நடப்பு விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் மூன்றாவது போட்டியில் விராட் கோலி விளையாடவுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிசிசிஐ-ன் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விஜய் ஹசாரே தொடரில் குறைந்தது இரண்டு போட்டிகளிலாவது விளையாட வேண்டும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி உள்பட பலரும் விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்று விளையாடினர்.
விஜய் ஹசாரே தொடரில் தில்லி அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் முதல் போட்டியில் 131 ரன்களும், இரண்டாவது போட்டியில் 77 ரன்களும் எடுத்தார். மேலும், இந்த தொடரின்போது, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
இந்த நிலையில், விஜய் ஹசாரே தொடரில் வருகிற ஜனவரி 6 ஆம் தேதி ரயில்வேஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் தில்லி அணிக்காக விராட் கோலி விளையாடவுள்ளதாக தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோஹன் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அடுத்த மாதம் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அந்த தொடருக்கு தன்னை மேலும் தயார்படுத்திக் கொள்வதற்காக விராட் கோலி, நடப்பு விஜய் ஹசாரே தொடரில் மூன்றாவது போட்டியில் விளையாடவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோஹன் ஜெட்லி கூறியதாவது: ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி விளையாடவுள்ளார். மூன்று போட்டிகளில் விளையாட தயாராக இருப்பதாக விராட் கோலி தெரிவித்திருக்கிறார் என்றார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற ஜனவரி 11 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.