நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் அண்மையில் நடந்து முடிந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிக்க: மே.இ.தீவுகள் தொடரிலிருந்து ஜோஸ் பட்லர் விலகல்; இங்கிலாந்துக்கு புதிய கேப்டன் நியமனம்!
பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 ஆம் தேதி முதல் புணேவில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
30 வயதாகும் முகமது சிராஜ் இதுவரை இந்திய அணிக்காக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 80 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 61 விக்கெட்டுகள் வெளிநாடுகளில் விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றியதாகும். இந்திய மண்ணில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜ், இதுவரை வெறும் 19 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். இந்த 13 போட்டிகளிலும் 4 போட்டிகளில் முகமது சிராஜுக்கு விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளும் அடங்கும்.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் ககிசோ ரபாடா புதிய சாதனை!
இந்தியாவில் கடைசியாக நடைபெற்ற 7 டெஸ்ட் போட்டிகளில் சிராஜ் வெறும் 12 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். போட்டி ஒன்றுக்கு அவர் இரண்டு விக்கெட்டுகளுக்கும் குறைவாக வீழ்த்தியுள்ளார். அவர் புதிய பந்தில் ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து ஆட்டத்தின் தொடக்கத்தில் விக்கெட்டுகளை எடுக்கத் தவறுவதால், அதிக பொறுப்புகள் பும்ராவின் தோளில் சுமத்தப்படுகிறது.
சிராஜ் பந்துவீச்சில் குறை இருக்கிறதா?
முகமது சிராஜ் பந்துவீச்சில் உள்ள சில குறைபாடுகள் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: முகமது சிராஜின் பந்துவீச்சு சாதனையைப் பாருங்கள். அதிக பௌன்சர்கள் இருக்கும் ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் அவர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால், ஆடுகளங்களில் பௌன்சர்களின் தன்மை நாட்டுக்கு நாடு மாறுபடும் என்றார்.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவாரா?
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக புணே ஆடுகளம் இருக்கும் என்பதால், இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் அண்மையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.