வங்கதேச ரசிகர் தாக்கப்படவில்லை என்றும், அவர் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர் மீது தாக்குதல்
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த போது, புலி வேடமிட்டு வந்த பிரபல வங்கதேச கிரிக்கெட் ரசிகர் ஒருவர், இந்திய ரசிகர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவல் உதவி ஆணையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஷ் சந்தர் கூறுகையில், “அவர் பால்கனியில் இருந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஒரு காவலரை சந்தித்தபோது மூச்சுத் திணறினார். நாங்கள் அவருடன் பேசுவதற்கு முன்பே அவர் மயக்கமடைந்தார். ஆனால், இப்போது அவர் நலமாக உள்ளார். முதலில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டபோது, சிலர் வயிற்றில் குத்தியதாக சுட்டிக்காட்டினார்” என்றார்.
உடல்நலக்குறைவு
இதுகுறித்து ராபி கூறுகையில், “என் பெயர் ராபி, நான் வங்கதேசத்தில் இருந்து வந்துள்ளேன். நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், காவல்துறை அதிகாரிகள் என்னை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இப்போது நான் நன்றாக இருக்கிறேன். பின்னர் அவரது மருத்துவமனை படுக்கையில் இருந்து தெரிவிக்கையில், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மயங்கியதாகவும், உள்ளூர் காவல்துறையினர் தேவையான உதவியை வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
காவல்துறை விளக்கம்
கல்யாண்பூர் மாவட்ட உதவி காவல் ஆணையர் அபிஷேக் பாண்டே கூறும்போது, “ இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டியின் போது, பார்வையாளர்களில் ஒருவரான டைகர் ராபிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு நீரிழப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போனவுடன், அவரை போலீஸார் அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுப்பினர். அவர் இப்போது நலமாக இருக்கிறார், தேவைப்பட்டால் உதவி பெற அவருடன் ஒரு அதிகாரி உள்ளார். அவர் மீது தாக்குதல்கள் நடந்ததாக சில செய்திகள் வந்தன. ஆனால், அவை ஆதாரமற்றவை. அவருக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.