ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆஷஸ்’ தொடரில் விளையாடி வருகிறது.
முதலிரண்டு போட்டிகளில் அபார வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, அடிலெய்டில் நடைபெற்ற மூன்றாவது ஆஷஸ் போட்டியிலும் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில் மீதம் 2 போட்டிகள் இருக்கும் நிலையில் 3-0 என ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றி ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துள்ளது.
இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் நான்காவது போட்டி கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான டிசம்பர் 26 ஆம் தேதி மெல்பர்னில் தொடங்கவிருக்கிறது. இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று(டிச.23) அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணியின் பிரதான கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் மூத்த சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் இருவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.
மூன்றாவது டெஸ்ட்டில் பௌண்டரியை தடுக்க முயன்று தொடை தசைநார் கிழிந்த நாதன் லயன், அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என்பதால், போட்டியில் இருந்து விலகியுள்ளார். பணிச்சுமை காரணமாக கேப்டன் பாட் கம்மின்ஸ் ஓய்வுக்காகப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
வெர்ட்டிக்கோ பிரச்சினையால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஸ்டீவ் ஸ்மித், இந்தப் போட்டியில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கம்மின்ஸுக்குப் பதிலாக டாட் மார்ஃபியும், லயனுக்குப் பதிலாக ஜேய் ரிச்சர்ட்சனும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி விவரம்
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பிரெண்டன் டக்கெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், டாட் மார்ஃபி, மைக்கேல் நெசர், ஜேய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.