ஐசிசியின் நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா இடம்பெற்றுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களில் ஒருவருக்கு அந்த மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதினை ஐசிசி வழங்கி வருகிறது.
அதன் படி, ஐசிசியின் நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வர்மா இடம்பெற்றுள்ளார். அவருடன் தாய்லாந்து வீராங்கனை திபட்சா புத்தவாங் மற்றும் ஐக்கிய அரபு அமீரக வீராங்கனை ஈஷா ஓஷாவும் இடம்பெற்றுள்ளனர்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் காயம் காரணமாக நாக் அவுட் போட்டிகளிலிருந்து விலகிய பிரதீகா ராவலுக்குப் பதிலாக ஷஃபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி உலகக் கோப்பையை முதல் முறையாக வெல்லவும் அவர் உதவினார்.
இந்திய அணிக்காக இறுதிப்போட்டியில் ஷஃபாலி வர்மா 78 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும், அவர் இறுதிப்போட்டியில் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முக்கியமான தருணத்தில் மாரிஸேன் காப் மற்றும் சூன் லூஸின் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.
தாய்லாந்து வீராங்கனை திபட்சா புத்தவாங் மற்றும் ஐக்கிய அரபு அமீரக வீராங்கனை ஈஷா ஓஷா இருவரும் ஐசிசியின் வளர்ந்து வரும் நாடுகளுக்கான மகளிர் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் மூவரில் ஐசிசியின் நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதினை வெல்லப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிக்க: ஆஷஸ் தொடர்: மூவர் அரைசதம்; ஆஸ்திரேலியா 44 ரன்கள் முன்னிலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.