இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு இளம் வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது.
விராட் கோலிக்கு புகழாரம்
இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலிக்கு இளம் வீரர்களான சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் புகழாரம் சூட்டியுள்ளனர்.
விராட் கோலி குறித்து இருவர் பேசியதும் பின்வருமாறு,
சர்ஃபராஸ் கான்
ஆட்டத்தின் மீது விராட் கோலி கொண்டிருக்கும் அதீத ஆர்வத்தை ஈடுசெய்வது மிகவும் கடினம். போட்டிக்கு முன்பாக நடைபெறும் ஆலோசனையின்போது, விராட் கோலி அனைவரின் முன்னிலையிலும் குறிப்பிட்ட பந்துவீச்சாளருக்கு எதிராக எப்படி விளையாடப் போகிறார் எனக் கூறுவார். அதனை அடுத்த நாள் போட்டியிலும் செயல்படுத்திக் காட்டுவார். அது அவருக்கே உரிய தனித்திறமை.
விராட் கோலியை முதல் முறையாக பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் சந்தித்தேன். அன்றைய போட்டியில் பெங்களூரு அணிக்காக 21 பந்துகளில் 45 ரன்கள் குவித்தேன். விராட் கோலி எனக்கு தலைவணங்கி பாராட்டினார். அன்றைய நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. விராட் கோலியுடன் இணைந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அந்த கனவு நனவாகும்.
துருவ் ஜுரெல்
தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவது எப்படி எனவும், எனது ஆட்டத்தை எப்படி மேலும் மேம்படுத்திக் கொள்வது எனவும் விராட் கோலியிடம் கேட்டேன். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவது எப்படி என்ற கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு எனது மனம் எப்போதும் ஆர்வமாக இருக்கிறது. இதே கேள்வியை நான் எம்.எஸ்.தோனியிடமும் கேட்டுள்ளேன். எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலி இருவருமே லெஜண்டரி வீரர்களாக இருப்பதற்கு பின்னால் கண்டிப்பாக ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது. விராட் கோலி ஆடுகளத்தில் இறங்கி வந்து கவர் திசைக்கு மேல் அடிக்கும் ஷாட் எனக்கு மிகவும் பிடிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.