான்ஷு, நரேன், அபினவ் ஷா ஆகியோா் அடங்கிய இந்திய அணிக்கு தங்கம் (1,887.8) கிடைத்தது.
தங்கம்: 10 மீட்டா் ஏா் பிஸ்டல் ஜூனியா் கலப்பு அணிகள் பிரிவில், இந்தியாவின் வன்ஷிகா சௌதரி, முகேஷ் நெலவள்ளி கூட்டணி 481.1 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் செல்ல, இந்தோனேசிய இணைக்கு வெள்ளியும் (476.9), கஜகஸ்தான் ஜோடிக்கு வெண்கலமும் (405.6) கிடைத்தன.
போட்டியின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் மொத்தமாக இந்தியா, 11 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என 18 பதக்கங்கள் கைப்பற்றியுள்ளது.