இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு தானே பொறுப்பு என தென்னாப்பிரிக்க வீரர் அய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அசத்தியது.
தென்னாப்பிரிக்க அணியில் அய்டன் மார்க்ரம் அதிரடியாக சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் 98 பந்துகளில் 110 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த நிலையில், அணி வெற்றி பெற்றால் மட்டுமே வீரர்கள் ரன்கள் குவிப்பது சிறப்பான விஷயமாக இருக்கும் எனவும், முதல் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு தானே காரணம் என உணர்வதாகவும் அய்டன் மாக்ரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாகக் கூறவேண்டுமென்றால், அணி வெற்றி பெற்றால் மட்டுமே வீரர்கள் ரன்கள் குவிப்பது சிறப்பான விஷயமாக இருக்கும். இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்திருந்தால், முதல் ஒருநாள் போட்டியில் எப்படி ஏமாற்றமடைந்தேனோ, அதே நிலையில் மீண்டும் இருந்திருப்பேன். அணி வெற்றி பெற்றது உண்மையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
முதல் ஒருநாள் போட்டியில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்ததால், வெற்றி பெறுவது மிகவும் சவாலானதாக மாறியது. தனிப்பட்ட முறையில் அந்த தோல்விக்கு நான்தான் பொறுப்பு என உணர்கிறேன். இரண்டாவது போட்டியில் அணியில் உள்ள அனைவரும் நன்றாக விளையாடினோம். டெவால்ட் பிரேவிஸ் எந்த ஒரு அழுத்தமுமின்றி மிகவும் நன்றாக விளையாடினார். அவரது ஆட்டம் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது என்றார்.
தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 6) விசாகப்பட்டினத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.