பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட்டில் 2ஆவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2ஆவது போட்டி நாளை அடிலெய்டில் இரவு பகல் ஆட்டமாக நடைபெறுகிறது.
ஆஜாத் மைதானில் பேட் தயாரிக்கும் தொழில் செய்து வருபவர் முடாஷீர் கான். இவரும் ஜெய்ஸ்வாலும் ஒன்றாக வளர்ந்தவர்கள். தனது கிரிக்கெட் கனவு நனவானபிறகும் ஜெய்ஸ்வால் இவரை சந்தித்தது பேசியதும் குறிப்பிடத்தக்கது.
ஜெய்ஸ்வால், 16 போட்டிகளில் 1,568 ரன்கள் குவித்துள்ளார். இந்த நிலையில் ஜெய்ஸ்வாலின் பால்யகால நண்பர் முடாஷீர் கான் டெலிகாம் ஆசியா ஸ்போர்ட்-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சிறிய வயதிலே பெரிய கனவு
சிறிய வயதிலிருந்தே எதாவது பெரியதாக செய்ய வேண்டுமென ஜெய்ஸ்வால் கூறுவார். அதை முதல் டெஸ்ட்டிலேயே செய்துகாட்டியுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி 2ஆவது இன்னிங்ஸில் புதிய வீரராக விளையாடினார். ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட்டில் சிறந்த விஷயம் என்னவென்றால் எதையும் உடனடியாக கற்றுக்கொள்வார். அமைதியாக உட்காரமாட்டார். அதற்கு பதிலாக கடுமையாக உழைப்பவர். நன்கு அவதானிக்கும் (கவனிக்கும்) திறமையுடையவர்.
முன்பும்சரி தற்போதும்சரி நாங்கள் எப்போதும் குறுஞ்செய்திகளை பகிர்ந்துகொள்வோம். ஜெய்ஸ்வாலின் பேட்டினை ஒருவர் உடைத்துவிட்டார். அவருக்கு புதிய பேட் ஒன்று தேவைப்பட்டது. அந்த நேரத்தில் நான் எதேச்சையாக இந்தியா - நியூசி. 3ஆவது போட்டியன்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.
பழைய விஷயங்களை மறக்காதவர்
நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டார். நான் இங்குதான் ஆசாத் மைதானில் இருப்பதாகக் கூறினேன். 3 நாள்களில் அந்தப் போட்டி முடிந்துவிட்டது. அவர் என்னை நுழைவாயில்வரை வரும்படி கேட்டார். பெரிய மனிதராகிவிட்டதால் அங்கேயே பார்த்துவிட்டு கிளம்பிடுவிவார் என நினைத்தேன்.
காரிலிருந்து இறங்கிவந்து ‘வா வந்து காரினுள் ஏறு. இங்கு நிறைய மாறிவிட்டதே’ எனக் கூறினார். டென்டில் எப்படி எல்லாம் வாழ்ந்தோம், உணவு சாப்பிட்டோம், ஆடுகளத்தில் சுற்றியது எல்லாம் குறித்து பேசினார்.
நியூசி. தொடரில் பெரிதாக ரன்கள் அடிக்காதது குறித்து கவலை தெரிவித்தார். எங்கள் பகுதி மக்கள் அனைவரையும் சந்தித்தார். ஆசாத் மைதான் ஆடுகள தயாரிப்பாளர்கள், எங்களுடன் இருக்கும் மாமாவை எல்லாம் சந்தித்து பேசினார். அவர் போராடிய காலகட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த எவரையும் தான் மறக்கவில்லை எனக் கூறினார்.
30 பந்துகள் போதும்
அவர்களது வேண்டுதல்கள் தனக்கு முக்கியமானது எனக் கூறினார். நியூசி.க்கு எதிராக பெரிதாக ரன்கள் குவிக்க முடியாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் இருந்தார்.
வாய்ப்பு கிடைத்தால் 150 அல்லது 200 ரன்கள் அடிப்பதாகக் கூறினார். 30 பந்துகளை சரியாக விளையாடிவிட்டால்போதும் தான் பெரிய ரன்களை குவிக்க முடியுமென ஜெய்ஸ்வால் கூறினார். ரிதமுக்கு வந்துவிட்டால் அற்புதத்தை நிகழ்த்துவார் எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.