ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபிக்கு இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் 4-5 நாள்களே இருக்கும் நிலையில், இந்தியாவின் துணை கேப்டன் ஷுப்மன் கில் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். மேலும், முதலிடத்தில் உள்ள பாகிஸ்தானின் பாபர் அசாமுக்கும் கில்லுக்கும் 5 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதால், கில் முதலிடத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா -இங்கிலாந்து அணிகள் ஒருநாள் தொடர், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் முத்தரப்பு தொடர், இலங்கை - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் ஆகிய ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஒருநாள் தொடருக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாபர் அசாம்(786 புள்ளிகள்), ஷுப்மன் கில்(781 புள்ளிகள்) இருவரும் முறையே முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.
கட்டாக்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (773 புள்ளிகள்), கில்லின் தொடர் ரன்குவிப்பால் ஒரு இடங்கள் சரிந்து மூன்றாவது இடத்துக்கு சரிந்துள்ளார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான ஸ்ரேயாஸ் ஐயர் தான் 2 அரைசதங்கள் விளாசியதன் மூலம் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர்களைத் தவிர்த்து பாகிஸ்தானின் ஃபக்கார் ஜமான் 13-வது இடத்தையும், நியூசிலாந்தின் வில்லியம்சன் 29-வது இடத்தையும், இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் 38-வது இடத்தையும், டெவான் கான்வே 40-வது இடத்தையும், ஜோ ரூட் 51-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பந்துவீச்சாளர்களில் ஆப்கன் வீரர் ரஷீத் கான் முதலிடத்தில் தொடர்கிறார். இந்தியாவின் ஜடேஜா 11-வது இடத்திலும், முகமது ஷமி 13-வது இடத்திலும் உள்ளனர். ஆல்-ரவுண்டர்களில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி எவ்வித மாற்றமுமின்றி முதலிடத்தில் நீடிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.