பென் ஸ்டோக்ஸ் படம் | AP
கிரிக்கெட்

533 ரன்கள் முன்னிலை; தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 533 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 533 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 115 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஆலி போப் அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வில்லியம் ஓ’ரூர்க் 3 விக்கெட்டுகளையும், மாட் ஹென்றி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

125 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

நியூசிலாந்து அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அதன் முதல் இன்னிங்ஸில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் டாம் லாதம் 17 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடான் கார்ஸ் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கிறிஸ் வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

533 ரன்கள் முன்னிலை

155 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 378 ரன்கள் எடுத்துள்ளது. ஜேக்கோப் பெத்தேல் 96 ரன்கள் எடுத்தும், பென் டக்கெட் 92 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அவர்கள் இருவரும் 4 ரன்கள் மற்றும் 8 ரன்களில் முறையே சதமடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டனர். ஹாரி ப்ரூக் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதி மற்றும் மாட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கிளன் பிளிப்ஸ் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

ஜோ ரூட் 73 ரன்களுடனும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். போட்டி நிறைவடைய இன்னும் 3 நாள்கள் மீதமிருக்கும் நிலையில், இங்கிலாந்து அணி 533 ரன்கள் முன்னிலை பெற்று மிகவும் வலுவாக உள்ளது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்போடு விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT