தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரண்டு விராட் கோலிகளை கவனித்திருப்பீர்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று (நவம்பர் 30) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா அரைசதம் கடந்து ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். அவர் 120 பந்துகளில் 135 ரன்கள் (11 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) எடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரண்டு விராட் கோலிகளை கவனித்திருப்பீர்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தைப் பார்த்திருந்தால், இரண்டு விதமான விராட் கோலியை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பவர்பிளேவில் அவர் மிகவும் அதிரடியாக விளையாடுபவராகவும், விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறியபோது தனது விக்கெட்டினை விட்டுக் கொடுக்க மறுக்கும் பிடிவாதமான பேட்டராகவும் அவர் விளையாடினார். விராட் கோலி மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.
மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருக்கும்போது, அணி மிகவும் வலுவாக இருக்கும். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடினர். அவர்கள் இருவரும் விளையாடிய விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இருவரும் தொடர்ந்து இது போன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன் என்றார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பார்ட்னர்ஷிப் 136 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.