தென்னாப்பிரிக்க அணியின் முக்கியமான ஆல்ரவுண்டர்களில் ஒருவராக மார்கோ யான்சென் உருவெடுத்துள்ளதாக அந்த அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் பாராட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்கோ யான்சென் இந்தியாவுக்கு எதிராக பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். குவாஹாட்டியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த அவர், ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் விளாசி அசத்தினார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மார்கோ யான்சென் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முதல் ஒருநாள் போட்டியில் அவர் இரண்டு விக்கெட்டுகள் மற்றும் 70 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவராக மார்கோ யான்சென் உருவெடுத்துள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மார்கோ யான்செனுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. சிறப்பாக செயல்படும் திறன் எப்போதும் அவருக்கு இருக்கிறது. தற்போது, அவரது திறமை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் வெளிப்பட்டுள்ளது. பந்துவீச்சில் அவர் எப்போதும் சிறப்பாக செயல்படக் கூடியவர். முந்தைய ஆண்டுகளில் பேட்டிங்கில் அவரது திறமையை முழுமையாக வெளிப்படுத்தவில்லை.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவரது பேட்டிங் திறமை வெளிப்பட்டுள்ளது. அவர் தற்போது பிரீமியம் ஆல்ரவுண்டராக மாறியுள்ளார். தென்னாப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடரில் அவர் மிகவும் முக்கியமான ஆல்ரவுண்டராக இருக்கப் போகிறார் என நினைக்கிறேன். சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அவரை வெவ்வேறு இடங்களில் களமிறக்கி அவரது திறமையை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. பேட்டிங்கில் அவர் முன்கூட்டியே களமிறக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதிரடியான பேட்டிங்கால் அவரால் எதிரணிக்கு அதிர்ச்சியளிக்க முடியும் என்றார்.
இதையும் படிக்க: ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட்டிலிருந்து உஸ்மான் கவாஜா விலகல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.